ஏப்ரல் பிற்பகுதியில் பொதுத் தேர்தல்!

‘ஞாயிறு’ நக்கீரன் -நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் ஏப்ரல் மாத பிற்பகுதியில் நடைபெறக் கூடும் என்று புத்ராஜெயா வட்டார புதுத் தகவல் தெரிவிக்கிறது.

தேசிய முன்னணி தலைமை யும் அதன் கைப்பாவையான தேர்தல் ஆணையமும் கடந்த 13-அவது பொதுத் தேர்தலைப் போலவே இந்தப் பொதுத் தேர்தலையும் இப்போது நடத்தலாமா அல்லது சற்று தள்ளி நடத்தலாமா என்று மதில் மேல் பூனையைப் போல தடுமாறிக் கொண்டு உள்ளன.

வரும் மே திங்கள் 4-ஆம் நாள்,  கடந்த தேர்தல் நடைபெற்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தாலும், 2013 ஜூன் திங்கள் நடுப் பகுதியில்தான் பதின்மூன்றாவது நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடியது. அதிலிருந்து கணக்கிட்டால், தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுள் ஜூன் மாத மையப் பகுதி வரை தொடர்கிறது.

அந்த நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்றால், நோன்பு மாதம் குறுக்கே வந்து நிற்கிறது. மேத் திங்கள் மையப் பகுதியில் நோன்பு தொடங்கி ஜூன் மாத நடுப் பகுதியில் நோன்புத் திருநாளை கொண்டாட வேண்டிய நிலையில் நாடு இருப்பதால், அந்தக் காலக்கட்டம் தேர்தலுக்கு உகந்தது அல்ல;

அதேவேளை, நாடாளுமன்ற ஆயுட்காலம் முடிவு பெறும் ஜூன் மாத நடுப் பகுதியில் இருந்து அறுபது நாட்களுக்குள் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என்ற வசதி இருந்தாலும், அங்கேயும் அன்வார் விடுதலை என்னும் சூழல் வந்து சூழ்ந்து கொள்ளும் என்பதால் தேசிய முன்னணி அரசு கையறு நிலையில் உள்ளது.

இல்லாவிடில், மிகவும் சாவகாசமாக ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில்கூட 14-ஆவது பொதுத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஜூன் மாத பிற்பகுதியில் அன்வாரின் சிறைவாசம்  முடிவு காண இருப்பதால், அவர் தேர்தலில் உடனே களம் காணா விட்டாலும் வாக்காளர்களை நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் வெகுவாக திருப்பக் கூடும் என்ற சூழலைக் கண்டு தேசிய முன்னணி அரசு சிந்தனையை கசக்கிக் கொண்டிருக்கிறது.

தேர்தலை எவ்வளவு காலம் தள்ளிப் போட முடியுமோ அவ்வளவு காலம் தள்ளி நடத்திக் கொள்ளலாம் என்னும் வசதியை, அன்வாரின் விடுதலை முறியடிக்கும் என்பதால் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் தேசிய முன்னணி தலைமை, ஏப்ரல் மாத பிற்பகுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுள்ளது.

மே மாதத்தில் நோன்பு தொடங்குகிறது.  ஜூன் மாதத்தில் நோன்புப் பெருநாளைக் கொண்டாட விருக்கும் அதேவேளை, அன்வாரின் விடுதலையும் இடம்பெறக் கூடும் என்பதால் ஏப்ரல் மாதத்தில் அநேகமாக அடுத்தப் பொதுத் தேர்தலை நடத்தி முடித்திட புத்ரா ஜெயா முடிவெடுத்து விட்டதாகவேத் தெரிகிறது.

ஒருவேளை, 2013-ஐப் போலவே, இந்த ஆண்டிலும் மே திங்கள் 5-ஆம் நாள் சனிக்கிழமை பொதுத் தேர்தல் இடம்பெற்றாலும் வியப்பதிற்கில்லை. எது எப்படி ஆயினும், அடுத்த (மார்ச்) மாதம் பிற்பகுதியில் நாடாளுமன்றம் களைக்கப் படலாம்; ஒருகால் சற்று தள்ளிப் போனாலும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு அதே மாதக் கடைசியிலோ அல்லது மேத் திங்கள் முதல் வாரத்திலோ பொதுத் தேர்தல் உறுதி என்பதுதான் புத்ராஜெயா சொல்லும் புதுச் செய்தி.