துங்கு அப்துல் ரகுமானின் நினைவு  மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

ஞாயிறு நக்கீரன், பெப்ரவரி 8, 2018 –  “சுதந்திர மலாயாவில் அனைத்து சமூக மக்களுக்கும் எதிர்காலம் நலமாகவும் வளமாகவும் அமையும்” என்று உறுதி மொழியளித்து நாட்டின் விடுதலைப் பிரகடனத்தை ஏழு முறை முழங்கிய தேசத் தந்தை மேதகு துங்கு அபுதுல் ரகுமான் அவர்களுக்கு இன்று(பிப்ரவரி 8) பிறந்த நாள்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்னம், மலாயாவின் வட மண்டலத்து கோலா மூடா மாவட்டத்தின் அதிகாரியாக இருந்தபோது பொதுமக்களின் நலன்களைப் பேணிக் காப்பதில் துங்கு அதிக அக்கறை காட்டினார். அக்காலத்தில், சுங்கை பட்டாணியில் இருந்த அவருடைய இல்லம், பொது மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரைக் கண்டு தங்களின் நிறை-குறைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளலாம். பொது மக்கள் ஏதும் குறையை சுட்டிக் காட்டினால், மனுநீதி சோழனைப் போல உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அப்பொழுதே அழைத்து குறைகளை நிவர்த்தி செய்ய பரிந்துரை செய்வார்.

கிராமங்களுக்குச் சென்றால் சாமான்ய மக்களின் வீடுகளில் குடும்ப உறுப்பினரைப் போல உணவைக் கேட்டு விரும்பி உண்பார். அந்தக் கால மன்னர் பெருமக்கள் நகர் வலம் வருவதைப் போல இதற்காகவே தோட்ட-கிராமப்புற வலம் மேற்கொண்டார் துங்கு.

அதைப்போல, அரச பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும்,  தகுதி பார்க்காமல் பொதுமக்களுடன் சரிசமமாக அமர்ந்து துங்கு பழகுவதை அனைவரும் அதிசயமாகப் பார்த்தனர். நாடு விடுதலை பெற்ற பின் பிரதமராக பதவி ஏற்று நாட்டை வழிநடத்திய காலத்திலும், மக்களுடன் இயல்பாக கலந்துறவாடும் தலைவராக விளங்கிய துங்கு அப்துல் ரகுமானின் நினைவு மலேசிய மக்கள் மனதில் எஞ்ஞான்றும் நிலை கொண்டிருக்கும்.