தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்டும் அம்னோவின் இறுதிக் குறிக்கோளின் ஓர் அங்கம் இருமொழித் திட்டம்

ஜீவி காத்தையா, பெப்ரவரி 12, 2018.

 

 

மலேசியாவில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற ஆளுங்கட்சி அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் மிக அண்மையில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை இருமொழித் திட்டம் (DLP).

இந்த இருமொழித் திட்டத்தை ஒரு கொள்கையாக அல்லாமல் ஒரு திட்டமாக அறிவித்து அதை அமல்படுத்த அதிகாரம் அளித்திருக்கும் பாரிசான் அரசாங்கம் அத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான முழு பொறுப்பையும் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அளித்துள்ளது. இது அம்னோவின் / பாரிசானின் மக்களாட்சி மீதான ஈடுபாட்டை காட்டுவதாகாது. மாறாக, இந்த தாய்மொழிப்பள்ளிகளை மூடும் அம்னோவின் இறுதிக் குறிக்கோள் விவகாரத்தில் மக்கள், குறிப்பாக சீனச் சமூகத்தினர், எழுப்பிய கடும் எதிர்ப்பு மற்றும் அந்தக் கடும் எதிர்ப்பின் காரணமாக சட்டத்தின் மூலம் சாதிக்க முடியாமல் தடுக்கப்பட அம்னோவின் அதே தாய்மொழிப்பள்ளி ஒழிப்பு குறிக்கோளை தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கைகளைக் கொண்டே அவர்களின் கண்களைக் குத்திக்கொள்ள வைக்கும் குள்ளநரித்தனம்தான் இந்த இருமொழித் திட்டம்.

தாய்மொழிப்பள்ளிகளை மூட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அம்னோ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை ஆங்கிலமொழியில் கற்றுக்கொடுத்து அவர்களை கணித மேதை இராமானுஜம், அறிவியல் மேதை சி.வி. இராமன் மற்றும் தத்துவஞானி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த இருமொழித் திட்டத்தை அமல்படுத்துகிறது என்று நாம் நம்பினால் நாம் சீரழிந்து போவது நிச்சயம்.

பொதுவாக, சீனர்கள் அம்னோவின் இறுதி குறிக்கோளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இருமொழித் திட்டம் ஒரே மொழிப்பள்ளியை கொண்டுவருவதற்கான கல்வி அமைச்சின் முயற்சி என்று டோங் ஸோங் தலைவர் திட்டவட்டமாக கூறியிருப்பதுடன் அத்திட்டத்தை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரே மொழி, ஒரே பள்ளி (தேசியப்பள்ளி) என்ற அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு சட்டம் இயற்றுவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்ட அம்னோ, அந்த குறிக்கோளை அடைவதற்கான அடித்தளத்தை மலேசியா கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் அமைத்திருக்கிறது. தேசியப்பள்ளி பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளின் மீதும் அமைச்சு கவனம் செலுத்தும் என்று அப்பெருந்திட்டத்தில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

இறுதியில், அனைத்து மாணவர்களும் மூன்று மொழிகளில் திறமையுடையவர்களாக இருப்பார்கள் – மலாய், ஆங்கிலம் மற்றும் சீனம் அல்லது தமிழ் அல்லது அரேபிக் அல்லது பிரஞ்ச் அல்லது ஸ்பேனிஸ். இவற்றில் மலாய் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளை ஒரு பாடமாக எடுத்துக்கொள்வதற்கு ஒரு பள்ளிக்கூடம் தேவையில்லையே.

பெற்றோர்களே தேசியப்பள்ளியை தங்களுடைய முதல் தேர்வாக்கிவிட்டால், பின்னர் தாய்மொழிப்பள்ளிகள் (தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள்) எதற்கு?

தேசியப்பள்ளி பெற்றோர்களின் முதல் தேர்வாக இருப்பதற்கு வகை செய்ய மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைளில் ஒன்றுதான் இந்த இருமொழித் திட்டம்.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டும் அம்னோவின் இறுதிக் குறிக்கோளை இணைத்து மலேசியா கல்விப் பெருந்திட்டம் 2013 – 20025 ஐ வரைந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் அரசு ஊழியரான முனைவர் என். எஸ். இராஜேந்திரன். இவர் இருமொழித் திட்டத்தை அமல்படுத்தும் மிகத் தீவிரமான அரசு ஊழியர்களில் ஒருவர்.

கீழ்வரும் கட்டுரை மலேசியாவில் தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சுருக்கமாக கூறுகிறது.

 

சுதந்திரம் அடைந்த ஆண்டில் 888 தமிழ்ப்பள்ளிகள்

 

மகாபாரதம் கண்ட ஸ்வர்ணபூமியில், கடாரம் கொண்ட சோழ மன்னனின் இனத்தினரான தமிழர்கள், தற்போதைய சூழ்நிலையில் இந்தியர்கள்/மலேசியர்கள், மலேசியாவில் கடந்த இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆப்ரிக்க மக்களைப் போல் துன்பமயமான வாழ்க்கையில் சிக்கி சீரழிந்தனர், சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போலவே அவர்களது மொழியான தமிழும், அதனைக் கற்பிக்கும் தமிழ்ப்பள்ளியும் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகின்றன.

காலனித்துவ பிரிட்டீஷ் அரசு தமிழ்க்கல்விக்கு பொறுப்பேற்க மறுத்து விட்டது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் பொறுப்பை தோட்ட நிருவாகத்தினரிடம் விட்டு விட்டது. தோட்ட முதலாளிகளுக்கு தமிழ்க்கல்வி தொழிலாளர்களை ஈர்த்து அவர்களைத் திருப்தியடைந்தவர்களாக வைத்துக்கொள்ளும் ஒரு கருவியே தவிர வேறொன்றும் இல்லை.  1923 ஆம் ஆண்டில், பெடரல் சட்டமன்றத்தில் பேசிய தோட்ட முதலாளிகளின் பிரதிநிதி தோட்டத்தில்  “பள்ளிக்கூடம்” என்று பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள எந்த ஒரு புகைக்கூடத்திற்கும் (smoke factory) தொழிலாளர் ஆணையர் ஒப்புதல் அளிக்க அனுமதிக்கப்பட்டால் அது தமக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று கூறினார்.[i]

பல அவல நிலைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கிடையே தோட்டங்களிலும், நகர்புறங்களில் தனிப்பட்டவர்களின் விடாமுயற்சிகளாலும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 888 ஆகும்.

சுதந்திர மலாயாவில் பல்லின மக்களிடையே ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற கூற்றை முன்வைத்து 1955 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அப்துல் ரசாக் நாட்டின் அனைத்து இன மாணவர்களையும் ஒரே வகையான பள்ளியின், ஒரே மொழியின், கீழ் கொண்டு வருவதற்கும் தமிழ் மற்றும் சீன தாய்மொழிப்பள்ளிகளை படிப்படியாக மூடுவதற்குமான இறுதிக் குறிக்கோள் (Ultimate Objective) கொள்கையை 1956 ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கையின் வழி பரிந்துரை செய்தார். இந்த இறுதிக் குறிக்கோள் அடிப்படையில் 1957 ஆம் ஆண்டு கல்விச் சட்டவிதி (Education Ordinance 1957) இயற்றப்படவிருந்தது. இக்குறிக்கோளுக்கு எதிராக சீனர்களும்  ஓரளவிற்கு இந்தியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக இக்குறிக்கோள் சம்பந்தப்பட்ட பரிந்துரையின் வாசகத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ரசாக் அறிக்கையின் இறுதிக் குறிக்கோள் சம்பந்தப்பட்ட பரிந்துரையின் வாசகத்தில்தான் மாற்றம் செய்யப்பட்டதே தவிர அப்பரிந்துரை கொண்டிருந்த நோக்கத்தில், தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், மாற்றம் இல்லை என்பதைக் கல்வி சட்டவிதி 1957 (Education Ordinance 1957) க்குப் பின்னர் தீட்டப்பட்ட பல்வேறு கல்விப் பெருந்திட்டங்களும், இயற்றப்பட்ட பல கல்விச் சட்டங்களும் உறுதிப்படுத்துகின்றன.

அரசாங்கம் சட்டங்களை இயற்றி அவற்றின் அடிப்படையில் தாய்மொழிப்பள்ளிகளை உடனடியாகவோ படிப்படியாகவோ மூடி விடலாம் என்ற கணிப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஆளுங்கட்சியினர் தாய்மொழிப்பள்ளிகளை சீரழித்து மெல்ல மெல்ல மடியவைக்கும் வியூகத்தை அமலாக்கி வருகின்றனர்.

இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள்  தொடங்கி 200 ஆண்டுகால வரலாற்றை அடைந்து விட்ட 2015 ஆம் ஆண்டில், சோழ மன்னன் கொண்ட கடாரத்தில் 26 மாணவர்களைக் கொண்ட சுங்கை புந்தோர் தமிழ்ப்பள்ளியை அட்டைகளும் குரங்குகளும் தங்களுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அட்டைகளும் குரங்களும் செய்யும் அட்டகாசங்களால் மிரண்டு போன 25 மாணவர்கள் அப்பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டனர். அப்பள்ளிக்கு வருகையளித்த ஒரு துணைக் கல்வி அமைச்சரிடம் அப்பள்ளியைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு தற்காலிக தோட்டக்காரரை வேலைக்கு அமர்த்துமாறு மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர். அப்படி ஒரு நியமனம் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று பதிலுரைத்த அந்தத் துணை அமைச்சர் ரிம500ஐ கொடுத்து விட்டுச் சென்றாராம்.[ii] இந்த 21 ஆம் நூற்றாண்டில், 200 ஆண்டுகால வரலாற்றை கொண்டாடும் 2015 ஆம் ஆண்டில்,  தமிழ்ப்பள்ளிகளில் மிளிர்கின்றன என்று டமாரம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த “மிளிரும்” பள்ளிகளில் ஒன்றான சுங்கை புந்தோர் தமிழ்ப்பள்ளியில் நமது மூதாதையர்களான குரங்குகள் மேளம் கொட்டி நமது இரத்தத்தை உறிஞ்சும் நமது சகோதர சகோதரிகளான அட்டைகள் நடனமாடி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை வேறொரு மொழிப்பள்ளியை தேர்வு செய்யுமாறு தூண்டிக் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

1957 ஆம் ஆண்டில் தாய்மொழிப்பள்ளிகளை படிப்படியாக மூடும் இறுதிக் குறிக்கோள் சட்டமாக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டது. ஆனால், அதே இறுதிக் குறிக்கோள் தாய்மொழிப்பள்ளிகளுக்கு சங்கடம் கொடுப்பதின் வழி நிறைவேற்றம் காண்பதற்காக மலேசிய சீன மற்றும் இந்திய கல்விமான்களின் பங்களிப்புடன் தீட்டப்பட்டு, மலேசிய அரசின் சீன மற்றும் இந்திய அமைச்சர்களின் ஒப்புதலுடன்,   மலேசிய கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டிருப்பதுதான் மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025.

தேசியப்பள்ளிகள் பெற்றோர்களே விரும்பி தேர்வு செய்யும் பள்ளிகளாக்கப்படும். இந்த இறுதிக் குறிக்கோள் அடையப்படுவது உறுதி செய்யப்படும். அதற்கு தேவையானவற்றை கல்வி அமைச்சு வழங்கும் என்று மலேசியக்  கல்விப் பெருந்திட்டம் 2013-2025 கூறுகிறது. 1956 ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கையில் கூறப்பட்ட இறுதிக் குறிக்கோளும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல்  கூறப்பட்டுள்ள இறுதிக் குறிக்கோளும் ஒரே இலக்கைக் கொண்டவை: தாய்மொழிப்பள்ளிகளை மூடுதல்.

 

துங்கு அப்துல் ரஹ்மான்: “இந்தியர்களின் உதவியை நாடவே கூடாது”

 

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் 1946 ஆம் ஆண்டிலிருந்து மலாயாவின் கல்விக் கொள்கையில் மிதவாதப் போக்கு காணப்பட்டது. தாய்மொழி (மலாய், சீனம் அல்லது தமிழ்) அல்லது ஆங்கில மொழியில் ஆறு ஆண்டுகளுக்கு இலவச தொடக்கப்பள்ளி கல்வி கற்கலாம் என்பதோடு அனைத்து தாய்மொழிப்பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்றிருந்தது. மேலும், இடைநிலைப்பள்ளியில் கற்பித்தல் மலாய், சீனம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருக்கலாம். ஆனால், போருக்குப் பிற்பட்ட இனவாத நெருக்கடி சூழ்நிலையில் இக்கொள்கை தாக்குப்பிடிக்கவில்லை. 1948 இல் மலாயா கூட்டு அமைப்பு (Federation of Malaya) அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு புதிய கல்விக் கொள்கை தேவைப்பட்டது. அதற்காக பிரிட்டீஷ் காலனித்துவ அரசால் 1949 இல் அமைக்கப்பட்ட மத்திய ஆலோசனைக் குழு அதன் அறிக்கையை 1950 இல் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் நடைமுறையில் இருந்த கல்வி கட்டமைப்புக்கு பெரும் மாற்றங்கள் ஏதும் முன்மொழியப்படாததால் அதற்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு அது நிராகரிக்கப்பட்டது.[iii]

1950 ஆம் ஆண்டில், எல்.ஜே. பார்ன்ஸ் என்பவரின் தலைமையில் ஐந்து ஆங்கிலேயர்களையும் ஒன்பது மலாய்க்காரர்களையும் ஓர் இந்தியரையும் உறுப்பினர்களாகக் கொண்ட  குழுவை அமைத்தனர். அந்த பார்ன்ஸ் குழு 1951 ஆம் ஆண்டில் அதன் பரிந்துரையை வெளியிட்டது.

பார்ன்ஸ் குழு அதன் பரிந்துரையில் பல்வேறு இன சமூகங்களுக்கான தனிப்பட்ட தாய்மொழிப்பள்ளிகளை மூடிவிட்டு அவற்றுக்கு மாற்றாக அனைவருக்கும் பொதுவான ஒரே வகையான தேசியத் தொடக்கப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்று கூறியதோடு தொடக்கக் கல்விக்கான உதவிகள் வழங்கப்படுவதில் தேசியப்பள்ளிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.  அக்குழு வழங்கிய பரிந்துரைகளின்  சுருக்கம் இதுதான்:

“In principle, we recommend the end of separate vernacular schools for the several racial communities, and their replacement in a single type primary school common to all. We recognise, of course, that since the end can come only gradually with the development of the National Schools (i.e. government primary schools), we ask, however, that in the allocation of public resources to primary education priority should be given to National School.”[iv]

சீனர்கள் பார்ன்ஸ் குழுவின் அறிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் பென்-வு குழுவை அமைத்தது. அக்குழு மும்மொழி கற்பித்தல் முறையைப் பரிந்துரைத்தது.

இந்தியர்கள், குறிப்பாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் ஊடகங்கள் மற்றும் ஆர். ரமணி, பெடரல் சட்டமன்ற நியமிக்கப்பட்ட உறுப்பினர், பார்ன்ஸ் குழுவின் பரிந்துரைக்கு கண்டனம் தெரிவித்தனர். ரமணி பென்-வுவின் பரிந்துரையையும் சாடினார். இதுவரையில் மிதமான போக்கிலிருந்த மஇகாவும் நடவடிக்கையில் இறங்கியது.  தமிழ்க்கல்வி குறித்து அரசாங்கம் எந்த ஒரு குழுவையும் அமைக்காததால் சற்று சஞ்சலப்பட்ட மஇகா 1951 ஜூனில் ஓர் இந்தியக் கல்விக் குழுவை (The Indian Education Committee) அமைத்தது. அக்குழுவின் பரிந்துரை அப்போது நடைமுறையிலிருந்த கல்விக் கொள்கையை அனுசரித்தே இருந்தது. ஆனால், இந்தத் தமிழ்ப்பள்ளிகள்கூட நிதி பற்றாக்குறை, பொருத்தமற்ற பாடநூல்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இக்குழுவினரின் நடவடிக்கைகளுக்கு திராவிட கழகம், தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே தீவிர ஆதரவு வழங்கினர்.

பல்வேறு போட்டி பரிந்துரைகளை எதிர்க்கொண்ட அரசாங்கம் அனைத்து தரப்பினரும் அடங்கிய ஒரு மத்திய ஆலோசனைக் குழுவை 1951 இல் அமைத்தது. அதில் இந்தியர்கள் சார்பில் முதலில் ஆர். ரமணி, பெடரல் சட்டமன்ற உறுப்பினர், நியமிக்கப்பட்டார். ஆனால்,  பின்னர் அவருக்குப் பதிலாக  ஆகஸ்ட் 1952 இல் வி.எம்.என். மேனன், மற்றொரு பெடரல் சட்டமன்ற உறுப்பினர், நியமிக்கப்பட்டார். இக்குழு பார்ன்ஸ் குழுவின் அறிக்கையைப் பின்பற்றியது.  பெடரல் சட்டமன்றம்  19 – 20 செப்டெம்பர் 1951 இல் பார்ன்ஸ், பென்-வு மற்றும் மத்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் அறிக்கைகளைப் பரிசீலித்து பார்ன்ஸ் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. பின்னர், பார்ன்ஸ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்றப்பட்ட கல்விச் சட்டவிதி 1952 (Education Ordinance 1952) ஐ அப்போது கல்விக்கு பொறுப்பேற்றிருந்த (Member for Education) இ.இ.சி. துரைசிங்கம் பெடரல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கினார். அச்சட்டம் பார்ன்ஸ் குழுவின் “தேசியப்பள்ளி” கொள்கைக்கு ஏற்ப இருந்த போதிலும், பதினைந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் தமிழ் மற்றும் சீனமொழிகளில் போதிப்பதற்கு இடமளித்தது.

இது இந்தியர்களுக்கு ஏற்புடையதாக இல்லை, ஏனென்றால் தேசியப்பள்ளிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவிடக் கூடும் என்று அவர்கள் அஞ்சினர். எதிரியின் கபட நோக்கத்தைப் புரிந்துக்கொள்ளும் இந்தியர்கள் அப்போது இருந்திருக்கின்றனர்.

கல்விச் சட்டவிதி 1952 இன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட மஇகா அதற்கு எதிரானப் போராட்டத்தைத் தொடங்கியது. இது மலாய்க்காரர்களின், குறிப்பாக துங்கு அப்துல் ரஹ்மானின், எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியது. இது அம்னோவுக்கும் மசீசவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் ஒரு முயற்சி என்று துங்கு கருதினார்.  மேலும், இக்கல்விச் சட்டவிதி 1952 க்கு எதிரான மஇகாவின் போராட்டத்தில் கலந்துகொள்ள அது மசீசவுக்கு விடுத்திருந்த அழைப்பு அவரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. கல்விச் சட்டவிதி1952 விவகாரத்தில் சீனர்களை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் மசீச தலைவர் டான் செங் லோக்கிற்கு செப்டெம்பர் 23, 1953 இல் துங்கு எழுதியிருந்த கடிதத்தில் கடுமையான நிதி நிலை காரணமாக அச்சட்டம் அமலாக்கப்படுவது தள்ளிபோடப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தள்ளிப்போடும் நாடகம் இன்றுவரையில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், அதே கடிதத்தில் மசீச இந்தியர்களின் உதவியை நாடவே கூடாது (“MCA should never ‘seek the help of the Indians’”) என்று துங்கு கேட்டுக்கொண்டார்.

 

மரண தீர்ப்பு

 

அரசாங்கத்திற்கு மசீச தலைவர் டான் செங் லோக் எழுதியிருந்த கடிதத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் கல்விச் சட்டவிதி 1952 ஐ ஒரு “மரண தீர்ப்பு” என்று அஞ்சுவதாக குறிப்பிட்டிருந்தார். அதனை நிராகரித்த ஹைகமிசனர் ஜெரால்ட் டெம்ளர் அவ்வாறான அச்சத்திற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை என்றார்.

கல்விச் சட்டவிதி 1952 க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் இருந்தன. சீனர்களின் கோரிக்கைகளில் சீனமொழிக்கு தேசியமொழித் தகுதி, பன்மொழி சட்டமன்றம் மற்றும் சீனமொழி பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். மொழி விவகாரத்தில் கடுஞ்சினமடைந்திருந்த சீனர்கள் கல்விச் சட்டவிதி 1952 சீன மற்றும் தமிழ்க் குழந்தைகளின் தாய்மொழிக் கல்வியைப் பறிக்க வகை செய்யும் இனப் பாகுபாட்டைக் கொண்டது என்று ஆகஸ்ட் 1954 இல் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் புகார் செய்தனர்.

இந்தியர்களுக்கிடையில் அக்காலத்தில்கூட ஒற்றுமை இல்லை. மஇகா மலாய் மொழியை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டது. மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமே தேசிய மொழிகளாகக் கருதப்பட வேண்டும் என்று வாதிட்ட மஇகா பன்மொழி சட்டமன்ற கோரிக்கையை நிராகரித்தது.  அவர்கள் கேட்டுக்கொண்டதெல்லாம்  தொடக்கப்பள்ளி நிலையில் தமிழ்க்கல்வி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்.  இருப்பினும், பினாங்கு மற்றும் புரோவின்ஸ் வெலஸ்லி மஇகா கிளைகள் சீனர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், அது நீடிக்கவில்லை.

பின்னர், 1956 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அப்துல் ரசாக் அறிக்கைக்கும் சிலாங்கூர் மஇகாவில் எதிர்ப்பு தோன்றியது. ஜூலை 1958 இல்,  பினாங்கு மஇகா 12 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழும் சீனமும் அதிகாரப் பூர்வமான மொழிகளாக ஏற்கப்பட வேண்டும் என்றும், தமிழ் இடைநிலைப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இத்தீர்மானங்களுக்கு பெடரேசன் மலாய்ப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. அம்னோவை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் வி.டி. சம்பந்தனின் தலைமையிலான மஇகா அதன் கிளைகளிடமிருந்த வந்த புகார்கள் மற்றும் தீர்மானங்கள் மீது மேல்நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்த்தது. அன்று அவர்களைப் பீடித்த சனி  இன்றும் அவர்களை  ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025 வரையப்படும் காலத்தில் மசீச அதன் பரிந்துரையை அளித்திருந்தது. ஆனால், மஇகாவிடமிருந்து எதுவும் கிடைத்ததாக அக்கல்விப் பெருந்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 1950களில் மொழி மற்றும் கல்வி விவகாரங்களில் இந்தியர்கள் ஓரளவு அக்கறை கொண்டிருந்தனர். ஆனால், அது சீனர்களின் ஈடுபாட்பைப் போன்று வலுவானதாக இல்லை.[v]

 

ரசாக்கின் இறுதிக் குறிக்கோள் அறிக்கை

 

மலாயாவின் முதல் பொதுத் தேர்தல் 1955 இல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்துல் ரசாக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில்,  ரசாக் கல்விக் குழு அமைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த நாட்டின் கல்விக் கொள்கையின் இறுதிக் குறிக்கோள் அனைத்து இன மாணவர்களையும் தேசிய மொழியை முதன்மையான போதனை மொழியாகக் கொண்ட  தேசிய கல்வி அமைவுமுறையின் கீழ் படிப்படியாக கொண்டுவருவதாகும் என்று பரிந்துரைக்கப்பட்டது.  (“We believe further that the ultimate objective of the educational policy in this country must be to bring together the children of all races under the national education system in which the national language is the main medium of instruction, though we recognise that progress towards this goal cannot be rushed and must be gradual.”)[vi]

இது முழுக்க முழுக்க  பார்ன்ஸ் குழுவின் பரிந்துரையைப் பிரதிபலிக்கிறது. இப்பரிந்துரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் சீன சமூகத்தினரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கூறப்பட்டுள்ள பரிந்துரைக்கு கீழ்க்கண்ட திருத்தத்துடன்  ரசாக் அறிக்கையின் அடிப்படையில்  ஜூன் 15, 1957 இல் கல்வி சட்ட விதி 1957  (Education Ordinance 1957, section 3) அமலாக்கம் கண்டது:

“The education policy of the Federation is to establish a national system of education acceptable to the people of the Federation as a whole which will satisfy their needs to promote their cultural, social, economic and political development as a nation, with the intention of making Malay language the national language of the country whilst preserving and sustaining the growth of the language  and culture of people other than Malays living in the country.”[vii] (Stress supplied)

இதில்கூட அந்த வாசம் அடிக்கிறது. இருந்தாலும், இது இந்திய மற்றும் சீன மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பின் விளைவாகக் கிடைத்த வெற்றிதான். ஆனால், தாய்மொழிப்பள்ளிகளை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற இறுதிக் குறிக்கோள் நடைமுறையில் கைவிடப்படவில்லை. அது இன்றும் தொடர்கிறது என்பதை உறக்கத்தில் கூட மறந்து விடக்கூடாது.

கல்விச் சட்டவிதி 1957 க்குப் பின்னர் பல கல்விப் பெருந்திட்டங்களும், கல்விச் சட்டங்களும்  உருவாக்கப்பட்டன. அவற்றில் தாய்மொழிக் கல்வியைப்  பேணி வளர்ப்பதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. மாறாக, தாய்மொழிப்பள்ளிகளைக் கடுமையாகப் பாதிக்கும் சட்டப் பிரிவுகள் புகுத்தப்பட்டன.

தாய்மொழியில் கல்வி கற்பிக்கும் ஒரு தேசிய மாதிரி தொடக்கப்பள்ளியை எந்த நேரத்திலும் மலாய் மொழியை முதன்மையான போதனை மொழியாகக் கொண்ட தேசியப்பள்ளியாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும்  கல்விச் சட்டம் 1961,  பிரிவு 21(2), (“Where at any time the Minister is satisfied that a national-type primary school may suitably be converted  into a national primary school he may by order direct that the school shall become a national primary school.”) எதிர்ப்பின் காரணமாக 1996 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட கல்விச் சட்டம் 1996, பிரிவு 17(1) இன் கீழ் தேசியக் கல்வி அமைவுமுறைக்குட்பட்ட அனைத்து கல்விக்கூடங்களிலும்,  இதே சட்டத்தின் பிரிவு 28 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தேசிய-மாதிரி பள்ளி அல்லது அமைச்சரால் பிரிவு 17, உட்பிரிவு (1) லிருந்து விலக்களிப்பட்ட வேறு எந்த ஒரு கல்விக்கூடம் தவிர, தேசிய மொழி முதன்மையான போதனை மொழியாக இருக்கும். (“The national language shall be the main medium of instruction in all educational institutions in the National Education System except a national-type school established under section 28 or any other educational institution exempted by the Minister from this subsection.”) ஆக, எத்தனை சட்டத் திருத்தங்கள் வந்தாலும் தாய்மொழிப்பள்ளியைத் துடைத்தொழிக்கும் இறுதிக் குறிக்கோள் நோக்கம் தொடர்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு கல்விச் சட்டம் 1961, பிரிவு 21(2) பாதகமாக இருக்கிறது என்று மக்கள் கருதுவதால் அப்பிரிவு அகற்றப்படும் என்று ஆளுங்கட்சியினர் 1995 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதியளித்தனர்.

தேர்தலுக்குப் பின்னர், பிரிவு 21(2) அகற்றப்பட்டது. அதன் இடத்தில் அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டவிதிகள் புதிய கல்விச் சட்டம் 1996 இல் சேர்க்கப்பட்டன.  அச்சட்டத்தின் பிரிவு 17(1) மேலே தரப்பட்டுள்ளது.

அதற்கடுத்து, பிரிவு 28. இப்பிரிவின்படி, கல்விச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு அமைச்சர் தேசியப்பள்ளிகளையும் தேசிய மாதிரிப்பள்ளிகளையும் அமைத்து அவற்றைப் பராமரிக்கலாம்.

பிரிவு 17(1) இன்படி, தேசிய கல்வி அமைவுமுறைக்குட்பட்ட  அனைத்து கல்விக்கூடங்களிலும் தேசிய மொழி முதன்மையான போதனை மொழியாக இருக்க வேண்டும். ஆனால், பிரிவு 28 இன் கீழ் அமைக்கப்பட்ட தேசிய மாதிரிப்பள்ளிகள் தேசிய மொழியை முதன்மையான போதனை மொழியாக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இது 1996 ஆம் கல்விச் சட்டம் இயற்றப்பட்டு அமலாக்கம் கண்ட பின்னர் (எதிர்காலத்தில்) அமைக்கப்படும் தேசிய மாதிரிப்பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். அப்படியென்றால், தற்போது சீன மற்றும் தமிழ்மொழிகளை முதன்மையான போதனை மொழியாகளாக் கொண்டிருக்கும் 1,281 சீன மற்றும் 523 தமிழ்மொழி தொடக்கப்பள்ளிகள் பிரிவு 17(1) இன் கீழ் அவற்றின் முதன்மையான தாய்மொழி போதனையிலிருந்து தேசிய மொழி போதனைக்கு மாற்றப்பட வேண்டும்! அப்படி மாற்ற வேண்டியதில்லை என்றால், அதற்கு முறைப்படியான  விலக்களிப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே குழப்பம் இருக்கிறது என்பதைச் சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.[viii] இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருக்கலாம். இறுதிக் குறிக்கோளை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்று தயங்காமல் கூறலாம். தக்க சமயத்தில் இதைப்  பயன்படுத்த தயங்கமாட்டார்கள் என்பதையும் நிச்சயமாக கூறலாம்.

 

இறுதிக் குறிக்கோள்: கபட நோக்கம் கொண்ட கழிசடைகள்

 

சுதந்திர மலாயாவில் எல்லாமே மலாய்க்காரர்களுக்குத்தான் என்ற இனவாத வெறியைத் தூண்டி விட்ட தலைவர்களான ஓன் பின் ஜாபார், துங்கு அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் மலாயாவின் அனைத்து குடிமக்களின் நலன்களையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துபவர்கள் போல் நடித்தனர்.

மலாயாவில் சீன இனத்தவரின் எண்ணிக்கை மலாய்க்காரர்களின் எண்ணிக்கையைவிட கூடிவிடாமல் இருக்க வேண்டுமென்றால் நாம் கட்டாயமாக அதிகமான இந்தோனேசியர்கள் இங்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் நமது இரத்த உறவுகள் என்று வரலாறு கூறுகிறது என்று ரேடியோ மலாயாவில் ஜூலை 5, 1955 இல் ஆற்றிய உரையில் கூறி  ஓன் பின் ஜாபார் இனவாதத்திற்கு தூபம் போட்டார்.[ix]

மலாயா மலாய்க்காரர்களுக்கே என்று துங்கு அப்துல் ரஹ்மான் முழங்கினார்.[x]  அடுத்து அவர்களின் ஒரே மொழி, ஒரே பள்ளிக்கூடம் என்ற இறுதிக் குறிக்கோள் தலையெடுத்தது. இன்று அந்த இறுதிக் குறிக்கோளை கல்விமான்களிலிருந்து அரசியல் கழிசடைகள் வரையில் கூவிக் கொண்டிருக்கின்றனர். இதைத் தங்களுடைய நோக்கத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வது அண்மையக் காலமாக ஆளுங்கட்சியினருக்கு வழக்கமாகி விட்டது.

2007 ஆம் ஆண்டில், அன்றையக் கல்வி அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றினார்.  மார்ச் 7, 2007  இல் சீனமொழி நாளிதழான சின் சியூ டெய்லி அலுவலகத்திற்குச் சென்று ரசாக் அறிக்கை 1956 இல் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அனைத்து தாய்மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக மாற்றி தேசிய மொழியை முதன்மையான போதனை மொழியாக்கும்  இறுதிக் குறிக்கோள் கொள்கை காலத்திற்கு ஒவ்வாதது என்றும், நாட்டில் 1,000 க்கு மேற்பட்ட சீனப்பள்ளிகள் இருப்பது தேசிய ஒற்றுமைக்கு இடையூறாக இல்லை என்றார்.

“இன்று நாம் சீனமொழிப்பள்ளிகளை மூடிவிட்டால், சமுதாயம் நிலைத்தன்மை அடைந்துவிட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? போதனா மொழியை மாண்டரினிலிருந்து பகசா மலாயுவிற்கு  நாம் மாற்றிவிட்டால் தேசிய ஒற்றுமையை அடையமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது சாத்தியமற்றதாகும்”, (“If we close Chinese schools today, do you think society will be stable? If we [change] the medium of instruction from Mandarin to Bahasa Melayu, do you think we would achieve national unity? It would be impossible.”) என்று சின் சியூ டெய்லியுடனான நேர்காணலில் அடித்துக் கூறியவர் ஹிசாமுடின் ஹுசேன்.

மேலும், தம்மை நம்புமாறு கேட்டுக்கொண்ட ஹிசாமுடின் “நான் சொன்னதைச் செய்வேன்”, என்று சீன சமூகத்தினரை கவரும் நோக்கத்துடன் கூறினார்.

ஆனால், நவம்பர் 2008 இல், தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று அறைகூவல் விட்ட முக்ரீஸ் மகாதிரை திடமாக ஆதரித்து பேசி தாம் நம்பைக்கைக்குரிய சடமல்ல என்பதை ஹிசாமுடினே நிருபித்து விட்டார்.[xi]

கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளி மீதான சிறப்புக்குழு கல்வி அமைச்சர் ஹிசாமுடினின் தலைமையில் ஜூலை 24, 2008 இல் ஒரு கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் துணை அமைச்சர்கள் எஸ்.கே தேவமணி மற்றும் டி. முருகையா ஆகியோர் கலந்து கொண்டனர். அச்சிறப்புக்குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிசாமுடின், “தமிழ் தொடக்கப்பள்ளிகளில் காணப்படும் ஒட்டுமொத்த நிலவரம் மற்றவர்கள் கூறுவதுபோல் அவ்வளவு மோசமானதாக இல்லை என்று குழு கண்டறிந்தது” (“…the committee found that the overall situation at Tamil primary schools was not as bad as painted by some parties.”), என்று ஏமாற்றி விட்டோம் என்பதைப் பறைசாற்றும் பெரும் புன்னகையோடு கூறினார்.[xii]

அச்செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்த துணை அமைச்சர்கள் எஸ். கே. தேவமணியும் டி. முருகையாவும் ஹிசாமுடினுடன் சேர்ந்து புன்னகை பூத்தனர். ஆனால், இச்செய்தியாளர் கூட்டம் நடந்த 16 நாள்களுக்கு முன்பு இதே முருகையா “நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளிகளின் நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.[xiii]

12 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடப்பதற்கு இரு நாள்களுக்கு முன்னர் மார்ச் 6, 2008 இல் கோலாலம்பூரில் மஇகா பேராளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் நஜிப் தேசியப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் பாகுபாடு காட்டப்படாது என்று உறுதி கூறினார்.

பிரதமர் அப்துல்லா படாவி ஜூலை 12, 2008 இல் மஇகாவின் 62 ஆவது பேரவையைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் “நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றம் செய்யப்படும்” என்று பேராளர்களின் பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார்.

செப்டெம்பர் 30, 2011 இல், “எனது அரசாங்கம் மக்கள் அரசாங்கம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஆகையால் நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளையும் சரிசம நிலையிலேயே நாங்கள் கண்காணித்து வருகிறோம்”, என்று பிரதமர் நஜிப் அறிவித்தார்

முன்னாள் கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசின் பாகோவில் ஏப்ரல், 2013 இல், மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025 அதிகாரப்பூர்வமாக செப்டெம்பர் 6, 2013 இல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பேசிய போது, “கல்வி என வரும்போது அங்கு பாகுபாட்டிற்கு வழியில்லை. தேசியப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, சமயப்பள்ளி, அல்லது பூர்வீக இனத்தவர் பள்ளி என்று பிரிக்கப்படுவதில்லை. அனைத்தும் சரிசம முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிகள் என்றே நாங்கள் கருதுகிறோம்”, என்று கூறிய அவர், நாட்டை தேசிய முன்னணி தொடர்ந்து வழிநடத்தினால் மற்ற இனப் பள்ளிகளை அரசாங்கம் மூடிவிடும் என்ற எதிர்க்கட்சியினரின் வார்த்தைகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.[xiv]

ஆகஸ்ட் 30, 2013 இல் புத்ரா ஜெயாவில் மலேசியக் கல்விப் பெருந்திட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்திய முகைதின் யாசின் “தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் நிலை குறித்து சில தரப்பினர் தேவையில்லா அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டில் தேசிய முன்னணி ஆட்சி இருக்கும் வரை இப்பள்ளிகள் நிலைத்திருக்கும் என்பது உறுதி. ஆகையால், இது குறித்து மக்கள் ஐயுறத் தேவையில்லை”,[xv] என்று தெரிவித்த அவரின் கருத்துப்படி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்களுடைய சுயவிருப்பத்திற்கு ஏற்ப பள்ளிகளை மூடலாம் அல்லது திறக்கலாம்.

அப்படி இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 18, 2015 இல் ஷா அலாமில் கெராக்கான் கட்சியின் 44 ஆவது தேசிய பேராளர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நஜிப் “சீனப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும். அது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது”,[xvi] என்றார். பாரிசான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தாய்மொழிப்பள்ளிகள் தொடரும், ஏனென்றால் அது அரசமைப்புச் சட்ட விதியாகும் என்பது நஜிப் கூறியதின் அர்த்தமாகும் என்று கூறலாம்.

பிரதமர் இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில், அவரது நேற்று முளைத்த துணைப் பிரதமர் அமாட் ஸைட் ஹமிடி தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரை அடுத்து, புதியக் கல்வி அமைச்சர் மாட்ஸீர் மூவினப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைப்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்று இறுதிக் குறிக்கோள் கொள்கையை மீண்டும் ஓதியிருக்கிறார். இக்கூற்றுகள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பது நஜிப்பிற்கு தெரிந்திருக்க வேண்டுமே!

சீனப்பள்ளி அரசமைப்புச் சட்டதில் இடம்பெற்றிருப்பதை நஜிப் எப்போது கண்டுபிடித்தார் என்று அவர் கூறவில்லை. இருப்பினும், அதைக் கண்டுபிடித்தவர் நிச்சயமாக அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 12 இன்படி பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் அரசாங்கம் அளிக்கும் நிதி ஒதுக்கீட்டில் சமயம், இனம், பூர்வீகம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவரும் கல்வி அமைச்சராக இருந்திருக்கிறார். கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்விச் சட்டம் 1961, பிரிவு 22(2) க்கு திருத்தம் கொண்டு வந்ததாக பெருமைப்பட்டுக்கொள்ளும் அவர் கல்விச் சட்டம் 1996 இல் பிரிவு 17(1) ஐ புகுத்தி தாய்மொழிப்பள்ளிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியதும் நஜிப்தான்.

அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 12 இன் கீழ் வேறுபாடு காட்டக்கூடாது என்பது தெரிந்திருந்தும், வேறுபாடு காட்டுவேன் என்ற தோரணையில் “சமூகப் பெட்டகம்” என்ற நிதி அமைப்பின் வழி சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் இலாபத்திலிருந்து ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரிம100 மில்லியன் தாய்மொழிப்பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் என்று 26.9.2011 இல் நஜிப் அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ் அறவாரியத்தின் முன்னாள் தலைவர் சி. பசுபதி, தாய்மொழிப்பள்ளிகளின்பால் அரசாங்கம் கூடுதலான பொறுப்பு ஏற்க வேண்டும். வாணிப சமூகத்தினரின் தோள் மேல் ஏறிக்கொள்ளக்கூடாது என்றார்.

சுவாரம் என்ற மனித உரிமைக் கழகத்தின் ஆலோசகரான குவா கியா சூங், தேசியப்பள்ளிகளுக்கு இதுபோன்ற இரக்கமுள்ள உதவிகள் தேவைப்படாத போது, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏன் அது தேவைப்படுகிறது? நிதி ஒதுக்கீடு மற்றும் புதியப் பள்ளிகள் கட்டுவதில் முழுமொத்தமான வேறுபாடு இருக்கிறது என்பதற்கு இது சாட்சியமில்லையா என்று அவர் வினவினார்.[xvii]

அடுத்து, அரசமைப்புச் சட்டப் பிரிவு 12 க்கு முற்றிலும் முரணான இன்னொரு குண்டை நஜிப் போட்டார். தாய்மொழிப்பள்ளிகள் நிதி ஒதுக்கீட்டிற்காக அரசாங்கத்தை அதிகமாக நம்பியிருக்கக் கூடாது என்று நவம்பர், 2012 இல் (அதாவது மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அக்டோபர் 2011-டிசம்பர் 2012 காலக்கட்டத்தில்) அறிவித்தார்.[xviii]

மேற்கூறப்பட்டவை தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் திட்டத்தை இறுதிக் குறிக்கோளாக உள்ளத்தில் இருத்திக் கொண்டு உதட்டளவில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றுவாறு அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் நயவஞ்சகர்களின் வார்த்தைகளாகும். இது போன்ற கருத்துகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் இறுதிக் குறிக்கோள் பேச்சோடு இல்லாமல் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் திட்டத்தை பல்வேறு வகைகளில் கல்வி அமைச்சு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.

 

மலாய் மொழியே இந்த நாட்டின் உயிர்

 

2009 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபரில் அன்றையக் கல்வி அமைச்சர் முகைதின் யாசின், “மலாய் மொழியே இந்த நாட்டின் உயிர்” என்றும், “ஒரே மொழி, ஒரே மலேசியா” என்னும் கோட்பாட்டால் மலேசியர்கள் கவரப்பட வேண்டும் என்றும், “ஒரே மொழிப் பள்ளிக்கூடம் ஒரே மலேசியா கூட்டமைப்புக்கு ஒத்துவருகிறது”,[xix] என்றும் பேசினார்.

முகைதின் யாசினின் தெரிவித்த இக்கருத்துகளுக்கு பிரதமர் நஜிப் அவரைக் கண்டிக்கவில்லை. மாறாக, அக்கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “ஒரே கல்வி முறை மக்கள் அங்கீகாரத்துடனேயே அமல்படுத்தப்படும்”[xx] என்றார்.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்து தேசியப்பள்ளியில் அனைத்து இன மாணவர்களையும் ஒரே மொழியைக் கற்க வைப்பதற்கான இறுதிக் குறிக்கோள் தொடர்கிறது என்பதை நஜிப்பின் கருத்து உறுதிப்படுத்துகிறது.

முன்னாள் பிரதமரான அமாட் படாவியும் “மலாய் ஆரம்பப்பள்ளியை பலப்படுத்தி, தமிழ், சீன மொழிகளையும் இங்கேயே போதித்து, தமிழ், சீன பெற்றோர்களுக்கும் மலாய்ப் பள்ளியே முதன்மைத் தேர்வாக அமைய வேண்டும்[xxi] என்று அவர் பலமுறை பேசியுள்ளார். இதுதானே மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இறுதிக் குறிக்கோள்!

மேலும், “தமிழ், சீனப்பள்ளிகளில் ஒதுக்கப்படும் தாய்மொழிப் பாட நேர அளவிற்கு மலாய்ப் பள்ளியிலும் ஒதுக்கப்பட்டால் மட்டுமே, தமிழ், சீன பெற்றோர்களின் மனங்களை மலாய்ப் பள்ளியின்பால் கவர முடியும்”,[xxii] என்றும் கல்வி அமைச்சில் நடந்த ஒரு விளக்கமளிப்பில் அமாட் பாடாவி கூறியிருக்கிறார்.

மேற்கூறப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில்தான் கல்வி அமைச்சு பாடத்திட்டங்களை வரைவது, தாய்மொழிப்பள்ளிகளில் மலாய் மொழி போதிக்கப்படும் நேரத்தை கூட்டுவது, தாய்மொழிப்பள்ளிகளில் போதிக்கும் மலாய்மொழியின் தரத்தை தேசியமொழிப்பள்ளியின் தரத்திற்கு சமமாக்குவது போன்ற பல்வேறு திட்டங்கள் வரையப்பட்டு அவற்றை அமலாக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

இத்திட்டங்களை 2010 அல்லது 2011 இல் அமலாக்கம் செய்வது சிரமமே. ஆனால், 2012 ஆம் ஆண்டில் இவை அமலாக்கம் காணும்[xxiii] என்று கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அலிமுடியின் கூறியுள்ளார். .

மேலும், இந்நாட்டில் ஒரே மொழிப்பள்ளி முறையைக் கொண்டு வந்து தமிழ், சீனப்பள்ளிகளை மூட, மலாய்க் கல்விமான்களும், வலை பதிவாலர்களும், எழுத்தாளர்களும் இறங்கியுள்ளனர். Blog Demi Negara, Jebatmustdie போன்ற வலைப்பதிவுகளும் இவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளன. (Satu Sekolah Untuk Semua, Satu Bahasa Satu Bangsa Satu Negara) என்னும் கருப்பொருளுடன் கூடிய சின்னமும் தயாரித்துள்ளனர்.[xxiv]

 

மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தயாரிப்பு நடவடிக்கை

 

மேற்கூறப்பட்டுள்ள பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரின் கருத்துகளுக்கு ஏற்ப மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தைத் தயாரிக்கும் நடவடிக்கை 15 மாதங்களுக்கு (அக்டோபர் 2011 லிருந்து டிசம்பர் 2012 வரை) தொடர்ந்தது. ரிம20 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இப்பெருந்திட்டத்தில் 55,000 க்கு மேற்பட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருடன் நாட்டின் பல்வேறு அரசுசார்பற்ற அமைப்புகள், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள், இதர பொதுமக்கள் தங்களுடைய பங்களிப்பைச் செய்துள்ளதாக பெருந்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 200 மனுக்களும், 3,000க்கு மேற்பட்ட கட்டுரைகளும், வலைப்பதிவுகளும் இத்திட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து பெறப்பட்டன. அத்துடன், இத்திட்டத்தின் ஆய்வுகள் பற்றி சுயேட்சையான கருத்துகள் அளிப்பதற்காக 12 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நிபுணர்கள் குழுவும் 4 உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துலக நிபுணர்கள் குழுவும் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான கலந்துரையாடலில் 12,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.[xxv]

இத்திட்டம் குறித்து கல்வி அமைச்சிடம் நேரடியாக மகஜர் தாக்கல் செய்த மொத்தம் 181 அமைப்புகளில் இந்திய அமைப்புகள் 5 ஆகும். அவை: தமிழ் அறவாரியம், இடபுள்யுஆர்எப், பெற்றோர் சங்கம் SJKT ஜாலான் தாஜுல், கோட்டாதிங்கி, ஜொகூர், கோபியோ மற்றும் மலேசிய இந்து சங்கம்.[xxvi]

 

மலேசிய நிபுணர் குழு

 

ஒட்டுமொத்த மலேசிய கல்வி அமைவுமுறை மற்றும் இந்த மறுஆய்வு குறித்து சுயேட்சையான கருத்து தெரிவிக்க மலேசிய மற்றும் அனைத்துலக பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மலேசிய நிபுணர்கள் குழுவில் நியமனம் பெற்றவர்கள்:

 

 1. பேராசிரியர் சுல்கிப்ளி அப்துல் ரசாக். இவர் இக்குழுவின் தலைவர். அல்புக்ஹரி அனைத்துலக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். நாட்டின் கல்வி அமைவுமுறைக்கு ரசாக் அறிக்கையை மூலக்கல்லாகக் கருதுபவர்.[xxvii]

 

 1. அந்தோனி பிரான்சிஸ் பெர்ணான்டஸ், ஏர் ஏசியா பெர்ஹாட்டின் நிறுவனரும் தலைமை நிருவாகியுமாவார்.

 

 1. அஸ்மான் ஹஜி மொக்தார், கஸானா நேசனல் பெர்ஹாட்டின் நிருவாக இயக்குனர்.
 2. டாக்டர் ஜெப்ரி சியா, சன்வே குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.
 3. பேராசிரியர் டாக்டர் ஷரிபா ஹப்சா சைட் ஹசான் ஷகாபுடின், துணை வேந்தர், யுனிவர்சிட்டி கெபங்சாஆன் மலேசியா.
 4. ஸாரினா அன்வார், பங்குச் சந்தை ஆணையத்தின் முன்னாள் தலைவர்.
 5. பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஹிம் செலமாட், தோக் குரு, சிலாங்கூர் பல்கலைக்கழக கல்வித்துறையின் முன்னாள் தலைவர், அமிநுடின் பாக்கி கழகத்தின் முன்னாள் இயக்குனர்.

பின்னர் கூடுதலாக சேர்த்துக்கொள்ளப்பட்ட ஐவர்:

 1. பேராசிரியர் டாக்டர் முகமட் கமால் ஹாசன், சிறப்பு பேராசிரியர், அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் மலேசியா.
 2. டாக்டர் ஹஜி அடி படியோஸாமான், கல்வி சேவைகள் இலாகா, சரவாக் இஸ்லாமிய மன்றம்.
 3. பேராசிரியர் டாக்டர் சுவா ஹீன் டியீக், தலைவர், துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம்.
 4. டாக்டர் இராஜேந்திரன் நாகப்பன், பேராசிரியர், சுல்தான் இட்ரீஸ் கல்வி பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு தலைவர். இவரது தலைமையில் “மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பிரதமர் நஜிப்பிடம் பெப்ரவரி 14, 2014 இல் வழங்கப்பட்டது.
 5. டாக்டர் ஹஜி அப்துல் காடிர், தலைவர், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சாபா.[xxviii]

இந்த மலேசிய நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் எந்த அளவுக்கு தேசிய கல்வி அமைவுமுறைக்குட்பட்ட தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும், அவை தேசியப்பள்ளிகளுக்கு சமமாக நடத்தப்படுவதற்கும் குரல் கொடுத்தனர் என்பது தெரியாது. ஆனால், தாய்மொழிப்பள்ளிகள் இந்த மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் ஓரங்கட்டப்பட்டிருப்பதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்கும் கடப்பாடு இவர்களுக்கு இருக்கிறது என்று கூறலாம்.

தமிழ் அறவாரியம் தேசிய கலந்துரையாடல் குழுவின் தலைவர் வான் முகமட் ஸாகிட் முகமட் நோர்டின் மற்றும் அவரது குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து இப்பெருந்திட்டம் பற்றிய அதன் முன்மொழிதல்களை அவர்களிடம் கொடுத்து அவற்றுக்குத் தேவையான விளக்கங்களையும் அளித்தது. பின்னர், ஜூன் 30, 2012 இல் அவற்றை மகஜராகவும் தாக்கல் செய்தது.

தமிழ் அறவாரியத்தின் 10 கோரிக்கைகள்: 1. தேசிய கல்வி அமைவுமுறைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதுவரையில் பின்பற்றப்பட்டு வந்த பாகுபாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; 2. ஒவ்வொரு குழந்தையும் பாலர்பள்ளி கல்வி பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; 3. மாணவர்கள் படிப்பைக் கைவிடும் பிரச்சனைக்கு தீவிர நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்; 4. அரசாங்க பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நுழைவுத் தகுதி மெட்ரிகுலேசனா அல்லது எஸ்டிபிஎம்மா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்; 5. தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும்; 6. தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உபகாரச் சம்பளம் அளிக்கப்பட வேண்டும், அது வெளிப்படையாகச் செய்யப்பட வேண்டும்; 7. கற்பித்தலும் கற்றலும் மாணவர்களின் சிந்தனைக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்க வேண்டும்; 8. ஒரு மாணவன் அல்லது மாணவியின் எதிர்காலத்தை அவர்களின் தரம்தான் நிர்ணயிக்க வேண்டுமே தவிர இனமல்ல; 9. தேசியப்பள்ளிகளுக்கு கடுமையான சீர்திருத்தம் தேவைப்படுகிறது; மற்றும் 10. தேசிய-மாதிரி பள்ளி என்ற முத்திரை அகற்றப்பட வேண்டும்.

தமிழ் அறவாரியம் புதுமுக வகுப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அது வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த முன்மொழிதல் தமிழ் அறவாரியம் உறுப்பியம் பெற்றுள்ள ஜிபிஎம் என்ற கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்த மிக விரிவான ஒரு மகஜரில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜிபிஎம் (மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு) அதன் 25 உறுப்பினர் அமைப்புகளின் சார்பில் மிக விரிவான, தெளிவான 15 கோரிக்கைகள் அடங்கிய மகஜரை நவம்பர் 2012 இல் கல்வி அமைச்சிடம் தாக்கல் செய்தது.[xxix]

இக்கோரிக்கைகள் குறித்து கல்வி அமைச்சுடன் ஒரு சந்திப்பு நடத்துவதற்கு ஜிபிஎம் அமைச்சைக் கேட்டுக் கொண்டது. அதற்கு இன்று வரையில் பதில் இல்லை. ஆனால், தமிழ் அறவாரியமும் ஜிபிஎம்மும் அமைச்சிடம் மகஜர்கள் தாக்கல் செய்த தகவல் மகஜர் தாக்கல் செய்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அறவாரியம் மற்றும் ஜிபிஎம் போன்ற அமைப்புகள் தாக்கல் செய்த முன்மொழிதல்களை கல்வி அமைச்சு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டு: கடந்த 50 ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வரும் புதுமுக வகுப்புகளால் பலனடைந்த மாணவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். தொடக்கத்தில் அவ்வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இப்போது அவை வேண்டாவெறுப்பாக நடத்தப்படுகின்றன. ஆகவே, அவற்றை சீர்படுத்தி வளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அது 2017 இல் அகற்றப்படும் என்று பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறே, பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்பதற்கும் பெருந்திட்டத்தில் எவ்விதப் பதிலும் இல்லை.

ஆக, மலேசியக் கல்விப் பெருந்திட்டத்திற்கு பொதுமக்களும் பொது அமைப்புகளும் தெரிவித்த கருத்துகளுக்கும் முன்மொழிதல்களுக்கும் எவ்வித முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் மக்களின் கருத்துகளுக்கும் முன்மொழிதல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

 

தேசியப்பள்ளி பெற்றோர்களின் முதன்மைத் தேர்வாக இருப்பதே இறுதிக் குறிக்கோள்

 

ஒரே மொழி, ஒரே பள்ளிக்கூடம் – தேசிய மொழி, தேசியப்பள்ளி.. அதுவே தேசிய ஒற்றுமைக்கான ஒரே வழி. இதுதான் அப்துல் ரசாக்கின் இறுதிக் குறிக்கோள். அதனைச் சாதிப்பதற்கு கடந்த 58 ஆண்டுகளாக அரசாங்கம் முயன்று வருகிறது.

பொதுத் தேர்தல் என்ற ஒன்று இருப்பதாலும், அதில் வெற்றி பெற இந்திய மற்றும் சீன வாக்காளர்களின் ஆதரவு தவிர்க்க இயலாத ஒன்று என்பதாலும், அம்னோ ஆதிக்கத்திலுள்ள பாரிசான் அரசாங்கம்  அதன் இறுதிக் குறிக்கோளை அடைய பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அம்முயற்சி இப்போது வேறு வகையில் மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் தொடரப்பட்டுள்ளது. முன்பு அனைத்து இன மாணவர்களையும் மலாய் மொழியை முதன்மையான போதனை மொழியாகக் கொண்ட  தேசியப்பள்ளியின் கீழ் கொண்டுவருவது  இறுதிக் குறிக்கோளாக இருந்தது. இப்போது  அதே இலக்கை அடைவதற்கு  தேசியப்பள்ளி பெற்றோர்களின் முதன்மைத் தேர்வாக ஆக்கப்படுவது இப்பெருந்திட்டத்தின் இறுதிக் குறிக்கோள் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. (“The Ministry will focus on delivering interventions to create these opportunities across all schooling options to promote better integration, with the ultimate objective (stress supplied) of ensuring that National schools become the school of choice and such interactions occur naturally.” (MEB 7-17))

தேசிய கல்வி அமைவுமுறைக்கு உட்பட்ட தேசிய, தமிழ், சீன மற்றும் இதர பள்ளிகள் அனைத்தையும் முதல்தரமான பள்ளிகளாக உருவாக்கி அவற்றில் பெற்றோர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம் என்பது இப்பெருந்திட்டத்தின் குறிக்கோள் அல்ல. தேசியமொழிப்பள்ளிகளை மட்டுமே முதல்தரமான பள்ளிகளாக்குவதுதான் திட்டம். இதர பள்ளிகளின், குறிப்பாக தமிழ்   மற்றும் சீனமொழிப்பள்ளிகளின், தரத்தை வீழ்த்தி அவற்றை பெற்றோர்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை இப்பெருந்திட்டம் ஒளிவுமறைவு இன்றி காட்டுகிறது.

தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளையும் அவற்றின் மாணவர்களையும் வளப்படுத்தி, வலுப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் 288 பக்கங்களைக் கொண்ட இப்பெருந்திட்டம் கொண்டிருக்கவில்லை.

உண்மையில், தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருவது நாட்டின் பல்வகைமையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. (MEB 3-24). ஆனால், மாரா கல்வி நிலையங்கள் அனைத்திலும் ஒரே இன மாணவர்கள் இருப்பது பல்வகைமையைப் பிரதிபலிக்கிறதா என்பதற்கு விளக்கம் இல்லை.

அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாட்டின் கீழ் ஒவ்வொரு குழந்தையும் எவ்வித வேறுபாடுமின்றி கல்வி கற்று அதன்                      ஆற்றலை அடைவதற்கு வழிகோலுவதாக கூறும் இப்பெருந்திட்டம் மாணவர்கள் தங்களுடைய ஐந்தாம் படிவ கல்விப் படிப்பின் முடிவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச தரத்தை பகசா மலேசியா, ஆங்கில மொழி, கணிதம், அறிவியல், வரலாறு, இஸ்லாமிய கல்வி அல்லது நன்னெறி கல்வி ஆகிய பாடங்களில் பெற்றிருப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறுகிறது. (MEB 2-2). இதில் தமிழ் மற்றும் சீனமொழிகளுக்கு இடமில்லை.

மலேசியர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கல்வி அமைவுமுறையான இது அனைத்து மாணவர்களும் – அவர்களுடைய பெற்றோர்கள் யார் அல்லது எங்கு படிக்கிறார்கள் போன்ற எதனையும் பொருட்படுத்தாமல் – அவர்களுடைய சொந்த எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கு அவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள் அவர்களுக்கு அளிக்கப்படும். (MEB 2-3). தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளி மாணவர்கள் தங்களுடைய சொந்த எதிர்காலத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொள்வதற்கு தேவைப்படும் உபகரணங்களை அளிக்க இப்பெருங்திட்டம் வகை செய்கிறதா? இல்லை.

ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள ஒவ்வொரு பள்ளியின் ஒவ்வொரு மாணவனும் அவர்களுடைய முழு உள்ளார்ந்த ஆற்றலை அடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு மலேசிய கல்வி அமைவுமுறை விழைகிறது (“The Malaysian Education System aspires to ensure that every student in every school in every state achieves their full potential.”) (MEB 2-5). இந்த ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ்ப்பள்ளி அடங்குகிறதா? இந்த ஒவ்வொரு மாணவனிலும் தமிழ்ப்பள்ளி மாணவன் அடங்குகிறானா? இல்லை. ஏனென்றால், மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் இருமொழி திறனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வலியுறுத்தப்படுகிறது

ஒவ்வொரு மாணவனும் தேசிய மொழியான பகசா மலேசியா மற்றும் இரண்டாவது மொழியாக அனைத்துலகத் தொடர்புத்துறை மொழியான ஆங்கிலம் ஆகியவற்றில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (“Every student will be proficient in Bahasa Malaysia as the national language and in English language as a second language and the international language of communication.”) (MEB 2-7)  ஆக, பெருந்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது பகசா மலேசியாவும் ஆங்கிலமும்தான். ஆனால், ஒவ்வொரு மாணவனும் இறுதியில் ஒரு கூடுதல் மொழியைக் கற்பதற்கான வாய்ப்பும் உண்டு. தமிழ் மற்றும் சீனமொழிகளை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்யலாம். (“Every student will also eventually have the opportunity to learn an additional language.”) (MEB 2-7). “இறுதியில்” அதனைக் கற்பது எங்கே?  தமிழ்ப்பள்ளியிலா, சீனப்பள்ளியிலா அல்லது தேசியப்பள்ளியிலா? நிச்சயமாக தேசியப்பள்ளியில்தான். இப்போதே அது அங்கு நடந்து கொண்டிருக்கிறது. (“Currently, some National schools also offer the opportunity to learn a third language such as Chinese language, Tamil, Arabic, Iban and Kadazan Dusun.”) (MEB 2-7).

இறுதியில், தமிழ் மற்றும் சீனமொழிகள் தேசியப்பள்ளிகளில் ஒரு கூடுதல் பாடமாக போதிக்கப்படும். அக்கட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகள் தேவைப்படாது. அவற்றை மூடி விடலாம். இப்படியும் அரசாங்கம் அதன் இறுதிக் குறிக்கோளை அடைய முடியும். அதற்கு இப்பெருந்திட்டம் இப்படியான ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. ஆனால், இதனை உடனடியாகச் சாதிக்க இயலாது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.

அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் மாணவர்கள் தமிழ் மற்றும் சீனமொழிகளை தேசிய மாதிரி பள்ளிகளில் கற்பதற்கான வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். (“Students will continue to have the opportunity to learn Chinese and Tamil language at National-type schools.”) (MEB 2-7).

பல்லின பண்பாடுகளும் பல்லின மக்களும் மலேசியாவின் அடையாளத்திற்கு அடிப்படையாகும். அதன் அங்கீகாரமாக, மலேசிய கல்வி அமைவுமுறையின் தற்போதைய கட்டமைப்பு தொடர்ந்து நீடிக்கும். குறிப்பாக, சீன மற்றும் தமிழ்மொழிகளைப் போதனா மொழிகளாகக் கொண்டுள்ள தேசிய மாதிரி தொடக்கப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும். இப்பள்ளிகளின் தகுதி மற்றும் அடிப்படை அடையாளம் தொடர்ந்து வைத்திருக்கப்படும். தேசிய கல்வி அமைவுமுறையின் ஓர் அங்கம் என்ற வகையில், அவை தொடர்ந்து அமைச்சின் ஆதரவைப் பெறும். (MEB 7-18).

தேசிய மாதிரி தமிழ் மற்றும் சீன தொடக்கப்பள்ளிகள் எந்த அடிப்படையில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்: அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலா அல்லது கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கூறப்படும் கருத்துகளின் அடிப்படையிலா? இது ஒரு மிக முக்கியமான கேள்வி. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் என்றால், இக்கேள்வி கேட்கப்பட வேண்டியதில்லை. அரசமைப்புச் சட்டத்தில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தால் அதனை நிலைநிறுத்த அச்சட்டத்திற்கு வெளியில் முடிவு எடுக்க வேண்டியதில்லை. ஆனால், இப்பெருந்திட்டத்தில் தேசிய வகை தமிழ் மற்றும் சீனமொழி தொடக்கப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படுவதற்கான முடிவு தேசிய அளவில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கு ஏற்ப செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. (“This decision is in line with the majority of views raised during the National Dialogue and following the launch of the preliminary version of this Blueprint.”) (MEB 7-18).

மேற்கூறப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து அகற்றி அவற்றை கும்பல்களால் ஒழிக்கப்படுவதற்கு வகை செய்யும் ஒரு முன்னோடியாகும். அரசாங்கம் இன்னும் பெரிய அளவிலான கலந்துரையாடல்களை நடத்தி அவற்றில் பங்கேற்றவர்களின் பெரும்மான்மையான கருத்து தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற முடிவைப் பெற முடியும். அதுதான் கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்களின் பெரும்பான்மையான கருத்தின்  அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்று இப்பெருந்திட்டத்தில் கூறுவதின் உள்நோக்கம்.

இந்த மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தை வரைந்தவர்கள் தேசியக் கல்வி அமைவுமுறையின் அங்கங்களான தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஏதும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியில் தாய்மொழிப்பள்ளிகளின் தலைவிதியை தீர்மானிக்க முடியும் என்ற நிலைக்கு மலேசியக் கல்விப் பெருந்திட்டம் வித்திட்டுள்ளது.  இப்பெருந்திட்டத்தில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளைகளின் மாணவர்கள் மற்றும் அவர்கள் பயிலும் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக எந்த ஒரு பரிந்துரையும் கிடையாது.

288 பக்கங்களைக் கொண்ட இப்பெருந்திட்டத்தில் காணப்படும் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் பற்றிய குறிப்புகளை ஒன்று சேர்த்தால் அதிகபட்சம் நான்கு முழு பக்கங்களுக்கு மேல் போகாது என்று கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளும் அவற்றின் மாணவர்களும் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், இப்பெருந்திட்டத்தின் சூத்திரதாரியான முகைதின் யாசின் என்ன நடந்தாலும் சரி இத்திட்டம் அமலாக்கப்படும், ஏனென்றால் அது அனைத்து சமூகங்களுக்கும் நன்மை அளிப்பதாகும் என்று சூளுரைத்துள்ளார்.[xxx] அவர் இப்போது வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவரது பணியைத் தொடர முக்ரீஸ் மகாதிர், மாட்ஸீர் காலிட், கைரி ஜமாலுடின், உச்ச மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், மாரா கல்விமான்கள் தயாராக இருக்கிறார்கள். கேள்வி: அவர்களை எதிர்க்க நாம் தயாரா?

 

என்ன செய்ய வேண்டும்?

 

சீன சமூகத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். ஆனால், அங்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் இருக்கிறார்கள். இந்தியர்கள் இன்னும் போதுமான ஈடுபாட்டை வெளிக்கொணரவில்லை. ஆனால், துட்டுக்காகவும் துண்டுகளுக்காகவும் காலைவாரி விடுபவர்களும் இருக்கிறார்கள். என் குழந்தை படிப்பதற்கு தகுதி வாய்ந்த தமிழ்ப்பள்ளி இருக்கிறதா என்று கேட்கும் மேல் குடிமக்களும் இருக்கிறார்கள். தங்களுடைய குழந்தைகளை தேசியப்பள்ளிக்கு அனுப்பும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால், உரிமை உணர்வுள்ள சாதாரண இந்தியர்கள், கற்றறிந்தவர்கள், தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எப்போதுமே போராடத் தயங்காத தாய்மார்களும் இருக்கிறார்கள்.

இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளி நிலைத்திருக்க, உரிமையுடன் நிலைத்திருக்க, போராளிகளை உருவாக்கும் திட்டம் வரையப்பட வேண்டும். அத்திட்டம் நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்தியரின், சீனரின், ஏன், மலாய்க்காரரின் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும் அதனை 2025க்குள் செய்ய வேண்டும்.

Endnotes

 

[i] . Lim Teck Ghee, British Colonial Administration and the Ethnic  Division of Labour in Malaya. Kajian Malaysia II, December 2, 1984, pp. 28-66.

[ii] . Tamil Nesan, May 18, 2015.

[iii] . Rajeswary Ampalavanar, The Indian Minority and Political Change in Malaya 1945-1957, pp. 128-129.

[iv] . Yang Pei Keng, Constitutional & Legal Provision for Mother Tongue Education in Malaysia, Mother Tongue Education in Malaysia, Edited by Kua Kia Soong, 1998, p 32.

[v] . Rajeswary Ampalavanar, The Indain minority and Political Change in Malaya 1945-1957, pp. 129-136.

[vi] . Razak Report 1956, Paragraph 12.

[vii] . Yang Pei Keng, Constitutional & Legal Provision for Mother Tongue Education in Malaysia, Edited by Kua Kia soong , 1998, p. 37.

 1. ibid., pp. 50-53.
 2. Kua Kia Soong, A Protean Saga, The Chinese Schools of Malaysia, 1999, p. 85.

 

 

[x] . V. David, Freedom That Never Came, 1989, p. 16.

[xi] . Semparuthi Magazine, January 2009, pp.16-17.

[xii] . The Star, 25.7.2008.

[xiii] . The Star,  8.7.2008.

[xiv] . Tamil Nesan, 20.4.2013.

[xv] . Tamil Nesan, 30.8.2013.

[xvi] . Malasiakini, 18.10.2015.

[xvii] . Malaysiainsider, 26.9.2011.

[xviii] . ibid., 1.11.2012.

[xix] . Malaysia Nanban, 3.1.2010.

[xx] . ibid.

[xxi] . ibid.

[xxii] . ibid.

[xxiii] . ibid.

[xxiv] . ibid.

 

[xxv] . MEB 2013-2025, Ch. 1.1-1.7

[xxvi] . ibid, A-20-A25.

[xxvii] . New Sunday Times, 18.3.2012.

[xxviii] . MEB 2013-2025, A-12.

[xxix] . Thinakkural, 1.12.2012.

[xxx] . Bernama News, 4.9.2013.