பெந்தோங்கில் கிட் சியாங்: வரட்டும், கவலையில்லை என்கிறார் லியோ

 

டிஎபியின் மூத்த தலைவரும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் அடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் போட்டியிடும் நோக்கம் கொண்டிருப்பது உண்மையானால், அவரை எதிர்கொள்ள தயார் என்கிறார் மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய்.

மக்கள் பிரதிநிதியாக 1999 ஆம் ஆண்டிலிருந்து பெந்தோங் தொகுதியில் சிறப்பான சேவையாற்றி இருப்பதால் மக்களின் தொடர்ந்த ஆதரவில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக லியோ கூறினார்.

கிட் சியாங் இடம் விட்டு இடம் தாவுவதில் விருப்பமுள்ளவர். முதலில் பினாங்கு, பின்னர் கெலாங் பாத்தா. எதுவுமே நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்கவில்லை, ஏனென்றால் அவர் நல்ல சேவை வழங்கவில்லை. அதனால் எங்களுக்கு அவர் எங்கே போகிறார் என்பது பற்றிய கவலை இல்லை. அவர் இங்கு வருவது பற்றி கவலை இல்லை என்றார் லியோ.

“நாங்கள் அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்”, என்று பெந்தோங், ஜாலான் டிராஸ், பத்து 1 அடுக்ககத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் லியோ செய்தியாளர்களிடம் கூறினார்.

கிட் சியாங் வெற்றி பெற்ற இடங்களில் மக்களின் பிரதிநிதியாக இருப்பதில் மட்டும் அவர் தோல்வி அடையவில்லை, அவருக்கு அரசியலில் ஓர் உறுதியான நிலைப்பாடுகூட இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

மக்களும்கூட அவரைப் பற்றி குழப்பம் அடைந்துள்ளனர். 22 ஆண்டுகளுக்கும் மேலாக மகாதிர் மீது கிட் சியாங் கடும் கோபம் கொண்டிருந்தார். இப்போது அவரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார், மற்றும் மகாதிராலும்கூட எப்படி அவ்வாறு செய்ய முடிகிறது என்று கேள்வி எழுப்பிய லியோ, இது மக்களின் ஆதரவைப்பெற அவர்கள் போடும் நாடகம்; அவர்களின் முந்தைய தோற்றங்களை சுத்தப்படுத்திக்கொள்ள அவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்கின்றனர் என்று லியோ மேலும் கூறினார்.