மகாதிர்: நான் உள்ளூர் அரிசி மட்டுமே சாப்பிடுகிறேன்

 

தாம் அரிசி (சோறு) சாப்பிடுவதிலிருந்து மாறி விட்டதாகவும் அதற்கு மாற்றாக தென்அமெரிக்காவிலிருந்து வரும் கென்வா (சீமை திணை என்று கூறப்படும்) சாப்பிடுவதாக பிரதமர் நஜிப் கூறியிருந்ததற்கு பதிலடி கொடுத்த பாக்கத்தன் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர், தாம் உள்ளூர் அரிசி மட்டுமே சாப்பிடுவதாக கூறினார்.

நேற்று, பாங்கி மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பல்ஜெட் 2018 நேரடி கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நஜிப், தாம் உணவை விரும்புகிறவர், ஆனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, தமது மகன் அறிமுகப்படுத்திய கென்வாவை சாப்பிடுவதாக கூறினார்.

கென்வா தென்அமெரிக்க நாடான பெருவிலிருந்து வருகிறது. அதை அந்நாட்டு இங்கா மக்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிட்டனர். அது அரிசையைவிடச் சிறந்தது என்று நஜிப் விளக்கம் அளித்தார்.

கென்வாவுக்குச் சமமான ஒன்றை இந்நாட்டில் பயிரிட முடியுமா என்று தெரிந்துள்ள தாம் முயலுவதாக நஜிப் மேலும் கூறினார்.

நஜிப் கூறியிருந்த கருத்தை டிஎபியின் செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கண்டித்ததோடு, இம்மாதிரியான தேசியத் தலைவர் மலேசிய மக்கள் எதிர்கொண்டுள்ள துன்பம் தாங்கொண்ணா நிலையை அறியாமலிருக்கிறார் என்றார்.

அரிசிக்கு பதிலாக கென்வாவை சாதாரண மக்கள் மாற்றிக்கொள்ள முடியும் என்றால், மலேசியாவின் வருமான அளவு அதிக-வருமானம் பெறும் நாடுகளைவிட கூடுதலால இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லையே என்றாரவர்.