இல்ஹாம் : வாக்காளர்கள் இரு-கட்சி முறையை விரும்புகின்றனர்

14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் அல்லது ஹராப்பான் இரண்டில் ஒன்றுக்கு வாக்களித்து, இரு கட்சி முறையைத் தேர்வு செய்வதன் வழி, வாக்காளர்கள் பி.எஸ்.எம். மற்றும் பாஸ்-ஐ புறக்கணிப்பர் என்று ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார்.

“இரு கட்சி அமைப்பு முறையை வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளதால் பாஸ் மற்றும் பி.எஸ்.எம். இரண்டும் ஓரங்கட்டப்படும். இரு இராட்சதர்கள், பிஎன் மற்றும் ஹராப்பான் ஆகியோர் ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள்,” என இல்ஹாம் இயக்கத்தைச் சேர்ந்த ஹிஷாமுடின் பாக்கார் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியலமைப்புச் சட்டங்களை உள்ளடக்கிய அரசியல் கட்சி கூட்டணிகளின் செயல்திறன் பற்றி கேட்டபோது, அந்த ஆய்வாளர் இதைக் கூறினார்.

பாஸ் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகி, சில அரசு சாரா அமைப்புகளை ஒன்றிணைத்து, ‘காகாசான் செஜாத்திரா’ அமைப்பை உருவாக்கியது.

மலேசிய சோசலிசக் கட்சியும் இடதுசாரி கூட்டணியின் கீழ், பல அரசு சாரா இயக்கங்களை ஒருங்கிணைத்துள்ளது. பக்காத்தான் ஹராப்பானுடன் இணைவதற்கான பி.எஸ்.எம். முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

மலேசியாவின் மேற்குக் கடற்கரை மாநிலங்களில், பாஸ் தனது இடங்களை இழக்க நேரிடும் என்பதை ஹிஷாம்முடின் வலியுறுத்தினார்.

“பெர்லிஸ் முதல் ஜொகூர் வரையில் பாஸ் தனது இடங்களை இழக்கக்கூடும். கிளந்தானிலும் திரெங்கானுவிலும் பாஸ் தனது இடங்களைத் தக்கவைத்துகொள்ளும் என்பதுபோலான அறிகுறிகள் தெரிந்தாலும். இப்போதைய நிலை பாரிசானுக்கே சாதகமாக உள்ளது,” என்றார் அவர்.

கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து, 28 ஆண்டுகளாக பாஸ் கிளாந்தானை நிர்வகித்து வருகிறது.

பி.எஸ்.எம். அதிக ஆபத்தை எதிர்கொள்கிறது, ஏனென்றால் எந்தவொரு தாக்கத்தையும் உருவாக்க, அதன் வேட்பாளரின் ஆளுமையை மட்டுமே அது நம்பியிருக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

“அரசாங்கத்தை அமைக்க அவர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லாததால், வேட்பாளர் ஆளுமை மற்றும் சேவையை மட்டும் அவர்கள் நம்பியிருக்க வேண்டும்,” என்றார் அவர்.

‘#உண்டிரோசாக்’ பிரச்சாரம்

#உண்டிரோசாக் பிரச்சாரத்தைப் பற்றிய மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், பி.எஸ்.எம். வேட்பாளர்கள் இப்பிரச்சாரத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்று அவர் கூறினார்.

“ஒன்று, #உண்டிரோசாக் பிரச்சாரகர்களில் அதிகமானவர்கள் பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள். இரண்டு, புவியியல் அடிப்படையில் இவர்கள் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள், ஆனால் கிராமப்புற இடங்களிலேயே இவர்கள் போட்டியிடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

#உண்டிரோசாக் பிரச்சாரத்தைப் பயனற்ற ஒன்று என்று அவர் நிராகரித்தார்.

“சேதமாக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்தவொரு கட்டமைப்பும் இல்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக இல்லை. ஆக, இது அர்த்தமற்ற ஒன்று.

“இப்போது அவர்கள் பிஎன் மற்றும் ஹராப்பானை எதிர்ப்பதற்காக இதனை ஒரு சின்னமாக இலக்கு வைத்துள்ளனர்.

“அவர்கள் இடதுசாரியினர், முன்னர் ‘அம்னோவைத் தவிர எது வேண்டுமானாலும்’ இயக்கத்தை முன்னெடுத்து எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள், பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதிர் முகமட்டை அறிவித்ததில் ஏமாற்றம் அடைந்தவர்கள்.”

“மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்தால் ஒழிய, அவர்களின் ஈர்ப்பைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

பெரித்தா டெய்லி