பாலியல் துன்புறுத்தல் – #உண்டி ரோசாக் ஆர்வலர் போலிஸ் புகார் செய்தார்

#உண்டி ரோசாக் பிரச்சார ஒருங்கிணைப்பாளர், மரியாம் லீ, தனக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, இன்று காலை, உலு கிள்ளான் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

பேஸ்புக் மலேசியா கெக்ஸ்-இல் இடம்பெற்ற, #உண்டி ரோசாக் கலந்துரையாடல் மன்றத்தில், அவரின் பங்கேற்பைக் காட்டிய வீடியோ காட்சிகளிலுள்ள அனைத்து கருத்துகளையும் வாசித்ததாக மரியாம் தெரிவித்தார்.

தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இந்தப் போலிஸ் புகாரைச் செய்ததாக மரியாம் தெரிவித்தார்.

“என் கருத்துக்களுடன் ஒத்துபோகாத பொதுமக்களால், எனக்கு அச்சுறுத்தல்களும் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.

“இது மிகவும் தீவிரமான பிரச்சனை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல்ரீதியான அச்சுறுத்தல்களால் நான் மிகவும் அவமானப்பட்டுள்ளேன்.

“நான் சாதாரண ஒரு மலேசிய குடிமகள், ஒரு கலந்துரையாடலில் சுதந்திரமாக என் கருத்துகளை முன்வைத்ததால், நான் பொது மக்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ளேன், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது,” என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் போலிஸ் விசாரணையை மேற்கொள்கிறதா எனக் கேட்டதற்கு, போலிஸ் உடல் அச்சுறுத்தல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் வழக்கை விசாரிப்பதாக மரியாம் கூறினார்.

அத்தாக்குதல்களை மேற்கொண்ட பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களை மரியாம் சாடினார். அதேசமயம், அதுதொடர்பில் ‘வாய்மூடி கிடக்கும்’ ஹராப்பான் தலைவர்களையும் அவர் விமர்சித்தார்.

இருப்பினும், மரியாமிற்கு ஆதரவாக குரல் கொடுக்க சில தலைவர்கள் பின்னர் முன்வந்தனர்.