மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவி சோதனை வெற்றி ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் பேட்டி

ஆலந்தூர்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’வின் தலைவர் சிவன், சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திரயான்-2 செயற்கைக்கோளை செலுத்துவதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இது தொடர்பான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்தபின்னர் சந்திரயான்-2 செயற்கைக்கோளை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்திரயான்-2 செயற்கைக்கோளின் சிறப்பு என்னவென்றால், இது சந்திரனுக்கு சென்று ஒரு பாகம் சுற்றிக்கொண்டு இருக்கும்; மற்றொரு பாகம் நிலைநிறுத்தப்படும்.

ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-2 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 செயற்கைக்கோளை மார்ச் மாதம் இறுதியில் விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சோதனைகள் முடிந்த பின்னர்தான் தேதி முடிவாகும்.

மீனவர்கள் பாதுகாப்பு கருவி

மீனவர்கள் கடலில் செல்லும்போது அவர்கள் இருக்கும் இடம், எவ்வளவு தொலைவில் உள்ளனர், பாதுகாப்பு எல்லையில் இருக்கிறார்களா என அனைத்தையும் தெரிவிக்கும் வகையில் செயற்கைக்கோள் மூலம் செயல்படுத்த ஏற்ற உயர் தொழில்நுட்பக் கருவி உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த கருவியின் சோதனையும் வெற்றிகரமாக முடிந்து உள்ளது.

முதல் கட்டமாக 500 மீனவர்களுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம். மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவி வழங்குவது பற்றி அரசு தான் முடிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ள மீனவர்களுக்கான கருவியின் மூலம் கடற்கரையில் இருந்து 1,500 கி.மீ. தொலைவு வரை தகவல் தொடர்பு பரிமாறிக்கொள்ள முடியும். இந்த கருவியைப் படகில் பொருத்திக்கொண்டால் போதுமானது. இந்த கருவி செயல்படுவதற்கு இணையதள வசதியோ, கோபுரமோ தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: