முகைதின்: ஹரபான் நிகழ்வில் அம்னோ குண்டர்கள் அட்டகாசம்

வார  இறுதியில்   ஜோகூரில்  பக்கத்தான்  ஹரபான்  நிகழ்வு   ஒன்றில்   புகுந்து  அட்டூழியம்  புரிந்தவர்களை   “அம்னோ   குண்டர்கள்”  என   பெர்சத்து  தலைவர்   முகைதின்   யாசின்   வருணித்தார்.

“சீனப்  புத்தாண்டை  ஒட்டி   நடத்தப்பட்ட   எங்கள்  நிகழ்வு ஒன்றில்      அட்டூழியம்  செய்த   அம்னோ/பிஎன்   குண்டர்களின்    செயலைக்  கண்டித்து   ஜோகூர்  பக்கத்தான்  ஹரபான்   அறிக்கை  ஒன்றை   வெளியிட்டுள்ளது”,  என்றாரவர்.

விழாக்  காலத்தை  ஒட்டி   மெண்டரின்   ஆரஞ்சுகளை   மக்களிடையே    விநியோகம்   செய்வதற்காக   பக்கத்தான்  ஹரபான்  குழு   அங்கு   சென்றிருந்தது.

கடந்த     சனிக்கிழமை     ஜோகூர்  பாரு  கம்போங்  பக்கார்  பத்துவில்  நடைபெற்ற   அந்நிகழ்வில்    டிஏபி    நாடாளுமன்றத்   தலைவர்   லிம்  கிட்  சியாங்   உள்பட  பலர்   கலந்து   கொண்டனர்.  அப்போது   ஒரு  கும்பல்   இடையில்   புகுந்து   ஆரஞ்ச்  பழங்கள்   கொடுப்பதை   நிறுத்தச்  சொல்லிக்  கலகம்     செய்தார்கள்.  .அதனால்   நிகழ்வு   நின்று  போனது.

நிகழ்வில்   புகுந்து   கலகம்    செய்தவர்கள்   அம்னோ,  பிஎன்   உற்ஃபுப்பினர்களே   என்று   ஸ்தூலாங்    சட்டமன்ற  உறுப்பினர்   எண்ட்ரு   சென்  கா  கூறினார்.

ஆனால்,   ஜோகூர்  பாரு  அம்னோ   தலைவரான   ஷாரிர்   சமட்,  அம்னோ  தலைவர்களோ,   தொண்டர்களோ  அதில்  சம்பந்தப்படவில்லை   என  மறுத்தார்.