குழந்தையை வளர்ப்பதில் இஸ்லாமிய ஆலோசனைகளை ஏற்க இந்திரா தயார்

குழந்தைகள் மத மாற்று பிரச்சனையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய போதிலும், இஸ்லாமிய விவகாரங்களில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற தான் தயாராக இருப்பதாக இந்திரா காந்தி கூறியுள்ளார்.

இளைய மகள் பிரசன்னா டிக்ஸாவை, இஸ்லாமியக் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பி வைக்கலாமா என்று கேட்டதற்கு, அம்மதம் தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

“அதுபற்றி எல்லாம் எங்களுக்கு ஏதும் தெரியாது, ஆக யாராவது எங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும், சூழலை நாங்கள் புரிந்துகொள்ள.

“பிரசன்னாவைச் சந்தித்த பிறகு, என்ன செய்யலாம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள அது சிறந்ததாக இருக்கும் என நான் நினைக்கிறேன்,” என்று இந்திராகாந்தி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிரசன்னாவைக் காப்பாற்ற, அந்தப் பெண் பொருத்தமானவரா என்று, மலேசிய உலாமா சங்கம் (பியுஎம்) ஓர் அறிக்கையின் வழி கேட்டிருந்தது தொடர்பில் இந்திரா அவ்வாறு பதிலளித்தார்.

ஒன்பது வயதான பிரசன்னா, தாயின் பராமரிப்பில் இருந்தால், இஸ்லாம் மீது அவர் நிலையான விசுவாசம் கொண்டிருப்பார் என்பதற்கு, இந்திராவால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பியுஎம் தலைவர் அப்துல் ஹலிம் அல்துல் காடிர் தெரிவித்தார்.

“யாரால் உத்தரவாதம் கொடுக்க முடியும், அக்குழந்தை இன்னும் சிறியவள்.

“அவரின் உத்தரவாதத்தை (வாய்மொழி) யார் நம்புவது? இஸ்லாம் அல்லாத ஒருவரால் இஸ்லாமிய சூழலில் எப்படி குழந்தையை வளர்க்க முடியும்? இறை வணக்கம், சுகாதாரம், உணவு, நீர் எப்படி?

“அவர் (இந்திரா) இஸ்லாம் பற்றி மட்டும்தான் சொல்கிறார், ஆனால் பிரார்த்தனை, பாங் (ஆஷான்), அது பற்றி அவருடையத் தலையில் இல்லை.

“எப்படி நிரூபிப்பது (குழந்தை தொடர்ந்து முஸ்லீமாக இருப்பதை), இஸ்லாமிய சூழல் இல்லாத வீடு எப்படி இஸ்லாத்தைக் காப்பாற்றும், எப்படி பிரார்த்தனை செய்வது, சாப்பிடுவது, குடிப்பது, பாதுகாப்பாக இருக்க முடியுமா? சிறுபிள்ளை வேறு,” என்று மலேசியாகினியிடம் கூறினார்.

குழந்தை குழப்பம் அடையக்கூடாது

தற்போது பிரசன்னா தனது தந்தை, முகமட் ரிட்டுவான் அப்துல்லாவின் பராமரிப்பில் இருக்கிறார். இந்திராவின் முன்னாள் கணவர், தனது மூன்று குழந்தைகளையும் – தேவி தர்ஷினி, பிரசன்னா, கரன் டினிஸ் – 2009-ல் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்.

இருப்பினும், தர்ஷினி மற்றும் கரன் இருவரும் இந்திராவுடனேயே உள்ளனர், அப்போது 11 மாதங்களே நிரம்பிய பிரசன்னாவை ரிட்டுவான் வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து, இந்திரா பிரசன்னாவைச் சந்தித்ததே இல்லை.

பியுஎம்-இன் சந்தேகங்கள் குறித்து கேட்டபோது, அதற்காகதான் அவர்களின் ஆலோசனையைக் கேட்க தான் தயாராக இருப்பதாக இந்திரா தெரிவித்தார்.

“இஸ்லாமிய போதனைகள் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது உண்மைதான், ஆனால், யாராவது எங்களுக்கு வழிகாட்டினால், அதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார் அவர்.

பிரசன்னாவின் வளர்ப்பைக் கண்காணிக்க, இஸ்லாமிய அதிகாரிகள் அவரைச் சந்திக்க அனுமதிப்பீர்களா என்று கேட்டதற்கு, தன் குழந்தையை மீண்டும் சந்திப்பதே தனக்கு முக்கியம் என்று இந்திரா பதிலளித்தார்.

“பிரசன்னாவை விருப்பத்தை நான் மதிப்பேன். தற்போது நடப்பது என்னவென்றே அவருக்குத் தெரியாது.

“இதுவரை அவர் தன் அப்பாவோடு இருந்தார், அவரின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

“சுற்றுச்சூழல் திடீர் மாற்றங்களில் அவர் குழப்பமடைவதை நான் விரும்பவில்லை.

“அவள் முஸ்லிமாக தொடர்ந்து இருக்க விரும்பினால், எனக்கு கவலை இல்லை, ஆனால் ஓர் இந்து தாயாக, எல்லாவற்றிலும் சிறந்தவற்றை நான் அவளுக்குக் கற்றுக்கொடுப்பேன்.

“அவள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால், எனக்குக் கவலை இல்லை, ஆனால், ஒரு தாயாக நான் என் பொறுப்புகளை நிறைவேற்றுவேன்,” என்ற அவர், அது இந்து மதத்தின் அடிப்படை போதனைகளைச் சொல்லிகொடுப்பது உட்பட என்று மேலும் கூறினார்.

இருப்பினும், ஓர் இஸ்லாமிய பெண்ணாக தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில், பிரசன்னாவைத் தடுக்கமாட்டார் என்றும் கூறினார்.

பிரசன்னா, பிரார்த்தனை உட்பட, விரும்பியதைச் செய்ய அவருக்குச் சுதந்திரம் உண்டு என்றார் இந்திரா.

“அவர் குழப்பிக் கொள்ளவதை நாங்கள் விரும்பவில்லை, பிரசன்னாவுக்கு அது எளிதானதாக இருக்க முடியாது, ஏனெனில் நாங்கள் முற்றிலும் வேறுபட்ட போதனையைப் பின்பற்றுகிறோம்,” என்று அவர் கூறினார்.