எம்.ஏ.சி.சி. : மலேசியாவின் ஊழல் குறியீடு அதிர்ச்சி தருகிறது

இன்று, மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்ட ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா மோசமான தரநிலையில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கூறியுள்ளது.

எம்.ஏ.சி.சி. மேற்கொண்ட ஆக்கிரோஷ நடவடிக்கை மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மலேசியா ஒரு சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையாளர் சுல்கிப்ளி அஹ்மாட் கூறினார்.

“என்னைப் பொறுத்தவரையில், நாட்டில் உண்மை நிலையும், எம்.ஏ.சி.சி. மேற்கொண்ட  நடவடிக்கைகளின் படி பார்த்தால், 2016 ஊழல் குறியீட்டைக் காட்டிலும் இம்முறை சிறப்பான தரநிலையையேக் காட்டியிருக்க வேண்டும்.

“அது என்னுடைய கணிப்பு, ஆனால் எந்த தரநிலையில் இருந்திருக்க வேண்டும் என்று என்னால் கூற முடியாது.

“அதனால்தான், இந்த அறிக்கையால் நான் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறுகிறேன், ஏனெனில் அது 2017-ல் நாம் நடைமுறைப்படுத்திய செயல் திட்டங்கள், தடுப்பு மற்றும் கல்விக்கு ஏற்ப இல்லை,” என்று சுல்கிப்ளி இன்று கோலாலம்பூரில் எம்.ஏ.சி.சி. அகாடமியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“நாம் அந்தக் குறியீட்டை நிராகரிக்கவில்லை, ஆனால் சில ஆய்வுகளைச் செய்வோம்,” என்று அவர் விளக்கினார்.

“மலேசியா இந்தத் தரநிலையில் இருப்பதற்குக் காரணமான கூறுகள் என்னென்ன என்று எம்.ஏ.சி.சி. ஆய்வுகள் மேற்கொள்ளும்,” என்றார்.

அதேவேளை, மலேசியாவின் இந்த நிலைப்பாடு வெறுமனே ஊழல் பிரச்சினைகளால் ஏற்பட்டது அல்ல என்று சுல்கிப்ளி விளக்கினார்.

மனிதாபிமான பிரச்சினைகள், அரசியல் சூழல்கள் மற்றும் வணிகத் தொடர்பான விஷயங்களும் மலேசியாவின் இந்தத் தரநிலைக்குக் காரணம் என்றார் அவர்.