கல்வி அமைச்சு பள்ளிக்குச் சென்றது, 4 ஆசிரியர்களிடம் விசாரணை

இன்று, பினாங்கு மாநிலக் கல்வி இலாகா அதிகாரிகள், எம்.வசந்தபிரியா படித்து வந்த பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், நான்கு ஆசிரியர்களுடன் கலந்துபேசி உள்ளனர், அச்சம்பவம் தொடர்பான தகவல்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர் என்று நம்பகமான ஆதாரங்கள் கூறுகின்றன.

வசந்தபிரியாவின் உறவினர் ஒருவரும் கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து பேசியுள்ளார்.

“மாணவியின் உறவினர் மிகவும் கோபமாக இருந்தார், அந்த ஆசிரியரைப் பணிநீக்கம் செய்யுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்,” என மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை, கல்வி அமைச்சு அச்சம்பவத்தை விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிவடையும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணியில் இருப்பார் என்றும் கல்வி துணையமைச்சர் பி கமலநாதன் கூறியிருந்தார்.

இன்று, போலிசாரின் பலத்த காவலுக்கு இடையே, வசந்தபிரியாவின் இறுதி சடங்கில் சுமார் 1,000 பேர் கலந்துகொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பில், அப்பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் சங்கம் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

“பெற்றோர், ஆசிரியர் சங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, மாலை 3 மணிக்கு, இச்சம்பவம் தொடர்பான அண்மைய விவரங்களைப் பொது மக்களுக்கு அறிவிக்கும்,” என்று ஆதாரங்கள் கூறியுள்ளன.