கிட் சியாங்: இந்திராவை அவருடைய குழந்தையுடன் சேர்த்து வைக்க முடியாவிட்டால் ஐஜிபி பதவி விலக வேண்டும்

 

இந்திரா காந்தியை அவருடைய இளைய மகள் பிரசனா டிக்‌ஷாவுடன் சேர்த்து வைக்க முடியாவிட்டால், போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) முகமட் பூஸி ஹருண் பதவி துறக்க வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

தேவையான வளங்களை வைத்திருக்கும் போலீஸ் படை இந்திராவை அவருடைய மகளுடன் சேர்த்து வைக்க முடியவில்லை என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும் என்று தாம் நினைக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அரசமைப்புச் சட்டத்தை சுட்டிக் காட்டி, நாட்டின் மிக உயர்ந்த சட்டத்தை நிலைநிறுத்த முடியவில்லை என்றால் ஐஜிபி அப்பதவியில் இருக்கக்கூடாது என்று கிட் சியாங் வலியுறுத்தினார்.

இந்திராவை அவருடைய மகளுடன் சேர்த்து வைப்பது ஒரு கடினமான காரியம் என்று தாம் நினைக்கவில்லை என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் துணைப் பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் தாம் அவரை கேட்டுக்கொள்ளவதாகக் கூறினார்.

செய்தியாளர் கூட்டத்தில் கிட் சியாங்குடன் இந்திராவின் வழக்குரைஞர் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரனும் இருந்தார்.

பெடரல் நீதிமன்றம் இவ்வார தொடக்கத்தில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இதுவரையிலும் தமக்கு போலீசாரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திரா காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.