வசந்தப்பிரியா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வார், குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்தார்

தனது மகள், சுயமாக தன்னைக் காயப்படுத்திகொள்வார் எனும் குற்றச்சாட்டை வசந்தபிரியாவின் அப்பா, ஆர். முனியாண்டி மறுத்துள்ளார்.

இன்று நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், 2016-ல் வசந்தப்பிரியா தனது மணிகட்டை வெட்டிக்கொண்டு, தன்னைத் தானேக் காயப்படுத்திக் கொண்டுள்ளார் என்று புகார் கூறியுள்ள துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதனை அவர் சாடினார்.

“கமலநாதனிடம் நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன், என் மகளை எனக்குத் தெரியும், அவள் அப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை, அவள் ஒருபோதும் காயம் அடையவில்லை, அப்படி ஏதேனும் நடந்திருந்தால், போலீஸ் பதிவு அல்லது மருத்துவமனை அல்லது கிளினிக் பதிவு இருந்திருக்கும்.

“நீங்கள் அதனை தேடி பார்க்கலாம், அப்படி ஏதும் இல்லையே,” என்று ஒரு முகநூல் நேரடி ஒளிபரப்பில் அவர் கூறினார்.

2016-ல், வசந்தப்பிரியா தனது மணிக்கட்டில் வெட்டிக்கொண்டதால், அவருக்கு வழிகாட்டி, ஆலோசனை ஆசிரியர் அறிவுரை கூறியுள்ளார் என தி சான் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்து கேட்டபோது, கமலநாதன், “ஆமாம், 2016-ல், வசந்தப்பிரியா தனது மணிக்கட்டில் வெட்டிக்கொண்டுள்ளார்,” என்றதோடு, அது சம்பந்தமாக போலிஸ் புகார் செய்யப்பட்டதாகவும், ஆனால் வசந்தப்பிரியாவின் குடும்பத்தார் ஆலோசகரின் அறிவுரைகளைக் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

“அச்சம்பவத்தில், அந்தப் பெண் ஆசிரியர் செய்த ஒரே ஒரு தவறு, மாணவியைப் பள்ளியில் இருந்து ஒரு நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதுதான், அது அவர் பணியல்ல,” என்று கமலநாதன் கூறியுள்ளார்.

எங்கள் பிள்ளையை இன்னும் இழிவுபடுத்த வேண்டாம்

“எங்கள் மனதைப் புண்படுத்த வேண்டாம்.”

தங்கள் மகள், ஆசிரியரின் கைப்பேசியை எடுப்பது போலான சிசிடிவி பதிவு அறிக்கை குறித்து ஆர்.முனியாண்டி இவ்வாறு கூறியுள்ளார்.

தன் மகளின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க வேண்டாமென அவர் அனைத்து தரப்பினரையும் கேட்டுகொண்டார்.

“சிறு வயது முதல் நான் வளர்த்து வந்துள்ளேன், எனக்கு என் மகளை நன்றாகத் தெரியும்….. என் மகள் ஆசிரியரின் கைப்பேசியை எடுத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் எனக்கு என் மகளைப் பற்றி தெரியும்.

“நான் அவள் மீது அதிகப் பாசம் வைத்துவிட்டேன். இன்றுவரை என்னால் தூங்க முடியவில்லை, சாப்பிடக்கூட முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியு ஸ்ட்ரேட் டைம்ஸ் மற்றும் டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்திகளைப் பினாங்கு போலிஸ் தலைவர் ஏ.தெய்வீகன் மறுத்தார்.

“அவர் யார் (சிசிடிவி காட்சிகளில்) என்பதை அடையாளம் காண ஒரு தடய நிபுணர் தேவை. அதற்கு முன்னதாக, நாம் எந்தக் கருத்தும் கூற முடியாது.

“இதுவரை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட எதனையும் நாம் உறுதிபடுத்த முடியாது,” என தெய்வீகன் கூறியதாக தி மெலேய் மேய்ல் செய்திகள் கூறுகின்றன.