பெர்சே : தேர்தல் மோசடிகளைத் தோற்கடிக்க வாக்களியுங்கள்

14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தூய்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்கான கூட்டணி (பெர்சே) தேர்தல் மோசடிகளைத் தோற்கடிக்கும் முயற்சியாக அனைத்து மலேசியர்களும் வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுத்து, இன்று தனது புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, காப்பி கடைகளில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் வழி, நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வரவிருக்கும் ஜிஇ-ல் வாக்களிக்கும் முக்கியத்துவம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கவே இப்பிரச்சாரம் என தனது உரையில் கூறினார்.

இரண்டு ஜிஇ மற்றும் நான்கு தெரு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, பெர்சே இப்பொழுது நாட்டில் மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாக உள்ளது என்று கூறினார். நாட்டில் மாற்றங்களை உறுதிப்படுத்துவதற்குப் பெர்சே உந்துதல் தருவதான ஒன்று என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“நம்மால் மீண்டும் ஒருமுறை செய்ய முடியும், அனைத்து சக்திகளையும் கண்டிப்பாக ஒன்றிணைக்க வேண்டும்,” என்று ‘ஒன்றுபட்ட சக்தி, மோசடிக்குத் தோல்வி’ எனும் பிரச்சாரத்தின் சுலோகத்தை அவர் குறிப்பிட்டார்.

வாக்களிக்கும் பிரச்சாரம் மட்டுமின்றி, சிலாங்கூர் மாநிலத்தில் தேர்தல் எல்லை வரையறை மறுபரிசீலனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தல் மற்றும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளையும் பெர்சே தொடர்ந்து செய்துவரும் என்றும் மரியா கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில், வான் அஷிசா, தியான் சுவா, மாட் சாபு போன்ற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் கலந்துகொண்டனர்.