RM27.5 மில்லியன் சதி – ‘டத்தோ ஶ்ரீ’ , ‘டத்தோ’ உட்பட அறுவர் கைது

கோலாலம்பூர் – பினாங்கு வட்டாரங்களில், RM27.5 மில்லியன் மோசடி தொடர்பான தங்கம் மற்றும் எண்ணெய் முதலீட்டில் கைதான 6 பேரில் ‘டத்தோ ஶ்ரீ’ மற்றும்  இரண்டு ‘டத்தோ’ க்களும் அடங்குவர்.

அக்டோபர் 2015 முதல் டிசம்பர் 2017 வரை, நாடு முழுவதிலும் இருந்து பெற்ற 193 புகார்களுக்குப் பின்னர், 42 முதல் 62 வயதுகுட்பட்ட 6 சந்தேக நபர்களைக் கைது செய்ததாக புக்கிட் அமான், வர்த்தகக் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குனர், அமர் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.

“கைதான சந்தேக நபர்களில், நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளரும் அடங்குவர். தங்கம் மற்றும் எண்ணெய் தாடைகள் முதலீடுகளின் வழி, ஒன்பது மாதக் காலங்களில் நல்ல வருவாய் கிடைக்குமெனக் கூறி, அவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

“இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க, தங்களுக்கு அரச பரம்பரை மற்றும் பிரமுகர்களின் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்,” என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமர் சிங் கூறினார்.

மேலும், சந்தேகநபர்களிடம் இருந்து, 8 ஆடம்பரக் கார்கள், 8 கைப்பேசிகள், 3 ஏடிஎம் கார்டுகள், நான்கு தங்கக் கட்டிகள், மூன்று விலைமதிப்புள்ள கைக் கடிகாரங்கள், ஐந்து காசோலை புத்தகங்கள் மற்றும் RM200,000 மதிப்புள்ள ரொக்கம் ஆகியவைக் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.