காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமையும்: எடப்பாடியார் நம்பிக்கை

கோவை : மத்திய அரசு அடுத்த ஆறு வாரங்களுக்குள் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி நதி நீர் விவகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், இந்தத் தீர்ப்பில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கது. சில விஷயங்கள் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது. தற்போது வந்துள்ள தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் நதிகள் எந்த மாநிலத்திற்கும் சொந்தம் அல்ல. அது தேசியச் சொத்து என தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் மூலம் நமது பாசனப்பரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் ஏக்கர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

எதிர்க்கட்சிகள் சொல்லி இருப்பது போல அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டினாலும், இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய இயலாது. அதனால் சட்டவல்லுனர்களுடன் பேசிய பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: