ஆட்ட நிர்ணய மோசடி: மலேசிய பூப்பந்து ஆட்டக்காரரிடம் விசாரணை

போட்டிக்கு முன்னரே முடிவுகளை நிர்ணயம் செய்யும் மோசடி  தொடர்பில்   மலேசிய  பூப்பந்து  வீரர்  ஒருவருக்கு  எதிராக   உலகப்  பூப்பந்து   சம்மேளனம்(பிஎம்எப்)  விசாரணை   செய்து   வருவதாக     நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  இன்று   கூறியது.

விசாரணை   முடியும்வரை    அந்த  ஆட்டக்காரர்   போட்டிகளில்  கலந்துகொள்ளத்  தற்காலிகத்  தடை  விதிக்கப்பட்டிருப்பதாகவும்   அந்நாளேடு  கூறியது.

அனைத்து   இங்கிலாந்து   போட்டி,  உலக  சாம்பியன்ஷிப்   போட்டி    போன்ற   ஆட்டங்களில்   மலேசியாவைப்  பிரதிநிதித்து   வந்துள்ள   அவரை  உலகச்  சம்மேளம்  கடந்த    ஆண்டு   பிப்ரவரியிலிருந்தே   கண்காணித்து   வந்துள்ளது. ஆனால்,  கடந்த   மாதம்தான்   அவருக்கெதிராக    நடவடிக்கை    எடுக்கப்பட்டது.

அவரது   ஆடம்பர   வாழ்க்கைதான்   அவர்மீது  சந்தேகம்  கொள்ள  வைத்ததாம்.

ஆட்ட  முடிவுகளை   முன்கூட்டியே  நிர்ணயம்   செய்யும்   மோசடி   தொடர்பில்   மலேசியப்  பூப்பந்து   வீரர்    ஒருவர்  விசாரிக்கப்படுவது   இதுவே  முதல்முறை   என்றும்   அவர்மீதுள்ள  குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டால்   அவருக்கு   வாழ்நாள்  தடை  விதிக்கப்படலாம்   எனவும்   அச்செய்தி  கூறிற்று.