தேர்தலில் பிஎன், நஜிப் கை மேலோங்கியிருக்கும்: ஆய்வாளர்கள் கணிப்பு

எதிர்வரும்  14வது  பொதுத்   தேர்தலில்   பாரிசான்  நேசனல்   மற்றும்  பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்  கை  மேலோங்கியிருக்கும்   எனப்  பிரபல   அரசியல்   ஆய்வாளர்கள்   இருவர்   கூறுகின்றனர்.

கடந்த  ஓராண்டுக்  காலமாக  பக்கத்தான்  ஹரபான்   ஆதரவு    சரிந்திருப்பதாகக்  கூறிய   யுனிவர்சிடி  மலேசியா   சரவாக்   இணைப்  பேராசிரியர்  டாக்டர்   ஜெனிரி   அமிர்,   தேர்தல்   நெருங்க    நெருங்க   ஹரபானில்  உள்நெருக்கடி   தொகுதிப்  பங்கீட்டின்  காரணமாக   மேலும்  மோசமடையலாம்  என்றார்.

யுனிவர்சிடி  சயின்ஸ்  மலேசியா  பேராசிரியர்   டாக்டர்   சிவமுருகன்  பாண்டியன்,  பாஸ்   தேர்தலில்   தனித்துப்  போட்டிபோடப்   போகிறது    என்பதால்  இனி  பல  தொகுதிகளில்   நேரடிப்    போட்டி   இருக்காது    என்றும்  அது  பிஎன்னுக்குச்   சாதகமாக  அமையும்   என்றும்   கூறினார்.

“மறுபுறம்  அரசாங்கம்    வீடமைப்பு,  பொருளாதாரம்,   கல்வி,  வாழ்க்கைச்  செலவினம்,  வேலை   வாய்ப்புகள்  போன்ற   மக்களின்  பிரச்னைகளைக்    களைவதில்   அக்கறை  காண்பித்து   வருவதால்   அதற்கு  ஆதரவாக   வாக்காளர்களின்  கருத்து  மாறி  வருகிறது”,  என  டாக்டர்  ஜெனிரி   கூறினார்.

“முன்னாள்   பிரதமர்    டாக்டர்   மகாதிர்  முகம்மட்டும்   எதிரணியினரும்    விடாமல்    தாக்கி    வந்தபோதிலும்    இம்முறை   நஜிப்  பிஎன்னுக்கு   நல்ல   வெற்றியைத்   தேடிக்  கொடுப்பார்  என்று  உறுதியாக   நம்புகிறேன்”,  என்றாரவர்.

2015இல்,  அப்போதைய   துணைத்  தலைவரும்   துணைப்  பிரதமருமான     முகைதின்  யாசினையும்    உதவித்   ஷாபி  அப்டாலையும்    அமைச்சர்   பதவியிலிருந்து   தூக்கியபோது    சிறு   நெருக்கடி    உருவானது    ஆனால்  அதன்  பிறகு   பிஎன்  மேலும்  வலுவடைந்திருப்பதாக    பேராசிரியர்   சிவமுருகன்   குறிப்பிட்டார்.

”அம்னோவின்  பலமான   ஆதரவைக் கொண்டு   பிரதமர்   அவரின்  நிலையை   வலுப்படுத்திக்  கொண்டிருக்கிறார்”,  என்றார்.

-பெர்னாமா