அசிம் வாங்க RM50 கோடி, பயன் RM1க்கும் குறைவு – அவமானமாகவுள்ளது! – கா. ஆறுமுகம்

மலேசிய இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் வழி கீழ்மட்டத்தில் குறைந்த   வருமானத்தில் வாழ்கின்ற இந்தியர்கள் பயன் பெற நமது அரசாங்கம் 50 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதற்கு வட்டி கிடையாது . இதை வங்கிகள் மூலம் விண்ணப்பம்  செய்து அசிம் என்ற Amanah Saham 1 Malaysia என்ற பங்குகளை வாங்கலாம்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தாக்கல் செய்ததை தற்போது உடனடியாக அமுலாக்கத்திற்கு கொண்டு வந்தது பராட்டத்தக்கது. அதற்கு காரணம் பொதுத் தேர்தல் நெருங்கி விட்டதுதான் என்பதையும் மக்கள் உணர்வர். ஆனால் இதில் அவமானமும் அடங்கியுள்ளது.

2009 –ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பங்குகளில் பூமிபுத்ராக்கள் ஆர்வம் கொள்ளவில்லை. இதில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் சுமார் ரிம200 கோடி ஒதுக்கப்படாமல் இருந்தாக 2013-இல் வெளியான அறிக்கைகள் கூறின.

இந்தியர்களிடையே 227,600 குடுபங்கள் கீழ்மட்ட 40% இல் வாழ்கின்றனர் என்று  பெருந்திட்ட அறிக்கை கூறுகிறது. அதில் 100,000 குடும்பங்கள் மட்டும்தான் இந்த அசிம் பங்கு திட்டத்தில் பங்கி பெற இயலும். இது சார்பாக கருத்துரைத்த மஇகா தலைவரும் அமைச்சருமான டத்தோ சிறி சுப்ரமணியம், இந்த திட்டம் 400,000 இந்தியர்களுக்கு பயன் அளிக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும் விளக்கமளிக்கையில், இதன் வழி விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலேசியர் என்ற ஒரு தகுதி போதும், வேலையில்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்பவர்களின் பங்குகளை வங்கிகள்தான் வைத்திருக்கும். அதன் வழி கிடைக்கும் இலாப ஈவுகளை கொண்டு கடன் கட்டப்படும். முழுமையாக கடன் கட்டி முடித்தவுடன் பங்குகள் கையில் கிடைக்கும் என்றார் சுப்ரமணியம்.

அசிம் பங்குகளை 2009 –இல், பிரதமராக பொறுப்பேற்ற தனது 100-வது நாளன்று பிரதமர் டத்தோ சிறி நஜிப் அவர்கள் தொடக்கி வைத்தார்.  கடந்த ஆண்டு 6% இலாப ஈவாக வழங்கியது. 2010 முதல் 2017-க்குமான இலாப ஈவுகளில் அதிகமானது 6.7% அது 2013 தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டது. மிகவும் குறைவானது 2017-இல் 6% வழங்கப்பட்டது. இதன் சராசரி இலாப ஈவு 6.41%  ஆகும் (அட்டவணையில் காண்க).

அசிம் பங்குகளை பெரும் ஒரு குடும்பத்தினர், ரிம5,000 –ஐ கடனாக பெறுகிறார்கள். இலாப ஈவு சராசரி 6.5% (கடந்த 8 ஆண்டுகளில் அதன் சராசரி 6.41 மட்டுமே) என்று எடுத்துக்கொண்டால், அதன் வழி ஒரு வருடத்திற்கு கிடைக்கும் பணம் ரிம325 ஆகும். இதை வங்கி வைத்து கொண்டு கொடுத்த ரிம5,000-க்கான கடனில் கழித்து விடும். இப்படியாக முதலீடு செய்த ரிம5,000-ஐ இலாப ஈவு வழியாக கட்டுவதற்கு 15.38 வருடங்கள் ஆகும். அதாவது 5,615 நாட்கள் ஆகும். அதன் பிறகுதான் அந்த ரிம5,000 –ஐ அந்த குடும்பத்தினர் பெற இயலும்.

பிரதமர் அறிவித்த அசிம் பணமான ரிம5,000 என்பது 5,615 நாட்களுக்கு பின்புதான் கையில் கிடைக்கும். அதாவது இதன் வழி ஒரு குடும்பம் அடையும் பயன் நாள் ஒன்றுக்கு என கணக்கிட்டால் வெறும் 89 காசுதான். அந்த குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஆள் ஒன்றுக்கு 22 காசு கிடைக்கும்.

கடந்த ஆண்டு விலைவாசிகளின் ஏற்றம் அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் பணவீக்கமாகும். கடந்த ஆண்டி அது 3.7% மாகும். இப்படி விலைவாசி ஏற்றம் கண்டு வரும் சூழலில், அசிம் பங்கு முதலீட்டால் நாள் ஒன்றுக்கு 22 காசு என்ற வகையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ஒரு சொற்பமான ரிம5,000 எவ்வகையில் ஏழ்மை இந்தியர்களை மேம்படுத்தும்?

இது ஒரு திட்டம் என்பதை கேட்கவே அவமானமாக உள்ளது. நமது நிலைமை இந்த அளவுக்கு கீழ்மையான நிலையில் அனுமாணிக்கப்பட்டுள்ளதை எண்ணி நமது தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து கைதட்டி ஆரவாரம் செய்து நமது காதுகளில் பூ சுத்துவதுக்கு காரணம் அறியாமையா அல்லது நாம் எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தாழ்ந்து விட்டோமா?