14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் காலிட் இப்ராகிம்முக்கு பாஸ் ஓர் இருக்கையை நிபந்தனையின்றி அளிக்கிறது

 

14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் சிலாங்கூரில் போட்டியிட பாஸ் ஓர் இருக்கையை, அதுவும் நிபந்தனை ஏதுமின்றி, அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

காலிட்டுக்கு ஓர் இருக்கை அளிக்கப்படும். அதற்காக அவர் பாஸ் கட்சியில் சேர வேண்டும் என்று கோரப்படாது என்று மாநில பாஸ் ஆணையர் சாலேஹென் முகீ கூறுகிறார். பாஸ் மற்றும் அம்னோ ஆகிய இரண்டையும் ஆதரிப்பதாக காலிட் இப்ராகிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

காலிட் இப்போது பாஸில் சேர வேண்டிய தேவை இல்லை. இப்போதைக்கு அது அவருக்கு சௌகரியமானதாக இருக்காது என்றாரவர்.

அவர் பாஸின் கீழ் அல்லது சுயேட்சையாக போட்டியிட விரும்பினாலும் நாங்கள் அவரை ஆதரிப்போம். நாங்கள் அவருக்கு பொருத்தமான ஒரு தொகுதியைத் தேர்வு செய்வோம் என்று சாலேஹென் மேலும் கூறினார்.

காலிட் எப்போதுமே, பிகேஆரின் சிலாங்கூர் மந்திரி பெசராக இருந்தபோதும்கூட, பாஸுடன் நல்லுறவு கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.

அம்னோவைவும் ஆதரிப்பதாக காலிட் கூறுவது ஒரு பிரச்சனை அல்ல. அது ஆதரவு பெறுவதற்கான ஒரு தந்திர நடவடிக்கை என்றாரவர்.

காலிட்டுக்கு அம்னோவில் அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் பாஸுக்கு வாக்களிக்க இழுக்கும் ஒரு வியூகமாக தாம் கருதுவதாக கூறிய சாலேஹென், பாஸுக்கு மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது என்றார்.