அஸ்மின்: மலேசியாவில் சீனாவின் முதலீடு வரவேற்கப்பட வேண்டியது

சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலி, மலேசியாவில் சீனாவின் முதலீடு வரவேற்கப்பட வேண்டியது என்றார்.

சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (ஃப்.டி.ஐ.) விமர்சித்து வரும் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் கருத்துக்கு மாறாக, சீனாவின் முதலீடு நம் நாட்டிற்குப் பயனளிக்கும் என அஸ்மின் நினைக்கிறார்.

“சீனா பொருளாதார சக்தியாக வளர்ந்து வருவதையும், மலேசியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக உருவாகியுள்ளதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“சீனாவின் ‘ஓன் பெல்ட் ஓன் ரோட்’ (ஓபோர் – OBOR- One Belt, One Road) முயற்சியானது, ஆசிய மற்றும் ஆசியான் நாடுகளுக்கான கதவுகளைத் திறந்து, நம்முடன் பொருளாதார உறவுகளை இணைக்க விரும்புகிறது, எனவே அவர்கள் இங்கு முதலீடு செய்வதை நாம் வரவேற்க வேண்டும்,” என்று நன்யாங் சியாங் பாவ்-உடன் ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

ஓபோர், உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சீனா ஆரம்பித்த ஒரு திட்டமாகும்.

மலேசியாவில், கிழக்குக் கடற்கரை இரயில் பாதை திட்டம் (இ.சி.ஆர்.எல்.), மலேசியா-சீனா குவாட்டர் தொழிற்சாலை பூங்கா, மலாக்கா கேட்வே மற்றும் மலேசிய ஷியாமென் பல்கலைக்கழகம் போன்றவை ஓபோர் திட்டங்களில் அடங்கும்.

நாட்டின் அதிக நிலங்கள் அயல்நாட்டிற்குச் சொந்தமாவதும் உள்ளூர் நிறுவனங்களுக்குப் பாதகம் விளைவிக்கும் என்பதாலும், சீனாவின் ஃப்.டி.ஐ. திட்டங்கள் நமக்கு முக்கியப் பிரச்சனையாகத் தெரிகிறது.

சீன முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தைக்கு நன்மை தரும் என்று தீர்மானித்துள்ள அரசாங்கத்தின் கொள்கைகள் மிக முக்கியமானவை என்று அஸ்மின் கூறினார்.

“இந்த நேரத்தில், இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க இது சிறந்த வழி.

“முக்கிய விஷயம் என்னவென்றால், சீனாவின் முதலீடு மதிப்பு அளிக்கும், சிலாங்கூர் மக்கள் நலனுக்காக உதவும் என்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் (ஜிஇ) வெற்றி பெற்றால், சீன நிறுவனத்தின் திட்டங்களை ஹராப்பான் மறு மதிப்பீடு செய்து, இலாபமற்றதாகக் கருதப்படும் திட்டங்களை இரத்து செய்யக்கூடும் என்று மகாதிர் அறிவித்துள்ளார்.