ஊழல் குறியீடு: மலேசியாவின் மோசமான தரநிலைக்கு 1எம்டிபி, ஃபெல்டா ஊழல்கள் காரணம்

மலேசியா 2017 ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மோசமான தரநிலையில் இருப்பதற்கான சில காரணங்களை மலேசிய சர்வதேச வெளிப்படைத்தன்மை (தி.ஐ.-எம்) அமைப்பு வெளியிட்டுள்ளது.

தி.ஐ.-எம் தலைவர், அக்பார் சத்தாரின் கூற்றுபடி, 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். வழக்கு, ரிம 2.6 பில்லியன் நன்கொடை, ஃபெல்டா ஊழல் மற்றும் சபா நீர் பிரச்சனையோடு, பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லிக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு போன்றவையும் அதற்கான காரணங்கள் என்று கூறினார்.

“(இந்த வழக்குகள்) நாட்டில் உள்ள அமைப்பு முறைக்கு எதிரான பொது நம்பிக்கை, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகங்களின் நம்பிக்கை இழப்புக்கு உதாரணங்களாக உள்ளன.

“மேலும், நாட்டில் ஊழல் சூழ்நிலை மற்றும் அரசியல் நிலைமை போன்றவையும் சிபிஐ குறியீடு தரநிலையை நிர்ணயிக்கின்றன,” என்று இன்று கோலாலம்பூரில் ஊழல் குறியீடு அறிக்கை வெளியீட்டின் போது அவர் தெரிவிதார்.

2016-ம் ஆண்டைவிட, 2017-ல் மலேசியா ஊழல் குறியீட்டு அட்டவணையில் மோசமான தரநிலையில் உள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) ஊழல் வழக்குகளை விசாரணை செய்வது மற்றும் கைது செய்வது போன்ற தீவிர நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தால், இந்த ஆண்டு மலேசியாவின் நிலைப்பாடு இன்னும் மோசமாக இருக்கும் என அக்பார் கூறினார்.

2012 முதல் 2014 வரை, சிறப்பாக இருந்த மலேசியாவின் தரநிலை, 2015 முதல் சரியத் தொடங்கியது. இதற்கு முக்கியக் காரணம் 1எம்டிபி பிரச்சனை, அதற்கு முறையாக தீர்வு காணப்படாதது சிக்கலை மேலும் மோசமாக்கியது.

பொது நிதியைக் களவாடிய நபர்கள், தண்டனையில் இருந்து தப்பிவிட்டனர் என்ற கருத்து எழுந்தது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட, உயர்மட்ட வழக்குகள் அதிகரிப்பு மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய ஊழல் வழக்குகளால் நாடு நேர்மை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், எம்.ஏ.சி.சி. கைது செய்த 2,000 பேரில் 54 விழுக்காட்டினர் 20-க்கும்  40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

“இதற்கான முக்கியக் காரணத்தை நாம் தேட வேண்டியுள்ளது. கல்வி, பள்ளி முறைமை, பொருளாதாரம் அல்லது நாட்டின் தலைமைத்துவம் எது காரணம்? நமக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.