அரசாங்கம் ஒரு சிசிடிவி கேமராவுக்கு ரிம150 ஆயிரம் செலவிட்டதே, அது எப்படி? பினாங்கு எக்ஸ்கோ கேட்கிறார்

பினாங்கு  மாநில  அரசு  பெருஞ்செலவில்  சிசிடிவி   கேமராக்களைப்  பொருத்தியிருப்பதாக   மசீச  குற்றஞ்சாட்டியதற்கு   எதிர்வினையாற்றிய   மாநில    ஆட்சிக்குழு  உறுப்பினர்   செள  கொன்  இயோ,   கூட்டரசு   அரசாங்கம்   பொருத்திய  கேமராக்கள்  ஒவ்வொன்றுக்கும்  ரிம157,800  செலவிடப்பட்டுள்ளதே,   அது  மாநில   அரசு  கொடுத்த   விலையைவிட  இரு  மடங்காயிற்றே  என்று   பதிலடி  கொடுத்துள்ளார்.

2015-இல்   வீடமைப்பு, ஊராட்சி  அமைச்சு  பினாங்கு   தீவில்   ரிம5.049 மில்லியன்   செலவில்  32 கேமராக்களைப்   பொருத்தும்   திட்டத்தை  அமல்படுத்தியது  என  செள   கூறினார்.

“அதன்படி  பார்த்தால்   ஒரு   கேமரா  விலை  ரிம157,800   என்றாகிறது.

“சிசிடிவி   திட்டத்துக்கு   பினாங்கு  மாநகர்  மன்றம் (எம்பிபிபி)   செலவிட்டதைவிட  அமைச்சு  அதிகம்   செலவிட்டது  ஏன்   என்று   அது  விளக்க  முன்வருமா?”  என்றவர்  வினவினார்.

எம்பிபிபி       கேமிராக்கள்     ஒவ்வொன்றின்   விலை   ரிம59,707   என்றும்  அது  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம்    கேமிராக்களுக்குச்    செலவிட்ட  தொகையைவிட   ஐந்து  மடங்கு   அதிகம்   என்றும்   பினாங்கு  மசீச   கூறிக்கொண்டதற்கு   பினாங்கு   டிஏபி  தலைவர்   அவ்வாறு   கூறினார்.