சாப் கோ மே-வுக்குப் பிறகு, நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்

சாப் கோ மே முடிந்த ஒரு வாரத்தில், மார்ச் 2-ல் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாப் கோ மே, இம்மாதம் 16-ம் தேதி வரவுள்ள சீனப்பெருநாளின் 15-வது நாள் கொண்டாடப்படும்.

அரசியல் ஆய்வாளர்கள் பொதுத் தேர்தலுக்கான சிறந்த காலம் குறுகியதாகவும், மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் கணித்துள்ளதாக தி சன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மே மாதம் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்ளவுள்ளதால், தேர்தலை நடத்த முடியாது, ஆக அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என சரவாக் மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெனிரி அமீர் கூறினார்.

“அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட ஏற்ற மாதம், அதேநேரம் அன்வார் (முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்) சிறையிலிருந்து விடுதலையாகும் முன், பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும்,” என்று அவர் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.

ஜாலான் செமாராக் ஃபெல்டா பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாததால், மே மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடைபெறாது என்று மூத்தப் பத்திரிகையாளர் அஹுருதீன் அதான் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார்.

“புதிய சிறப்பு செயலவைக்கு, ஃபெல்டா பிரச்சனைக் குறித்து ஆய்வு செய்ய 3 மாதங்கள் தேவைபடுகின்றன. இப்போது பிப்ரவரி, ஆக 3 மாதங்களில் மே மாதம் வந்துவிடும். ரமாடான் மே மாத நடுவில் தொடங்கும், நோன்புப் பெருநாள் ஜூன் மாத இடையில் கொண்டாடப்படும். ஆக, பொதுத் தேர்தல், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜூன் மாதத் தொடக்கத்தில் அன்வார் சிறையிலிருந்து விடுதலையாவார் எனப் பேராசிரியர் ஜேம்ஸ் சின் கூறினார்.

“பொதுத் தேர்தல் சீனப் பெருநாள் முடிந்து வைக்கப்பட வேண்டும், அன்வார் சிறையில் இருந்து வெளியாகும் முன்னதாக.

“பொதுத் தேர்தலின் போது, அன்வாரைப் பிரச்சாரத்திற்கு அனுமதித்தால் அது ஆபத்தானதாக (பாரிசானுக்கு) முடியும்,” என்று தஸ்மேனியா பல்கலைக்கழகம், தஸ்மேனியா ஆசியா நிறுவனத்தின் இயக்குநர் ஜேம்ஸ் சின் தி சன் நாளிதழிடம் கூறியுள்ளார்.