5 நாடாளுமன்றம், 12 சட்டமன்றங்களில் பி.எஸ்.எம். போட்டி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கருத்துப்படி, இது இறுதி பட்டியல் ஆகும், ஆனால் பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர் அல்லாதவர்கள், பின்னர் அறிவிக்கப்படுவர் என்றார்.

பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட விரும்பும் யாரையும் நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அவர்கள் எங்களின் 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் : தங்கள் சொத்துகளைப் பொதுவில் அறிவிக்க வேண்டும், ஏமாற்று அரசியலில் ஈடுபடக்கூடாது , தாங்கள் போட்டியிடவிருக்கும் தொகுதியில் மக்கள் சேவை மையம் அமைக்க வேண்டும் என அருட்செல்வன் மேலும் கூறினார்.

பி.எஸ்.எம். நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் : பஹாங், கேமரன் மலை -பா.சுரேஸ்குமார், பேராக், சுங்கை சிப்புட், – டாக்டர் தே. மைக்கல் ஜெயக்குமார், பத்து காஜா – குணசேகரன் , சிலாங்கூர், சுபாங் – ஆ. சிவராஜன், உலு லங்காட் – எஸ்.அருட்செல்வன் ஆகியோர்.

சட்டமன்ற வேட்பாளர்கள் : பேராக்கில் ஜெலாப்பாங் – மு.சரஸ்வதி, துரோனோ – ஏண்டி சின், புந்தோங் – ராணி இராசையா, மெங்கிலம்பூ – சின் குவை லியோங், மாலிம் மாவார்- கே.எஸ்.பவாணி , சிலாங்கூரில் செமிஞ்சே – நிக் அஜிஸ் அஃபிக் அப்துல், புக்கிட் லஞ்சாங் – வி.செல்வம், கிள்ளான் துறைமுகம் – பெட்ரிக் ஷான், ஶ்ரீ முடா – அப்துல் ரசாக் இஸ்மாயில், கோத்தா டாமான் சாரா – டாக்டர் நசீர் ஹசிம் , பாஹாங்கில் ஜெலாய் – முகமட் நோர் அயாட், கிளந்தானில் கோத்தா லாமா – கைருல் நிஷாம் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்களில் ரசாக் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் பி.எஸ்.எம். உறுப்பினர்கள். ஓதாய் ரிஃபோமிஸ் இயக்கத்தின் உறுப்பினரான ரசாக், ஶ்ரீ மூடா சட்டமன்றத்திற்குப் போட்டியிட உள்ளார்.

செய்தியாளர்களிடம் வழங்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் நசீர் ஹசிம்மின் பெயர் இருந்தபோதும், வேட்பாளர் அறிவிப்பின் போது, அவர் மேடையில் தோன்றவில்லை.

இதுகுறித்து கேட்டபோது, “நாசீர் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறார், ஆனால் கோத்தா டாமான்சாராவில் அவர் போட்டியிட வேண்டும் என கட்சி விரும்புகிறது. ஆக, ஏதாவது மாற்றம் இருந்தால், நாங்கள் பிறகு அறிவிப்போம்,” என்று டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.