இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் சாண் தமிழர் இனத்தின் தலைவரா? தமிழர் பேரவை கண்டணம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் சாண் தலைமையில் இந்திய வட்டத்தில் ஒருங்கிணைந்திருக்கும் ஏழு இன இயக்கங்கள் ஒன்றிணைந்து தலைமை(பிரதமர்) அமைச்சின் தே(சி)ய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு சிறப்பு ஆலோசகர் டத்தோ எங் சாய் கெய் அவர்களிடம் ஏப்ரல் 14- ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா என்ற பெயரில் பொதுவிடுமுறை கேட்டும் தே(சி)ய நாள்காட்டியிலும் பதிவு செய்ய கோரியும் வேண்டலீடு (மகசார்) அளித்தனர் என்று குமுக ஊடகங்களில் வெளியாகியது.

இந்த பொதுவிடுமுறை சாத்தியம் பற்றி கடந்த ஆண்டு மே மாதத்தில் டத்தோ எங் சாய் கெய் அவர்கள் இந்து கழகத்திடம்(சங்கம்) தெரிவித்துள்ளார். இந்து கழகம் அதன் ஆலோசக மன்றத்துடன் கலந்தாலோசித்து இருக்கிறார்கள்.அதன் பிறகு, இந்து கழக ஆலோசகர் மன்றம், அர்ச்சகர் சங்கம் மலேசியா, திவாய்ன் லைவ் சோசாயிட்டி, இராமகிருட்டிணன் மிசன், ஐசுகோன் மற்றும் இந்து அறிஞர்கள் சிவசிறி முத்துக்குமார சிவச்சாரியார், சிவசிறி நித்தியானந்த குருக்கள், பேராசிரியர் முனைவர் டத்தோ இராசேந்திரன் முனைவர் திலகாவதி கலந்தாலோசித்து ஏப்ரல் 14- ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா பொதுவிடுமுறை என்று ஒருமனதாக முடிவு செய்தனர். இந்தத் தீர்மானத்தை உடனடியாக டத்தோ எங் சாய் கெய் பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு நவம்பரில் டத்தோ எங் சாய் கெய் பணிமனையில் மலேசியா இந்து கழகம் சந்திப்பு நடத்தியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து பெட்டாலிங் செயாவில் அமைந்திருக்கும் இந்து கழக தலைமை பணிமனையில் மலேசியா தெலுங்கு கழகத் தலைவர் டத்தோ அச்சையா இராவ், எல்லா மலேசியா மலையாளி கழகத் தலைவர் டத்தோ சுசீலா மேனன், மலேசியா பெங்காலி கழகத் தலைவர் முனைவர் சென் குப்தா, மகாசுத்ரா மகாமண்டல் தலைவர் திருமதி சில்ப்பா தங்கசேல் மற்றும் இந்து கழகத் தலைவர் டத்தோ மோகன் சாண் தலைமையில் கூட்டம் நடத்தி ஏப்ரல் 14- ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழாவாக பொதுவிடுமுறை தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர் அதோடு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத சிந்தி கழகத் தலைவர் டத்தோ சா இலச்சன் இராய், குசராத்தி கழகத் தலைவர் டத்தோ புபத்ராய் மற்றும் மலேசியா குரு வார்ட்சு பேரவைத் தலைவர் சர்தார் சகீர் சிங்கும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். மலேசியாவில் இந்தியர் ஒருங்கிணைப்பில் தங்கள் இனத்திற்கு வெவ்வேறு புத்தாண்டுகள் இருந்தாலும் பெரும்பான்மையாக தமிழர்களாக இருப்பதால் ஏப்ரல் 14-ஐ பொதுவிடுமுறையாக முன்மொழிகிறோம் என்று டத்தோ சுசிலா மேனன் மலையாள கழகத் தலைவர் கூறுகிறார்.

டத்தோ மோகன் சான் டத்தோ என் சாய் கெய்யுடன் சந்திப்பை பற்றியும் மற்றும் இந்து கழகம் தலைமை பணிமனையில் ஏற்பாடு செய்த இன கழகங்கள் அமைப்பு கூட்டத்தைப் பற்றியும் மலேசியா தமிழர்களுக்கும் மற்றும் இயக்கங்களுக்கும் தெரிவிக்காமல் மலேசியாத் தமிழர்களுக்கு கீழிருப்பு செய்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

ஏழு இனக் கழகங்களை அந்தந்த இனத்தின் பதிலாளாக(பிரதிநிதி) அழைத்த டத்தோ மோகன் சாண் எந்த ஒரு தமிழர் இன இயக்கங்களையும் அழைக்காமல் தான் தோன்றித் தனமாக தனக்குத் தானே தமிழர் இனத் தலைவராக முடி சூடிக்கொண்டு தமிழர் இனம் சார்பாக வேண்டலீடில் (மகசார்) கைப்பொமிட்டுள்ளார். இந்திய ஒருங்கிணைப்பில் தமிழர்கள் 75% பெரும்பான்மை என்பதாலும் இந்து கழகத்தில் உறுப்பினர்களில் 85% தமிழர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும் மலேசியா இந்து கழக 29 இயக்குநர்களில் 24 பேர் தமிழர் என்பதால் மலேசியா இந்து கழகம் தமிழர்களுக்கு பதிலாளாக (பிரதிநிதிப்பதற்கு) உரிமை உண்டு மற்றும்

வேண்டலீடில் (மகசர்) தமிழர் இனத் தலைவராக கையொப்பம் இட டத்தோ மோகன் சாணை ஏற்றுக்கொண்டணர் என்று இந்து கழக செயலாளர் திரு கணேசன் தங்கையா விளக்கம் அளித்துள்ளார், இது மாபெரும் ஒரு பித்தலாட்ட தனமாகும்! இதை மலேசியா இந்து கழகம் தன் முகநூலில் 8.2.17ல் இடுக்கையிட்டிருக்கிறது.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து 5.2.18 வரை தமிழர் இயக்கங்ளுக்கு எந்த தகவலை அளிக்காத டத்தோ மோகன் சாண், அவர் மீது தமிழர் தே(சி)ய செயல்பாட்டாளரும் தஞ்சோங் மாலிம் பேராங் இந்திய குமுக பொறுப்பாளர் திரு மைத்ரேயர் டத்தோ மோகன் சாணுக்கு எதிராக தலைமை(பிரதமர்) அமைச்சகத்திடம் தான் தான் தமிழர் இனத்தின் தலைவர் மற்றும் சுய தமிழர் என பொய்யுரைத்தார் என்று முதல் காவல்துறை புகாரை டத்தோ மோகன் சாணுக்கு எதிராக 07.02.18ல் செய்தப் பிறகே 9 மாதக் கால பொதுவிடுமுறை களப்பணிகளை இந்து கழக முகநூலில் வெளியிட்டிருக்கிறார்கள். தன்னை தமிழர் இல்லை என்று புகார் செய்துவிட்டார் என்பதால் இந்து கழகமும் அதன் தலைவர் டத்தோ மோகன் சாணும் இந்த தமிழர் இனச் சிக்கலை இந்து மத சிக்கலாக மடை மாற்றி அவரின் அரசியல் பணிக்கும் திரு மைத்ரேயருக்கும் அழுத்தத்தை கொடுப்பது கண்டிக்கதக்கது. மலேசியாத் தமிழர் பேரவை திரு மைத்ரேயர் அவர்களுக்கு அரணாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தான் தமிழர் இனத்தின் தலைவர் என்றும் தமிழும் மதமும் இரு கண்கள் என்று கூறிக்கொள்ளும் டத்தோ மோகன் சாண் தமிழர் நலனுக்கு இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் அவர் என்ன செய்திருக்கிறார்? தமிழ்ப்பள்ளிகளை அழிவுக்கு வித்திடும் இருமொழி பாடத்திட்டத்திற்கு வாய் திறக்காதது ஏன்? மூன்று இலக்கம் (இலட்சம்) தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோதும், இனப்படுகொலையான் இராச பக்சேவும், உடந்தையாக இருந்த மைத்திரி சிறிசேனாவும் மலேசியா வருகையின் போதும் மலேசியாத் தமிழர்களும் இயக்கங்களும் எதிர்த்தனர், போராட்டம் செய்தனர் அப்போதெல்லாம் மௌன சாமியராக இருந்துவிட்டு இப்போது நான் தான் திடீர் தமிழரினத் தலைவர் என்பது வேடிக்கையானது! மற்றும் இந்தியர் ஒருங்கிணைப்பில் 75% பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கும் போது ஏன் கோவில்களில் தமிழில் வழிப்பாடு இல்லை? இந்து கழக கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை? தமிழ் என் கண் என்று ஏமாற்றும் வேலையா? இந்து கழகத்தில் 85% உறுப்பினர்கள் என்பதால் தான் சுய தமிழன் என்று கூறும் டத்தோ மோகன் சாண் அவருடன் இணைந்து கையொப்பமிட்ட ஏழு இன கழகங்களில் இந்துக்கள் இல்லையா என்பதை விளக்க வேண்டும்!

அந்தந்த இன அமைப்புகளுக்கு அந்தந்த இனத்தை சேர்ந்தவர்கள் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் போது தமிழராக அல்லாத டத்தோ மோகன் சாண் எவ்வாறு தமிழர் இனத்திற்கு தலைவராக முடியும்?

26.01.18ல் மை தைம்சு எனும் முகநூல் நேரலை பேட்டியில் தன் தந்தை மலையாளி என்றும் தாய் தெலுங்கர் என்றும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்,  இருந்த போதும் தன்னை தமிழர் என்று இன மறைப்பு செய்வதையும் உண்மையை கூறிய மைத்ரேயரை உளவியல் அழுத்தத்தை கொடுப்பதையும் மலேசியாத் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது, எதிர்க்கிறது என்பதை பதிவு செய்கிறோம்.அதே நேரலையில் இந்து கழகம் நிறுவனம் (சுதாபனம்) என்றும் ஏன் இந்து மத துறை தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வினா எழுப்புகிறார்? ஆக இந்து கழகம் என்பது இந்து மத நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர தமிழர் இனத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு கிடையாது என்பது தெரிகிறது அதே வேலை எந்த மத அமைப்புகளும் இனத்திற்கு தலைமை வகிக்க முடியாது மற்றும் ஒரு இனத்தில் எல்லோரும் ஒரே மதத்தில் இருப்பவர்கள் இல்லை, ஆக இது சாத்தியமற்றது.டத்தோ மோகன் சாண் தமிழர் அமைப்புகளை அணுகாமல் தான் தோன்றித் தனமாக தமிழர் இன தலைவராக கையொப்பமிட்டதில் உள் நோக்கம் இருப்பதாகவே உணரமுடிகிறது.தமிழர் அமைப்புகளை அழைத்தால் இவரின் முன்னெடுப்பிற்கு தடைகல்லாக இருக்கும் என்று தயங்கியிருக்கலாம்.தீபாவளிக்கு இந்து, இந்தியர்களுக்கு பொதுவிடுமுறை உண்டு அதேப்போல் தைப்பூசத்திற்கு ஒன்பது மாநிலங்களில் விடுமுறையும் உண்டு! இவ்விடுமுறைகளும் இந்து இந்தியர்களுக்கான விடுமுறையாகவே இருக்கிறது.

ஏப்ரல் 14 விடுமுறை கிடைத்தால் மகிழ்ச்சி அடையப்போவது யார்? இந்துக்கள் மட்டுமே! இதே சுறவம்(தை) 1ல் பொங்கலுக்கு விடுமுறை கிடைத்தால் இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் எட்டு இனங்களும், கிருத்துவ மதத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் 97% இந்தியர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை இந்து கழகமும் அதன் தலைவர் டத்தோ மோகன் சாணும் மற்ற இன கழகங்களும் ஏன் சிந்திக்கவில்லை? வெறும் இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பிற சிறுபான்மையாக பிற மதத்தில் இருக்கும் தமிழர்கள் இந்தியர்கள் நலனை புறந்தள்ளும் மலையாளியான டத்தோ மோகன் சான் ஒரு காலமும் தமிழர் இனத் தலைவராக முடியாது என்பதே உண்மை!

“நல்லாண்மை என்பது ஒருவதற்கு தான் பிறந்த

இல்லான்மை ஆக்கிக் கொளல் – குறள் 1026″

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும் என்று திருவள்ளுவர் கூறுவதுப் போல தமிழர் இனத் தலைமையை தமிழர் பேரவை நாங்கள் மட்டுமே முடிவு செய்வோம்.

“தன் ஆயுதமும் தன்கைப் பொருளும் பிறர்கை கொடுக்கும் பேதையும் பதரே”

தன்னுடைய ஆயுதத்தை, பொருளை பிறர் ககையில் கொடுத்துவிட்டு பேதலித்து நிற்பவர் பேதை என்றால், தன் இதயத்தை எண்ணும் சத்தியை இன்னொருவரிடம் தந்துவிட்டு ஏமாந்த இளிச்சவாயர்களாக வாழ்வது எத்தனை ஏமாளித்தனமானது என்று நறுந்தொகை கூறுவதுப் போல இனியும் தமிழர்கள் ஏமாற போவதுமில்லை. 11.02.2018 அன்று தமிழர் அமைப்புகள் ஒன்று கூடி ஒரு மனதாக, தமிழர் இனப் பதிலாலாக (பிரதிநிதி)  தமிழர் பேரவை என்று முடிவு செய்யப்பட்டது, இந்த தமிழர் பேரவை அமைப்பது என்பது கடந்த ஆண்டு ஆறாம் மாதத்திலிருந்து தொடங்கப்பட்ட பணியாகும் மற்றும் பேரவையின் தலைமை பொறுப்பாளராக அ.ஆ தமிழ்த்திரு அவர்களை ஏற்று அறிவிக்கின்றோம். இனி எந்த தமிழர் சார்ந்த சிக்கலானாலும் தமிழர் பேரவையே முடிவெடுக்கும். அதே வேளையில், டத்தோ மோகன் சாண் தமிழர் இனத் தலைவர் அல்ல என்பதனையும் அந்த விடுமுறை ஆவணத்தில் தமிழர் இன பதிலாலின் கையொப்பம் இல்லை என்பதனையும் டத்தோ எங் கெய் கவனத்திற்கு தமிழர் பேரவை கொண்டுச்செல்லும்.

இனிமேலும் டத்தோ மோகன் சாண் இதுப் போன்று இனமறைப்பு செய்து தமிழர் இனத்தின் தலை மீது மிளகாய் அரைக்க பார்க்க வேண்டாம் மற்றும் டத்தோ மோகன் சாண் செய்த தவற்றை பொறுப்பேற்று மலேசியாத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் அதோடு இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் பிற இன தலைவர்கள் இது போன்ற தவறான செயலுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.திரு மைத்ரேயர் செய்த புகாரை தொடர்ந்து மலேசியா தமிழர்களும், இயக்கங்களும் டத்தோ மோகன் சாணுக்கு எதிராக காவல்துறை புகார் செய்திருக்கின்றனர் மேலும் புகார்கள் செய்யப்படும்.

தமிழர் இனம் பிற இன மக்களுக்கு எதிரிகளோ பகையாளிகளோ அல்ல ஆனால் தமிழர் என்றப் பெயரில் தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டாம் என்று தான் கூறுகின்றோம். அவரவர் இன அடையாளங்களோடும் உரிமைக்காகவும் ஒன்று சேர்ந்தே ஒற்றுமையாக போராடுவோம்.

மலேசியா தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் பேரா, மகாகவி முத்தமிழ் கழகம் சொகூர், மலேசியா நாம் தமிழர் இயக்கம், மலேசியா தமிழர் களம், தமிழர் கழகம் மலேசியா, தமிழர் ஒற்றுமை இயக்கம் கோலாலம்பூர் & சிலாங்கூர், மலேசியா வள்ளுவம் இயக்கம், கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், மலேசியா வீரத்தமிழர் முன்னணி மற்றும் மலேசியா தொழில்திறன் மேம்பாட்டு கழகம் போன்ற அமைப்புகள் நேரில் கலந்துக்கொண்டும், காலச்சூழலால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போன தமிழ் காப்பகம், மலேசியாத் தமிழர் சங்கம், உலகத் தமிழர் தொல்காப்பிய மன்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி கழகம் சார்ந்த அமைப்புகளும் பேராதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.