பாரிசானை எதிர்த்துப் போராடுங்கள் உங்களுக்குள்ளாக வேண்டாம், சிலாங்கூர் ஹராப்பானுக்கு மாட் சாபு நினைவுறுத்தல்

அமானா தேசியத் தலைவர் முகமட் சாபு, தேர்தல் சீட்டு பகிர்வு மீதான சண்டையை நிறுத்திவிட்டு, உண்மையான எதிரி பிஎன் மீது கவனம் செலுத்துமாறு சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பானைக் கேட்டுக்கொண்டார்.

“கலந்து பேசுங்கள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தாதீர்கள்,” என்று, பிகேஆர் அமானா இடையிலான உறவு தொடர்பாக, இன்று ஓர் அறிக்கையின் வழி மாட் சாபு வலியுறுத்தியுள்ளார்.

“ஹராப்பான் கட்சிகளிடையேயான கலந்துரையாடல்கள், மூடிய கூட்டங்களில் நடைபெறுவதை நான் விரும்புகிறேன்.

“பிரதான ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிடுவதை, அனைவரும் நிறுத்த வேண்டும்,” என அவர் அந்த  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“உள்கட்சி பேச்சுவார்த்தைகள் வழி, சிலாங்கூர் ஹராப்பானுக்குச் சிறந்த தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார் அவர்.

மேலும் அவர், ‘பி.என். அரசாங்கத்தை’ ஹராப்பான் எடுத்துக் கொள்ள உதவுவதற்கு, கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை, பொறுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

“நமது உண்மையான எதிரி அம்னோ- பிஎன்., வாருங்கள், வரவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்போம்,” என்று அவர் கூறினார்.

நேற்று சிலாங்கூர் ஹராப்பானின் நாற்காலி பகிர்வில் முரண்பட்ட கருத்துகள் வெளியாகின, பிகேஆர் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறிய வேளை, மற்ற மூன்று கட்சிகளும் அதற்கு நேர்மாறாக இல்லையென்றதால், அது பொது சண்டையாக வெடித்தது.

பிகேஆர் துணைத் தலைவர் ‘அமானா’வைப் ‘பொய்யர்கள்’ என்று விளிக்க, சிலாங்கூர் அமானா தலைவர், இஸாம் ஹாஷிம், அஸ்மின் அலியை ‘ஜோக்கர் ’ என்று பதிலுக்குக் கூறினார்.