புவா: பேங்க் நெகரா சந்தை விலைக்கு அரசாங்க நிலத்தை வாங்கியது ஏன்?

பேங்க்  நெகாரா  ரிம2பில்லியன்  கொடுத்து  அரசாங்க  நிலத்தை   வாங்கியது   ஏனென்று  வினவும்   டிஏபி  எம்பி  டோனி  புவா,  அந்த   நிலக்  கொள்முதல்    1எம்டிபி  நிறுவனத்தை    மீட்டெடுக்கும்   முயற்சியா  என்றும்   கேட்டுள்ளார்.

கல்விக்கழகம்   கட்டுவதற்குத்தான்   நிலம்    என்றால்    வணிகம்   நோக்கமற்ற    ஒரு  திட்டத்துக்குப்  பயன்படப்போகும்  நிலத்தை  மத்திய   வங்கி   சந்தை  விலைக்கு  வாங்கியது    ஏன்    என்றவர்   கேள்வி   எழுப்பினார்.

“பொதுப்  பல்கலைக்கழகத்துக்கு  வாங்கப்படும்   நிலங்களுக்குப்  பெயரளவு  விற்பனைத்  தொகை  நிர்ணயிக்கப்படுவதுதான்  வழக்கம்.  ஆனால்,  பேங்க்  நெகராவோ  ஒரு  சதுர  அடிக்கு   ரிம823  என்ற  விலையில்  அந்த  நிலத்தை   வாங்கியுள்ளது.

“இங்குதான்    ஒரு     கேள்வி     எழுகிறது.  பேங்க்  நெகாரா  கவர்னர்  (முகம்மட்  இப்ராகிம்)  பெயரளவுத்   தொகைக்கு  விற்குமாறு   ஏன்   கேட்டுக்கொள்ளவில்லை? கட்டப்போவது   ஒரு  கல்விக் கழகம்.  வர்த்தக  மையம்  அல்லவே.

“1எம்டிபிகூட   500  ஏக்கருக்கு  மேற்பட்ட   நிலங்களை   வணிக   நோக்கத்துக்காக  வாங்கியபோது   பெயரளவுத்   தொகைதான்   கொடுத்து  வாங்கியது    அல்லது   தள்ளுபடி  விலையில்    வாங்கியது.

“இந்த  மொத்தக்  கொள்முதலும்   பேங்க்  நெகாராவின்  கஜனாவில்  கைவைக்கும்   முயற்சியோ   என்று   மலேசியர்கள்  சந்தேகித்தால்   அதற்காக   அவர்களைக்  குறை  சொல்ல   முடியாது”,  என  புவா  இன்று  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

1எம்டிபி    அபு   டாபி  அனைத்துலக  பெட்ரோலிய  முதலீட்டு   நிறுவன(ஐபிஐசி)த்துக்குக்  கொடுக்க  வேண்டிய   கடன்  பாக்கியை    கடந்த   ஆண்டு   டிசம்பர்   27-இல்   கொடுத்தது.  அந்த   நேரத்தில்தான்  பேங்க்  நெகாரா  நிலம்  வாங்கியது.

“நிலக்  கொள்முதலும்     ஐபிஐசிக்குப்  பணம்  கொடுக்கப்பட்டதும்   ஒரே   நேரத்தில்  நிகழ்ந்துள்ளது  கவனிக்கத்தக்கது.

“1எம்டிபி   ஐபிஐசிக்குக்  கொடுத்த  பணம்    எங்கிருந்து   வந்தது   என்று  ஊடகங்கள்,  ஆய்வாளர்கள்,  விமர்சகர்கள்,   எம்பிகள்   எழுப்பிய   கேள்விக்கு  1எம்டிபி,  நிதி  அமைச்சு  இரண்டுமே   பதிலளிக்க  மறுத்து  விட்டன”,  என்று   புவா  குறிப்பிட்டார்.

இக்கேள்விக்கு  முறையான   பதில்கள்  கிடைக்கும்வரை  1எம்டிபியை  மீட்டெடுக்க   நிதி  அமைச்சு   பேங்க்  நெகாராவைப்  பயன்படுத்திக்  கொண்டிருக்கிறது  என்றும்   அதற்கு   மத்திய   வங்கியும்   இடமளித்துள்ளது   என்றும்  மலேசியர்கள்  நினைத்தால்   அதற்காக   யாரும்   அவர்களைக்  குறை  சொல்ல  முடியாது  என்றாரவர்.