பகோவை மீண்டும் கைப்பற்றுவோம், நஜிப் சூளுரைத்தார்

 

நாடு முன்னேற்றகரமானதாக இருப்பதை உறுதிசெய்ய மக்கள், குறிப்பாக பெல்டா குடியேற்றக்காரர்கள், பிஎன் மற்றும் அம்னோவை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று மக்களுக்கு நினைவூட்டினார்.

நாம் மற்றவர்களை நம்பி இருக்கும் கட்சிகளின் தயவில் இருக்கக்கூடாது. நாம் நமது நம்பிக்கையை ஓர் உண்மையான கட்சியின்மீது வைக்க வேண்டும், அக்கட்சி அம்னோ என்றார் நஜிப்.

அம்னோ இருக்கிறவரையில், மலாய்க்காரர்கள் மற்றும் இதர சமூகங்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். அதோடு நமது நாடும் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்று மாஒகில் பெல்டா திட்டத்தில் பேசுகையில் நஜிப் பகோ மக்களிடம் கூறினார்.

அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், ஜோகூர் மந்திரி பெசார் முகமட் காலெட் நோர்டின் மற்றும் பெல்டா தலைவர் ஷாரிர் அப்துல் சாமாட் ஆகியோரும் இருந்தனர்.

அம்னோவின் 3.5 மில்லியன் உறுப்பினர் தமக்கு ஆதரவாக இருக்கவில்லை என்றால் தாம் பிரதமராக இருந்து நாட்டிற்கு மாற்றத்தை கொண்டுவருவது சாத்தியமில்லை என்று நஜிப் மேலும் கூறினார்.

பெயர் குறிப்பிடாமல், இரண்டு முன்னாள் அம்னோ தலைவர்கள் எதிர்க்கட்சி டிஎபி மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் டிஎபியுடன் சேர்ந்து கொண்டு அம்னோவுக்கு துரோகம் செய்துள்ளனர் என்று கூறிய நஜிப், 22 வருட காலம் அம்னோவின் ஆதரவோடு பிரதமராக இருந்தவர் இன்று அம்னோவை அழிக்க விரும்புகிறார். அவர் டிஎபியின் நண்பராகி விட்டார் என்றார்.

அடையமுடியாததை அடைய டிஎபி மகாதிரை பயன்படுத்துகிறது; முகைதினை மகாதிர் பயன்படுத்துகிறார். இருவரையும் டிஎபி பயன்படுத்தி மலாய்க்காரர்களின் வாக்குகளைக் குறைக்க அது முயல்கிறது என்று நஜிப் மேலும் கூறினார்.

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து அதன் சொந்தக்காலில் நிற்க முடியாது. அதனால்தான் அது டிஎபியுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றாரவர்.

முகைதின் யாசின் வசமிருக்கும் பகோ நாடாளுமன்ற தொகுதியை அம்னோ மற்றும் பிஎன் மீண்டும் கைப்பற்ற வேண்டும். அம்னோவும் பிஎன்னும் ஆட்சியில் இருக்கும்வரையில் பகோ தொடர்ந்து முன்னேற்றமானதாக இருக்கும் என்று கூறிய நஜிப், நாம் தொடர்ந்து பகோ தேர்தல் அறிக்கையை அமல்படுத்துவோம் என்றார்.