நாற்காலி பகிர்வில் பினாங்கு ஹராப்பான் தோல்வி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆறு சட்டமன்ற இடங்கள் பகிர்வில் தோல்வி கண்டதை அடுத்து, பினாங்கு ஹராப்பான் கூட்டணியின் 3 கட்சிகள் அதற்கான முடிவை தலைமை மன்றத்திடம் ஒப்படைத்தன.

பினாங்கில் 40 சட்டமன்றங்கள் உள்ளன. தற்போது டிஏபி 19 இடங்கள், பிகேஆர் 10, அம்னோ 10 மற்றும் பாஸ் 1 என வைத்துள்ளன.

இப்பிரச்சனையில் டிஏபி ஈடுபடவில்லை, காரணம் அதற்கு நிலையான இட ஒதுக்கீடுகள் உள்ளன. கடந்த 2008 மற்றும் 2013-ல், டிஏபி பினாங்கில் 19 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களையும் டிஏபி வென்றுள்ளது.

இன்னும் முடிவெடுக்கப்படாதா அந்த 6 நாற்காலிகள், பெரும்பாலும் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் இடங்கள், அவ்விடங்களுக்கு பிகேஆர், அமானா மற்றும் பெர்சத்து மூன்றும் குறிவைத்துள்ளன.

ஜிஇ13-ல், அவ்விடங்களில் பிகேஆர் போட்டியிட்டு தோல்வி கண்டது. பினாங்கில், பிகேஆர் போட்டியிட்ட 16 இடங்களில், 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

பெர்த்தாம், சுங்கை டுவா, தெலுக் ஆயேர் தாவார், சுங்கை ஆச்சே, புலாவ் பெதோங் மற்றும் தெலுக் பஹாங் ஆகிய அந்த 6 நாற்காலிகள் பகிர்வில் முடிவெடுக்க முடியாமல் போனதால், தற்போது முடிவெடுக்கும் உரிமை தலைமை மன்றத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

“முடிவை ஹராப்பான் தலைமை மன்றம் அறிவிக்கும். பெர்சத்து மற்றும் அமானாவுடன் நாற்காலிகளைப் பகிர்ந்துகொள்ள பிகேஆர் தயாராக இருக்கிறது,” என செப்ராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அரிஃப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“இருப்பினும், நாங்கள் அடிப்படை வேலைகள் செய்துள்ள சில இடங்களில் போட்டியிட விரும்புகிறோம், இம்முறை இன்னும் அதிகமான இடங்களை வெல்ல முடியும் எனும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,  மும்முனை போட்டியாகக் கூட அது இருக்கலாம், நாங்கள் போராடுவோம்,” என அரிஃப் கூறினார்.

அதேவேளையில், இதற்கு முன்னர் பாஸ் போட்டியிட்ட 5 இடங்களில், அமானா தனது வேட்பாளர்களை நிறுத்த விரும்புவதாக, அமானா மாநில ஆணையர் முஜாஹிட் யூசோப் ராவா தெரிவித்துள்ளார்.

அந்த இடங்களில் சில வேலைகள் செய்துள்ளதால், வாக்காளர்கள் தங்களை ஆதரிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

அம்னோ போட்டியிடும் அனைத்து இடங்களிலும்,  தனது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என, பெர்சத்து கோரியதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.