2018-ல் மலேசியர்கள் எதிர்நோக்கவிருக்கும் சவால்கள்

சிவராஜன் ஆறுமுகம், மலேசிய சோசலிசக் கட்சி

ஒவ்வொரு ஆண்டும், அம்னோ-பாரிசான் அரசாங்கம் முன்னெடுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளின் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் சவாலானதாகிவிடுகிறது. அதேசமயம், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாற்று நிர்வாகமும், இரண்டு தவணைகளாக மாநிலங்களில் எந்தவொரு கணிசமான மாற்றமும் இல்லை என்பதையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

ஆக, 2018-ம் ஆண்டும் மக்களுக்கு ஒரு சவால் நிறைந்த ஆண்டாகவே இருக்கப்போகிறது, அது எந்தக் கட்சியின் நிர்வாகமாக இருந்தாலும்.

மக்கள் எதிர்நோக்கவிருக்கும் சவால்கள் என்னென்ன?

  1. பொதுத் தேர்தல் (ஜிஇ) ஆண்டு

பெரும்பான்மை அரசியல்வாதிகள் – ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி –  எதிர்பார்த்துக்கிடந்த 14-வது பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டது, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கூட தேர்தல் நடத்தப்படலாம்.

ஜிஇ14-ல் அரசியல்வாதிகள் உற்சாகமாக இருந்தாலும், கடந்த ஜிஇ -12 மற்றும் ஜிஇ -13 உடன் ஒப்பிடுகையில், ஜிஇ-14-ல் மக்களின் உணர்வுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளைப் பார்த்தப் பின்னர், பல்முனைப் போட்டி நடைபெறவுள்ளதை எண்ணி அநேகமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆக, நஜிப்பை வீழ்த்துவதற்கு மக்கள் ஆர்வமுடன் இருந்தாலும், உண்மையில் பிஎன்-இன் வெற்றி பிரகாசமானதாகவே உள்ளது. காரணம், மக்களின் வாக்களிப்பு உணர்வுகள் பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது, அவை:

  1. பாஸ் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் எவ்வாறு வாக்களிக்க உள்ளனர்?
  2. மலாய்க்காரர்களின் வாக்குகள் மூன்றாக உடையப்போகிறது – பிஎன் , ஹராப்பான் , பாஸ்
  3. எதிர்க்கட்சியனரை ஆதரிக்கும் , மகாதீரை வெறுக்கும் சீனர்களின் வாக்குகள்
  4. குழப்பத்தில் சிக்கிக்கொண்ட சீர்திருத்த (ரிஃபோர்மாசி) தலைமுறையினர் – பிகேஆர் மற்றும் ஹராப்பானை ஆதரித்து, மகாதீரை ஏற்க முடியாத நிலை
  5. மகாதீரை ஹராப்பான் தலைவராக நியமித்து, எதிர்க்கட்சி தங்கள் போராட்டத்திற்குத் துரோகம் விளைவித்துவிட்டதாக எண்ணும் இளைய தலைமுறை
  6. பிஎன் மற்றும் ஹராப்பான் மீது அதிருப்தி கொண்டு, ஓட்டுப்போட விரும்பாத நடுத்தரவர்க்க வாக்காளர்கள்

இதுபோன்ற கலவையான உணர்வுகளுடன், ஜிஇ-14 முடிவை கணிப்பது கடினமான ஒன்று.

  1. நாட்டின் பொருளாதாரம்

பொதுத் தேர்தலின் முடிவுகள், மக்களின் வாழ்வாதாரத்தில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என மக்கள் எண்ணுகின்றனர். எண்ணெய் விலை மற்றும் பிற பொருட்களின் வீழ்ச்சியினால்,  மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, 2018-ல் 5.5%-லிருந்து 5% -ஆக குறையுமென, ‘குளோபல் எகனோமிக் அவுட்லுக்’  ஆய்வுகள் கூறுகின்றன.

ஐரோப்பியப் பகுதிகள், சீனா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளால் சர்வதேச பொருளாதாரம் நிர்ணயிக்கப்படும். எனவே, வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகளுடன் இலவச வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளும் போட்டியில் உள்ளன. அதே நேரத்தில், அவர்கள் மக்களின் உரிமைகளையும், தேசிய இறையாண்மையையும் தியாகம் செய்யவும் துணிந்துவிட்டனர். 2018-ஆம் ஆண்டு, சீனாவுடன் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (ஆர்சிஇபி) அல்லது அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டு, பசுபிக் வட்டாரப் பங்காளித்துவ வாணிப  திபிபிஏ ஒப்பந்தங்கள்கூட வெற்றிகரமாகச் செய்யப்படலாம்.

  1. தொழிலாளர்களின் நிலை

மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (எம்.இ.ஃப்) கூற்றுப்படி, பெரும்பாலான முதலாளிகள் புதியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தயங்குவதோடு; தங்கள் வணிக செலவினங்களைக் குறைப்பதற்கான வழியாக, தொழிலாளர்களைக் குறைக்க எதிர்பார்க்கிறார்கள்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் லெவி கட்டணத்தை முதலாளிகள் செலுத்துதல், மூலப்பொருட்களின் விலைகள், போக்குவரத்து மற்றும் பலவற்றின் விலை ஏற்றங்களால், இவ்வாண்டின் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாண்டு ஜனவரி 1 தொடக்கம், அமல்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு காப்புறுதி திட்டத்தில், முதலாளிகள் பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது குறித்து, அவர்கள் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால், முதலாளிகள் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தொழிலாளர் பணிநீக்க காப்புறுதி திட்டம் (எஸ்.ஐ.பி) வாயிலாக அவர்களுக்கு எலவன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. எஸ்.ஐ.பி.-ஐ வழிநடத்தும் சொக்சோ, தொழிலாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக பணம் செலுத்தியிருந்தால்தான்,  காப்புறுதி நலன்கள் பெற தகுதியுடையவர்கள் என்று கூறியுள்ளது. ஆனால், 2018-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட வேண்டுமென நாம் கோரியிருக்க வேண்டும்.

  1. குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்குமா?

இவ்வாண்டு, குறைந்தபட்ச சம்பளத்தை மறுசீரமைக்கும் ஆண்டாகும். மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும், தேசியச் சம்பள ஆலோசனைக் கௌன்சில், அரசாங்கத்திடம் குறைந்தபட்ச சம்பள உயர்வை முன்வைக்கும் முன் பலதரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. ஆனால், எம்.இ.ஃப் – இடமிருந்து இதற்கு பெருத்த எதிர்ப்பு வரும் என்று நாம் எண்ணுகிறோம்.

ஆனால், அதேசமயம் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளின் சம்பள அதிகரிப்பு குறித்து நாம் விவாதித்தால், அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஓர் உயர் மேலாண்மை நிர்வாகி, மாதம் ரிம 45,000 சராசரி சம்பளத்தைப் பெறுகிறார் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஒரு சதாரணத் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளத்தைவிட, 45 மடங்கு அதிகம் ஆகும்.

மலேசிய சோசலிசக் க்ட்சி குறைந்தபட்ச சம்பளமாக, மாதம் ரிம 1,500 வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.

  1. பொருள் மற்றும் சேவைகளின் விலை ஏற்றம்

2018-ல், அடிப்படை பொருள்கள் மற்றும் பொதுச்சேவைகள் விலை ஏற்றம் கண்டன. உள்நாட்டு எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், மற்ற எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏற்றம் காணும்.

2018-ல், மின் கட்டணங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். அண்மையில், எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர் அமைச்சர், மெக்சிமஸ் ஓங்கிலி, 2020-ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவில் 38.53 சென் / கிலோவாட் / மணிக்கு மின்சார கட்டணங்கள் பராமரிக்கப்படும் என்று கூறியிருந்தாலும், அது ஜிஇ-14 நெருங்கிவரும் வேளையில், மக்கள் கோபத்தைத் தடுக்க அவர்கள் அரசியல் ரீதியாக செய்வதாகவே தோன்றுகிறது.

தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் கட்டணம், உலகப் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு விலைகளைச் சார்ந்து இருப்பதால், ஜிஇ-14 முடிந்தவுடன் திஎன்பி, மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த வாய்ப்புள்ளது.

  1. கட்டுப்படி விலை வீடு – பார்வைக்கு மட்டும்தானா?

2018-ல், மலேசியாவில் வீடுகளின் விலைகள், தொடர்ந்து மலேசியர்கள் வாங்கும் வகையில் கட்டுப்படியாக இருக்காது என்று சொத்து விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்தின் முயற்சியிலான பிரிமா வகை வீடுகளும், வாங்கும் விலைக்கு உட்பட்டு இருக்காது.

எனவே, சொந்த வீடுகள் இல்லாத மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினரின் என்ணிக்கை அதிகரிக்கும். மக்களின் வாங்கும் திறன் குறையும் போது, வாங்குவோர் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வீடுகளை வெளிநாட்டவர்கள் முதலீடாக வாங்க அரசாங்கம் ஊக்குவிக்கும்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, வங்கிகளும் ஏல நடைமுறை மூலம் பழைய வீட்டை விற்க முனையும். மேலும், கடன் வாங்கியவர்களிடம் வங்கி கடுமையாக நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. ஆக, ஏலம் விடுவதன்வழி, சதாரண மக்கள் வீடுகளை இழக்கும் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

  1. மனித உரிமைகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு பணிகளின் கட்டமைப்பும் நோக்குநிலையும் மாற்றமடையாத வரை, மக்களின் மனித உரிமைகள் எப்போதும் பாதிப்புக்குள்ளாகும், அதனை எதிர்த்துப் போராட வேண்டிவரும், 2018-லும் இந்நிலை தொடரும்.

அதேபோலவே 2018-லும், கிராம நிலத்தைப் பறிமுதல் செய்வது, பழங்குடி மக்களின் பாரம்பரிய நிலங்களை அழித்தல், போலிசாரின் அதிகாரத் துஷ்பிரயோகம், நகர முன்னோடிகளின் வீடுகளை இடித்துத் தள்ளுதல், அரசாங்க விமர்சகர்கள் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் வழி வழக்கு தொடுத்தல் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியப் பல சவால்கள் இருக்கும்.

பொருளாதார வாய்ப்புகள் பதட்ட நிலைக்குத் தள்ளப்பட்டால், முதலாளிகள் மேலும் பேராசைக்கொண்டு நிலங்களைக் கொள்ளையடிப்பர்; சுற்றுச்சூழலை அழித்து, தங்கள் இலாப நோக்கங்களைத் தடுக்கின்றவர்களை முதலாளித்துவம் அடக்கும்.

  1. மேம்பாடு என்பது யாருக்காக?

2017-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னதாகவும், அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பெருந்திட்டங்கள், இவ்வாண்டு தொடரும். பிஎன் அல்லது ஹராப்பான் மாநில அரசு, இரண்டுமே மக்களை ஓரங்கட்டி, குரோனிகளைப் பணக்காரர்களாக்கும் மெகா திட்டங்களைத் தொடர்வார்கள்.

சிலாங்கூரில், ஒதுக்கப்பட்ட காடுகளை அழித்து, பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்கள் நடந்துவருகின்றன. பினாங்கில், கடலை மூடி சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடுமட்டுமின்றி, பிறை மற்றும் பினாங்கு தீவுக்கு இடையிலான நிலத்தடி சுரங்கப்பாதை திட்டம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

கிளந்தான், நெகிரியில் மற்றும் பஹாங், தெலோம்மில் ஹைட்ரோ எலக்ட்ரி அணை கட்ட, ஆயிரக்கணக்கான பூர்வக்குடியினர் தங்கள் பூர்வீக நிலத்திலிருந்து துரத்தி அடிக்கப்படவுள்ளனர். இன்னும் இதுபோன்ற பல்வேறு ஹைட்ரோ எலக்ட்ரி அணைகட்டுகள் சபாவிலும் சரவாக்கிலும் திட்டமிடப்பட்டுள்ளன.

இங்கு நமது கேள்வி என்னவென்றால், இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் எல்லாம் உண்மையில் யாருக்காக?

முதலாளித்துவ செல்வந்தர்களையும், அவர்களோடு சேர்ந்து சதிசெய்யும் அரசியல்வாதிகளையும் வளர்க்கும் பொருளாதார நோக்கங்களுக்காக, சாதாரண மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படவுள்ளனர்.

சவால் பெரியதாக இருந்தாலும், அநீதிக்கு எதிராக போராட மக்கள் தயாராக உள்ளது ஊக்கமளிக்கிறது. பூர்வக்குடிகள் தொடங்கி, பலதரப்பட்ட இளைஞர்கள் வரை தங்கள் உரிமைகளைத் தக்கவைத்துகொள்ள போராடத் தயாராக உள்ளனர். பிஎன் மற்றும் ஹராப்பான் தலைமைத்துவத்திலான நிர்வாகங்களை அனுபவித்த மக்கள், அரசியல் பிராண்ட் இனி முக்கியமானதல்ல என்பதை உணர தொடங்கிவிட்டனர்.  இந்தப் பிராண்ட்-க்குப் பின்னால் இருக்கும் சித்தாந்தமும் அரசியலும்தான், அக்கட்சி மக்களுக்கு ஆதரவாகவா அல்லது இலாப நோக்குடைய நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்யவுள்ளதா என்பதைத் தீர்மானிக்கிறது.

எதுவாக இருந்தாலும், நாம் தயாராக இருக்கவேண்டும். சாவால்களைச் சமாளிக்க மக்களைத் தயார்படுத்த வேண்டும், ஒடுக்குதலுக்கு எதிராக போராடி, நமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

மக்களோடு இணைந்து போராட வேண்டும்!