பொதுத் தேர்தல்: குறி சொல்லும் துணைப் பிரதமர்

‘ஞாயிறு’ நக்கீரன்- குறி பாக்கலையோ…? குறி” என்று கூவியபடி குறி சொல்லும் பெண்களும் மலையாள பகவதியை வணங்குவோர் என்று கருதப்படும் மலைக் குறத்தியரும்

கையில் ஒரு கருங்கோலை ஏந்தியபடி வீதியில் வலம் வருவதையும் அவர்கள் தாங்களாகவே பொது மக்களை அணுகி குறிபார்க்கும்படி கேட்பதையும் நாம் பார்த்திருப்போம்.

தலைநகரத்து லெபோ அம்பாங் வீதியிலும் பத்து மலை திருத்தல வளாகத்திலும்கூட இப்படிப்பட்ட பெண்களை நாம் அவ்வப்பொழுது பார்க்க இயலும்.

அப்படிப்பட்டவர்களிடம் நாம் கையை நீட்டினால் போதும், உடனே இறுகப் பற்றிக் கொள்வார்கள். அடுத்து, உடனடியாக அவர்கள் சொல்லும் கருத்து.. ..,

“ஐயா, ஒங்களுக்கு கூடப் பொறந்தவனங்க யாரு இருந்து என்ன பிரயோஜனம்?  ஒங்க கையை ஊன்றித்தான் நீங்க கரணம் போடனும்; உங்களோட மனசுல ஏதோ கொஞ்சம் சஞ்சலம் இருக்கு; அதுனால கொஞ்ச நாளா நிம்மதி கொறஞ்சி இருக்கீங்க” என்பார். இதில் பெண்ணாக இருந்தால், ஐயா என்பதற்குப் பதில் அம்மா என்பார். அவ்வளவுதான். இதைக் கேட்ட மாத்திரத்தில் நமக்கு உச்சி குளிர்ந்துவிடும்.

‘ஆமா, சரியாத்தான் சொல்றாங்க’ என்று நாம் கருதுவோம். இந்தக் கருத்து வாழ்க்கை பயணத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை பேருக்கும் பொருந்தும்.

அடுத்து என்ன?

நாம் மதி மயங்கி குறி சொல்லும் பெண்ணிடம் வசமானதும், பற்றிக் கொண்ட நம் கையை விட மாட்டார். நம்மிடம் இருந்தே நம் குடும்பக் கதைகளைக் கேட்டு அதற்கு ஏற்றவாறு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லியோ அல்லது ஏதாவது ஒரு வண்ணக் கயிற்றை மஞ்சள் அல்லது கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் கொடுத்து நம்மிடம் கறக்க வேண்டியதை கறந்து கொள்வார்.

சில வேளைகளில் சம்பந்தப்பட்ட பெண்களே நம் கைகளில் வாஞ்சையோடு கட்டி விடுவதும் உண்டு. இதில் எல்லாம் பரவசப்பட்டு ஏமாந்த நிலையில் நாம் பணத்தைக் கொடுத்து விட்டு அகன்றதும்..,

ஓர் இளித்தவாயனை மடக்கி பணம் பிடுங்கியாகிவிட்டது. இனி அடுத்த ஆளைத் தேடுவோம் என்ற பாவனையில் தோளில் மாட்டிய பையுடனும் கையில் ஏந்திய கோலுடனும் ஒவ்வொருவரின் முகத்தையும் உற்று நோக்கியபடி ஆள் நடமாட்டம் அதிகம் இருந்தால் ஓர் இடத்தில் காத்திருப்பர்; குறைவாக இருந்தால் இவர்கள் தேடி அலைவர்.

ஆனாலும், மனித மனதை எடை போட்டறியும் ஆற்றல்மிக்க அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். நான் நலமாக இருக்கிறேன்; நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்; எனக்கு பிரச்சினை என ஏதுமில்லை என்றெல்லாம் ஒரு மனிதனும் பளிச்சென சொல்லப்போவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு வகையில் சிக்கலும் தடுமாற்றமும் இருக்கத்தான் செய்யும். இந்தச் சூழலைத்தான் இலாவகமாக குறி சொல்வோர் பயன் படுத்திக் கொள்கின்றனர். பலனும் அடைகின்றனர்; சில வேளைகளைல் ஆளைப் பார்த்து ஏமாற்றவும் செய்கின்றனர்.

ஏறக்குறைய இவர்களைப் போலத்தான் நாட்டின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜாகிட் அமிடி வரும் பொதுத் தேர்தல் குறித்து அடிக்கடி குறி சொல்லி வருகிறார்.

கடந்த ஆண்டின் நிறைவுப் பகுதியில், சீனப் புத்தாண்டைத் தொடர்ந்து நமக்கெல்லாம் இன்னொரு பெருநாள் வருகிறது. அப்போது, தேசிய முன்னணியை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று பொதுவாக நாட்டு மக்களையும் குறிப்பாக சீன சமூகத்தினரையும் கேட்டுக் கொண்டார்.

சீனப் புத்தாண்டிற்குப் பின் நாடாளுமன்றம் களைக்கப்படக்கூடும் என்றுகூட ஒரு கட்டத்தில் ஆரூடத் தகவலைச் சொன்னார். இப்பொழுது, சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிகின்ற நிலையில், நோன்புத் திருநாளுக்குள் இன்னொரு பெருநாளை நாமெல்லாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்று 14-ஆவது பொதுத் தேர்தல் நோன்புத் திருநாளுக்கு முன் நடைபெறும் என்று பூடகமாகச் சொல்கிறார்.

முடியாட்சியும் குடியாட்சியும் இயைந்த நவீன மலேசியாவின் உச்சத் தலைவர் மாமன்னர்தான் என்றாலும் நிர்வாக அடிப்படையில் நாட்டை வழிநடத்துவது என்னவோ பிரதமர்தான். அதேவேளை, துணைப் பிரதமரும் நிர்வாக அடிப்படையில் தலைமையான இடத்தில் இருப்பதுடன் முக்கியமான நடப்பும் நிலவரமும் அவருக்கு உறுதிபட தெரியவரும்.

அப்படித் தெரிந்தால் ஒரு தகவலை பளிச்சென சொல்ல வேண்டும்; இல்லாவிடில் தவிர்க்க வேண்டும். அதைவிடுத்து, குறி சொல்லும் பெண்களைப் போல “பெருநாள் வருகிறது”, “பெருநாள் வருகிறது” என்று சொல்வதில் பொருள் இல்லை. 14-ஆவது பொதுத் தேர்தல் என்னும் பட்டத்து யானை வருவதுதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிகிறதே. காரணம், மணியோசை அந்த அளவிற்கு பலமாகக் கேட்கிறது.

தேர்தல் நாளை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். ஆனால், துணைப் பிரதமராக இருப்பவர் எந்த மாதத்தில் எந்த வாரத்தில் தேர்தல் இடம்பெறும் என்பதை பூடகமாகத் தெரிவித்தால் அதில் பொருள் உண்டு. அதைவிடுத்து, “பெருநாள் வருகிறது”, “பெருநாள் வருகிறது” என்னும் குறி சொல்லும் போக்கு துணைப் பிரதமருக்கு பொருத்தமாக இல்லை;