நஜிப் அவசரகாலம் பிரகடனம் செய்தால், தெருப் போராட்டம் வெடிக்கும், மகாதிர் கூறுகிறார்

 

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலை நிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அவசரகாலம் பிரகடனம் செய்யத் துணிந்தால், மக்கள் தெருவில் இறங்கி போராட முடியும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் முகம்ட் மகாதிர் இன்று கூறினார்.

பிரேசில் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மலேசியர்கள் அதிகமாக அச்சம் நிறைந்தவர்கள். அந்த நாடுகளில் மேற்கொண்ட பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கொடுத்த அழுத்தம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உயர்மட்டத் தலைவர்கள் பதவி துறந்தனர் என்றாரவர்.

ஆனால், மலேசியாவில் ஒரு பெர்சே பேரணியில்கூட அதிகமானவர்கள் கலந்துகொள்ள முன்வருவதில்லை. ஆபத்தை எதிர்கொள்ளவில்லை என்றால், வெற்றி பெற முடியாது. ஆகவே நாம் துணிச்சல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று மகாதிர் அறிவுறுத்தினார்.

“நஜிப் ஓர் அவசரகாலப் பிரகடனம் செய்தால், நாம் ஒவ்வொரு நாளும் வெளியில் சென்று அவசரகாலத்தை முடிவுக்கு கொண்டுவரவும் ஜனநாயகத்திற்கு மீண்டும் திரும்பவும் கோரலாம்”, என்றாரவர்.

பெர்டானா தலைமைத்துவ வாரியத்தில் இளைஞர்கள் கருத்தரங்கில் பேசிய மாகாதிர், “நான் இவ்வளதான் கூற முடியும். அரசியல்வாதிகள் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அவர்கள் அரசியல்வாதிகளை ஆதரித்தாக வேண்டும்.

“நாம் முழு முயற்சியுடன் செயல்படுவோம், ஆனால் நமக்கு மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது”, என்றார் மகாதிர்.

எனினும், 14 ஆவது பொதுத் தேர்தலில் ஹரப்பான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றால், அவசரகாலம் வழி அதிகாரத்தில் விடாப்பிடியாக ஒட்டிகொண்டிருக்க நஜிப் துணிய மாட்டார் என்று மகாதிர் மேலும் கூறினார்.