‘நாட்டைக் காப்பாற்ற பாஸ்-க்கு உதவுங்கள்’, ஹாடி சீனர்களைக் கேட்டுக்கொண்டார்

மலேசியாவை வழிநடத்த, பாஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைக்குமாறு, சீன சமூகத்தைப் பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங் கேட்டுக்கொண்டார்.

கோலா திரெங்கானுவில், நேற்று, சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட அவர் ஜிஇ14-ல் வெற்றிபெற்று, நாட்டை வழிநடத்த பாஸ் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

“ஜிஇ14-ல், பாஸ் 130 நாடாளுமன்றங்களில் போட்டியிட உள்ளது, நாட்டை வழிநடத்த நமக்கு (பாஸ்) 112 நாற்காலிகள் தேவை. 112 இடங்களை வென்றுவிட்டால், பாஸ் நாட்டை ஆட்சி செய்யலாம்.

“ஆக, பாஸ் மீது நம்பிக்கை வைக்குமாறு நாங்கள் சீன சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம், திரெங்கானுவில் மட்டுமல்ல, மலேசியா முழுக்க,” என்று அவர் சீனர்களை வலியுறுத்தியதாக ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசியலில் நாம் வாதிடலாம், ஆனால் போராட முடியாது, சண்டையிட முடியாது. கருத்து மோதல்கள் இருக்கலாம், ஆனால் அது சண்டையாகக் கூடாது. ஆக, பாஸ் சண்டையை ஏற்படுத்தும் காரணங்களைத் தடுக்க முயலும்.

“உண்மையில் இஸ்லாம், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மலாய் கம்பங்களில் எப்படி வாழ முடியும் என்பதை இஸ்லாமியர்களுக்குப் போதிக்கின்றது.

“1969-ல் நடந்த மே 13 சம்பவம், திரெங்கானு, கிளாந்தான், கெடாவில் நடக்கவில்லை. ஆனால், பினாங்கிலும் சிங்கப்பூரிலும் அந்த இனக்கலவரம் நடந்தது.

“இஸ்லாத்தை உண்மையில் பின்பற்றும் இடங்களில் எந்தவொரு குழப்பமும், கலவரமும் ஏற்படவில்லை,” என்றார் அவர்.