அழைப்பும் மறுப்பும்

தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கொள்கையில் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர்,

“சிறிலங்காவின் தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெற்றுள்ள எதிர்பாராத வெற்றி, தமிழ்த் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் முயற்சிகளில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கப் போகிறது என்ற மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்கு சிங்கள மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

இதனால் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தடைப்படலாம்.

அதேவேளை தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை.

இந்த இக்கட்டான தருணத்தில், குறைந்தபட்சம் சமஷ்டி கொள்கையில் பயணிக்கும்- அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தனிமனித விருப்பு வெறுப்புகள் உள்ளிட்ட சிறுசிறு விவகாரங்களை ஒதுக்கி விட்டு, இத்தகைய கொள்கையுடன் பயணிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் எமது விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவை.

சிலவேளைகளில் அது கடுமையாகவும் இருந்திருக்கலாம். ஒற்றையாட்சிக்கு இணங்கி, பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க இணங்கியதால், அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

ஒட்டு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல.

ஊழலற்ற, ஆட்சியை நடத்தி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கினறோம்.

ஆனால் அவ்வாறு நாம் இணைந்து செயற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும், அவர்களது தீர்மானங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைமைகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட வேண்டும்.

அப்படியாயின்,  நாம் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார். அதுவரை கூட்டமைப்போடு ஒருமித்து பயணிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களில் தூய்மையான அரசியலை உருவாக்க தயாராகவுள்ளவர்கள், எம்மோடு இணைந்து செயற்பட தயாராக இருந்தால் அவர்களை அரவணைக்க தயாராகவே இருக்கிறோம்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: