அஸ்மின்: யார்தான் என்னைச் சாடவில்லை?

புழுதிவாரித்  தூற்றுவார்  தூற்றட்டும்,    தலைவராக   இருப்பதால்    பொறுமை  காக்க   வேண்டியுள்ளது   என்கிறார்   சிலாங்கூர்  மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்   அலி.

“யார்தான்  தூற்றவில்லை?  உத்துசான்  மலேசியா,  டிவி3……

“ஆனால்,  ஒரு  தலைவராக  இருப்பதால்   பொறுமை  காக்க வேண்டியுள்ளது,  அடங்கிப்  போக   வேண்டியுள்ளது”,  என  அஸ்மின்  இன்று   ஷா  ஆலமில்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

சிலாங்கூர்  பக்கத்தான்  ஹரபானில்   இட  ஒதுக்கீடு  மீதான   சர்ச்சை   குறித்து   அமனாவும்   டிஏபியும்   குறைகூறியிருப்பதற்கு    எதிர்வினையாக   அவர்   அவ்வாறு   கூறினார்.

மாநில   இட  ஒதுக்கீடு  மீதான   பேச்சுகள்   குறித்து   அமனா   கூறுவது  பொய்யென்று   அஸ்மின்  சொல்லப்போக  சிலாங்கூர்  அமனா  தலைவர்   இஸ்ஹாம்   ஹஷிம்   அஸ்மினை  ஒரு  “ஜோக்கர்” எனத்  தூற்றினார்.

இன்னொரு  பக்கம்   சிலாங்கூர்   டிஏபி   தலைவர்   ரோனி  பியு,      சிலாங்கூர்  பக்கத்தான்  ஹரபானுக்குத்   தலைவராக  இருக்கத்   தகுதியற்றவர்  என்று  அஸ்மினை  முகநூலில்    சாடியிருந்தார்.

அஸ்மின்,  பிப்ரவரி  7-இல்  மாநில  இட  ஒதுக்கீடு  மீது   பேச்சுகள்   நடத்தப்படும்   என்றும்   அதற்கான  கடிதங்கள்    ஹரப்பான்   கட்சிகளுக்கு  நேற்றே   அனுப்பப்பட்டு  விட்டதாகவும்    தெரிவித்தார்.

“பக்கத்தான்   ஹரபான்   தலைவர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்  ஆலோசனைப்படி   இந்தக் கூட்டம்   நடைபெறுகிறது”,  என்றார்.