வளமான நாட்டை உருவாக்குவோம், சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஹாடி

சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வளமான, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப மலேசியர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தியோங்ஹுவா இனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“வளமான, அமைதியான மற்றும் செழிப்பான மலேசியாவை உருவாக்க நாம் தயாராக வேண்டும்” என்று தனது சீனப் புத்தாண்டு செய்தியில் ஹாடி கூறினார்.

இஸ்லாம் அடிப்படையில், மூன்று மாநிலங்களைப் பாஸ் நிர்வாகம் செய்தபோது, இனப் பாகுபாட்டை ஒருபோதும் நடைமுறைப்படுத்தியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“பாஸ் நிர்வாகத்தின் கீழ், கிளாந்தான் (1959-1979, 1990 – இன்றுவரை) , திரெங்கானு (1959-1963, 1999-2004) மற்றும் கெடா (2008-2013) ஆகிய மாநிலங்கள் இருந்தபோது, நாம் இனப்பாகுபாடு இல்லாமல், இஸ்லாமிய கொள்கையில் வெற்றிகரமாக ஆட்சி செய்து வந்தோம்.

“முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களை இடிக்கவில்லை, பாஸ் அவர்களுக்கு நியாயமான ஆதரவை வழங்கியது, அதனால் மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தியது, இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்றாலும்,” என்று அவர் கூறினார்.

இஸ்லாம் அதனைப் பின்தொடர்பவர்களுக்கு இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மக்களின் நம்பிக்கை மற்றும் நியாயத்தை நிறைவேற்றுவதைப் போதிப்பதாக அவர் தெரிவித்தார்.