கெடாவில் வெற்றி உறுதி: ஹரபான் எம்பி நம்பிக்கை

14வது  பொதுத்  தேர்தலில்  பக்கத்தான்  ஹரபான்  கெடாவைக்  கைப்பற்றும்   வய்ப்பு    பிரகாசமாக   இருப்பதாய்  பிகேஆர்   எம்பி  ஒருவர்   கூறினார். அதற்கு  முக்கிய  காரணம்  டாக்டர்  மகாதிர்.

இதனைத்    தெரிவித்த    சுங்கை   பட்டாணி    எம்பி     ஜொஹாரி   அப்துல்,    2016இல்  முக்ரிஸ்  மகாதிர்   திடீரென்று  பதவியிலிருந்து   அகற்றப்பட்டு  அஹமட்  பாஷா  ஹனாபியா  மந்திரி   புசார்   ஆக்கப்பட்டதிலிருந்து   அந்த  வடக்கத்தி   மாநிலத்தில்  அப்படி  ஒன்றும்   பெரிதாக   முன்னேற்றம்   இல்லை  என்றார்.

“பிஎன்  ஒரு  புதிய  மந்திரி  புசாரைக்  கொண்டுவந்தபோது   நல்லது  நடக்கும்   என   கெடா  மக்கள்   எதிர்பார்த்தார்கள்.  ஆனால்,  அவரிடம்  கல்வித்  தகுதியும்   இல்லை,  அவர்   நல்ல  வேலை  செய்பவராகவும்   இல்லை .  அவர்  ஒரு  சரியான  தேர்வு  அல்ல   என்பது  தெளிவாகி  விட்டது”,  என  ஜொஹாரி   மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கெடா  மக்கள்  மாற்றத்துக்கு   எதிரானவர்கள்  அல்லர்.  பினாங்கு,  கிளந்தான்,  திரெங்கானு,   பேராக்   சிலாங்கூர்  மக்களைப்போல்    அவர்களும்  கடந்த  காலத்தில்   மாற்றத்தைக்  கண்டவர்கள்தான்  என   அந்த   பிகேஆர்  ஆலோசகர்  கூறினார்.

ஏற்கனவே  ஒரு  முறை  மாற்றத்தைக்  கொண்டு  வந்திருப்பதாகவும்   மீண்டும்  அதை  அங்கு   கொண்டுவர  முடியும்   என்றும்   அவர்  சொன்னார்.

கெடா  மக்கள்  மாற்றத்தை  விரும்பக்  கூடும்   என்பதற்கு   இன்னொரு  காரணம்    விலைவாசி  உயர்வும்  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யுமாகும்  என்றார்.

இப்போது  இன்னொரு  புதுக்  காரணமும்  உள்ளது. அதுதான்  டாக்டர்  மகாதிர்  மீண்டும்  அரசியலுக்குத்   திரும்பி   வந்திருப்பது. இது  கெடா  மக்களை  மாற்றத்தை   நோக்கி  உந்தித்தள்ளும்.

பெர்சத்து   அவைத்   தலைவரான  மகாதிரை   பக்கத்தான்  ஹரபான்  கூட்டணி   தனது   பிரதமர்   வேட்பாளராக    தேர்ந்தெடுத்துள்ளது.

முன்னாள்   குபாங்  பாஸு     எம்பியான   மகாதிர்,  எந்தத்   தொகுதியில்   போட்டியிடுவார்   என்பதை   இதுவரை    அறிவிக்கவில்லை. அவர்  லங்காவியில்  களமிறங்கலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது. வேறு  சில  இடங்களும்  பரிசீலனையில்   இருப்பதாக  தெரிகிறது.

“மகாதிருக்கு  93 வயது  ஆனாலும்  கெடாவில்   அவர்  தனித்துவம்  வாய்ந்த  அடையாளச்  சின்னம்,  குறிப்பாக  மலாய்க்காரர்கள்   அதிகம்   வாழும்  பகுதிகளில்.

“அவரை  ஒரு   சர்வாதிகாரி,  கொடுங்கோலர்    என்று  நீங்கள்   ஏசலாம்   ஆனால்,  உருப்படியான   மேம்பாடுகளைக்   கொண்டு  வந்தவர். செய்து  காட்டியவர்”,  என்று  ஜொஹாரி   கூறினார்.

“மக்கள்   அவருடைய  ஆட்சிக்காலத்தை   இப்போதைய  (பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்)   ஆட்சியுடன்   ஒப்பிட்டுப்  பார்க்கலாம். அவர்   பல   நெடுஞ்சாலைகளை    அமைத்தார்,   கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தைக்   கட்டினார். ஜிஎஸ்டி  இல்லாமலேயே   அவற்றையெல்லாம்   கட்டினார்”.

மகாதிருக்கு   கெடாவில்  மிகுந்த    செல்வாக்கு   உண்டு.  அது  ஹரபானுக்கு   உதவுகிறது    என்றார்.

“முன்பு,  கெடாவில்  சில  பகுதிகளுக்குள் (ஹரபான்)  செல்ல  முடியாது. அம்னோ  தீவிர   ஆதரவாளர்கள்  நிரம்பிய   பகுதிகள்   அவை. இப்போது  முடிகிறது.

“ஆனாலும்,   மாநில   அரசைக்  கைப்பற்ற    கெடா  மலாய்க்காரர்கள்   ஆதரவு   இன்னும்  10விழுக்காடு கூடுதலாகத்   தேவைப்படுகிறது.   அதைப்  பெறுவதுதான்  ஹரபானை   எதிர்நோக்கும்  சவால்”, என  ஜொஹாரி  கூறினார்.