மகாதிர் இந்தியர்களின் ஆதரவை நாடுகிறார்

முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று இந்தியச் சமுதாயத்தின் ஆதரவை நாடும் நடவடிக்கையை மேற்கொண்டார். தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியச் சமுதாயத்திற்கு உதவப் போவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பதில் இந்தியச் சமுதாயத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கிள்ளானில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

“நான் மீண்டும் ஒரு முறை பிரதமரானால் நாட்டிலுள்ள மக்களை நன்கு பராமரிப்பேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்.

“நிச்சயமாக நான் இந்திய சமுதாயத்தின் தேவைகள் மீது கவனம் செலுத்துவேன். அது நான் அளிக்கும் வாக்குறுதி. நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்பதை நான் அறிவேன். அதனால் அளிக்கப்பட்ட வாக்குறுதி கைகூடும்”, என்று மகாதிர் மலேசிய இந்தியர் ஆலோசனை மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கூறினார்.

மகாதிர் அம்மன்றத்தின் புரவலர் ஆவார். தமக்கு இந்தியச் சமுதாயத்துடன் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பிஎன்னுக்கு எதிராக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

“மலாய்க்காரர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்று இந்த அரசாங்கம் நம்புகிறது, ஏனென்றால் மலாய்க்காரர்களுக்கு எளிதில் இலஞ்சம் கொடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“நான் அப்படி நினைக்கவில்லை. இம்முறை மலாய்க்காரர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்”, என்று பெர்சத்துவின் தலைவரான மகாதிர் கூறினார்.

மலாய்க்காரர்கள் அவ்வாறு செய்ததும், சீனர்களும் இந்தியர்களும் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்கும் தரப்பினரை ஆதரிப்பார்கள் என்று நம்புவதோடு எதிர்பார்க்கிறேன் என்றாரவர்.

“நாட்டின் மூன்று இனங்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலானது இந்தியச் சமுதாயம். ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அது மிக முக்கியமான பங்கை ஆற்றவிருக்கிறது.

“அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் போட்டியாளர்கள் இனம் அல்லது கட்சி அடிப்படையில் பிளவுபட்டிருக்கையில், வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குகள் இந்தியர்களுடையதாக இருக்கும்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

மகாதிர் அவருடைய 22 ஆண்டுகால ஆட்சியில் இந்தியர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மகாதிருடன் ஒப்பிடும் போது தாம் இந்தியச் சமுதாயத்திற்கு அதிகமாகச் செய்துள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக்கூட கூறியிருக்கிறார்.