குவான் எங்கிற்கு ரிம185,000 இழப்பீடு கொடுக்க எப்இஸட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு

 

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் டான் கோக் பிங் ஆகிய இருவருக்கும் தற்போது மூடப்பட்டுவிட்ட செய்தித் தளம் எப்இஸட்.கோம் (FZ.com) மற்றும் அதன் நிருவாக ஆசிரியர் டெரன்ஸ் பெர்ணான்டஸ் மொத்தம் ரிம320,000 இழப்பீடு கொடுக்கும்படி பினாங்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த அவதூறு வழக்கு ஜனவரி 3, 2014 இல். பெர்ணான்டஸ் எழுதி எப்இஸட்.கோம் வெளியிட்டிருந்த “மெர்க் வாங்கியது மீது எம்எசிசி விசாரணை தொடங்கியது” என்ற தலைப்பிலான கட்டுரை சம்பந்தப்பட்டதாகும்.

இக்கட்டுரையில் லோவி மோட்டோர்ஸ் செண்ட். பெர்ஹாட் மற்றும் மற்றும் அந்நிறுவனத்தில் பங்கு ஈடுபாடுடைய டான் ஆகியோரிடமிருந்து பினாங்கு அரசாங்கம் வாங்கியதாக கூறப்படும் வெள்ளி நிறத்திலான மெர்ஸடீஸ்-பென்ஸ் S300L காருக்கும் உள்ள தொடர்பை அறிய எம்எசிசி ஆணையம் முனைகிறது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினமே எம்எசிசி வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த கார் குவான் எங்கிற்காக வாங்கியது பற்றி விசாரிக்கப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டது என்பதை மறுத்தது.

இந்த வழக்கு விசாரணியின் போது குவான் எங் குற்றச்சாட்டை மறுத்தார். வழக்கு விசாரணயின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் வஹாப் முகம்மெட் எப்இஸட் செண்ட். பெர்ஹாட் மற்றும் பெர்ணான்டஸ், குவான் எங் மற்றும் டான் ஆகியோருக்கு முறையே ரிம150,000 மற்றும் ரிம100,000 இழப்பீடும், வழக்கு செலவுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரிம35,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்ணான்டஸ் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து தமது வழக்குரைஞருடன் விவாதிக்கப் போவதாக கூறினார்.