பிகேஆர் : ஹிஷாம் ‘ஆணவம்’ பிடித்த அமைச்சர்

தேசிய சேவை பயிற்சித் திட்டம் குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளின் விமர்சனத்தைத் தள்ளுபடி செய்த பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன்னின் செய்கையை “ஆணவம் மற்றும் திமிர்’ தனம் என்று பிகேஆர் கூறியுள்ளது.

பிகேஆர் துணைத் தலைவர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அக்கின், இராணுவத் துறையில் அனுபவம் வாய்ந்த தரப்பினரின் கருத்துக்களை ஹஷிமுடின் பகுத்தறிய வேண்டும் என்று கூறினார்.

“அவர்கள் பேசுகிறார்கள் என்றால், நாட்டிற்கு சிறந்தது, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே அடையாளத்தை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

“ஆக, எந்தவோர் உறுப்பினர் அல்லது முன்னாள் இராணுவவீரர்கள் குரல் கொடுத்தாலும், ஹிஷாமுடின் இப்படிதான் குற்றஞ்சாட்டுவாரோ?” என்று புக்கிட் கட்டில் எம்.பி.-யுமான அவர் கேட்டார்.

முன்னதாக, அரசு சாரா ஓய்வுபெற்ற தேசிய நாட்டுப்பற்று சங்கம் (பெட்ரியோட்) உறுப்பினர் மேஜர் இஸ்மாயில் ஃபெய்ஷோல், தேசிய சேவை பயிற்சித் திட்டம் ‘விடுமுறைக்கால உல்லாசப் பயணம்’ போல் உள்ளது என்று கூறியதோடு, அதன் பயிற்சியாளர்களின் நாட்டுப்பற்று குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், தலைமைத்துவம் மற்றும் நாட்டுப்பற்று குறித்து ஒரு பயிற்சி பட்டறையும் நடத்த வேண்டுமென்று பெட்ரியோட்டிக் ஆலோசனையும் வழங்கி இருந்தது.

பெட்ரியோட்டிக் தேசபக்திப் பட்டறையை நடத்த திட்டமிட்டுள்ளது, அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிரானது என ஹிஷாமுடின் ஹுசைன் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

ஹிஷாமுடினின் அறிக்கையானது முன்னாள் படைவீரர்களின் நாட்டுப்பற்றைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது, தேசியப் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அவர்களின் சேவையையும் பக்தியையும் சிதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்று ஓர் அறிக்கையில் இன்று ஷம்சுல் தெரிவித்தார்.