‘பிஎன் பொய் சொல்ல முடியாது, தேர்தல் செயல்முறை மிகவும் இறுக்கமானது’

வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மோசடிகள் நடக்கும் என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் மறுத்தார்.

தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அமைப்பு, அதை அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

“தேர்தல் நடைமுறை மிகவும் இறுக்கமாக இருப்பதால், நம்மால் பொய் சொல்ல முடியாது. நாம் ஏமாற்றி இருந்தால், தற்போதய சிலாங்கூர் அரசாங்கம் கூட சட்டவிரோதமானதுதான். சிலாங்கூர், பினாங்கு மற்றும் கிளந்தானை பிஎன் இழந்திருக்காது.

“நாங்கள் பொய் சொல்லவில்லை, மக்களிடம் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே நாம் அரசாங்கத்தை அமைக்கிறோம்,” என்று இன்று கம்போங் உலு ச்சோவில் நடந்த ‘4B மலேசிய இளைஞர் இயக்க’ விழா துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

10,000 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில் பேசிய நஜிப், தேசியப் பாதுகாப்பு சட்டம் (இசா) மற்றும் ‘ஒப்பராசி லாலாங்’ (ஓப்ஸ் லாலாங்) மூலம் இளைஞர்களை இலக்கு வைத்து தாக்கிய டாக்டர் மகாதிரின் நடவடிக்கையை நஜிப் விமர்சித்தார்.

“நான் பிரதமரான பின்னர், இசா சட்டத்தை அழித்தேன், இளைஞர்களின் பேச்சுரிமையை நான் நசுக்க மாட்டேன்.

“”நாட்டு மக்கள் விருப்பத்தை நாம் பின்பற்றுகிறோம், இளைஞர்கள் சுதந்திரமாக கருத்துகூற நான் அனுமதிக்கிறேன். முன்பு, விமர்சனம் செய்தால் இசா சட்டம் பாயும், ஓப்ஸ் லாலாங்கில் மூலம் கைது செய்யப்படுவீர்கள்,” என்று நஜிப் பேசினார்.

தேசிய உருமாற்றம் 2050 (தி.என்.50) வழி, இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பல நல்ல திட்டங்களை வகுத்துள்ளதாகவும் நஜிப் தெரிவித்தார்.

“அரசாங்கத்தைத் தொடர்ந்து பி.என். நிர்வகித்தால், இளைஞர்களின் கனவுகளை நம்மால் நிறைவேற்ற முடியும்,” என்றும் நஜிப் நம்பிக்கை தெரிவித்தார்.