‘இந்தியர்களுக்கு ம.இ.கா. என்ன செய்தது என சிவராஜ் கேட்க வேண்டும்’

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் இந்திய சமூகத்தை ஓரங்கட்டிவிட்டார் என குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர், இந்தியச் சமூகத்துக்கு ம.இ.கா. என்ன செய்தது என்பதைப் பற்றி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜ் கேள்வி எழுப்ப வேண்டும்.

சி.சிவராஜ்ஜை சிறு பையன் என சித்தரித்த, சுங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன், ஓர் அறிக்கையை வெளியிடும் முன்னர், அந்த ம.இ.கா. தலைவர் வரலாற்றையும் உண்மை நிலையையும் அறிய வேண்டும் என்றார்.

“மகாதிர் காலத்தில் மஇகா புகழ்பெற்று விளங்கியது, இந்தியர்களைக் கவனித்துக்கொள்வதற்கான பொறுப்பு அக்கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

“மகாதிர் பதவியிலிருந்து விலகியப் பின்னரும், இந்தியர்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் மகாதிரா? அல்லது ம.இ.கா.வா?” என மலேசியாகினி தொடர்பு கொண்டபோது சிவநேசன் கேள்வி எழுப்பினார்.

மகாதிர் பிரதமர் பதவிக்கு மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதில், கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியர்களை வலியுறுத்தியுள்ள சிவராஜ்ஜின் அறிக்கை குறித்து சிவநேசன் இவ்வாறு கருத்துரைத்தார்.

மகாதிர் காலத்தின்போது, இந்தியச் சமூகம் உயர்ந்த பதவிகளை வகிப்பதும், கௌரவிக்கப்படுவதும் மிகக் கடினமாக இருந்தது, இப்போது போல் அல்ல என்று அவர் சொன்னார்.

தற்போது, ஏ.தெய்வீகன் பினாங்கு மாநிலப் போலிஸ் தலைவராகவும், சுப்ரமணியம் துளசி சுங்கத்துறை தலைமை இயக்குநராகவும், நரேந்தர் சிங் சிறைச்சாலை ஆணையராகவும், அமர் சிங் புக்கிட் அமான் வர்த்தகக் குற்ற விசாரணை ஆணையத்தின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மில்லியனர்களும் பில்லியனர்களும்

“நாட்டின் சுமார் 1.6 மில்லியன் பொது ஊழியர்களில், இந்தியர்கள் மொத்த மக்கள் தொகையில். ஏழு விழுக்காட்டினரே உள்ளனர்.

“சிவராஜ் எப்படி இந்த மூன்று அல்லது நான்கு உதாரணங்களை மட்டும் முன்வைத்து, அதை உண்மையாகக் கருதுகிரார்?” என அவர் கேட்டார்.

எனவே, மஇகா இளைஞர் தலைவரை ஆதாரமற்ற அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, இந்த விஷயத்தை முழுமையாக கவனிக்கும்படி சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

மகாதிர் காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டில் இந்தியர்களை ஓரங்கட்டும் நிலை தொடங்கிவிட்டது, ஆனால் மலேசிய இந்தியர்களில் சில மில்லியனர்கள் மகாதிர் காலத்தின் போதே உறுவானார்கள்.

“நம்மிடம் டி.ஆனந்த கிருஸ்ணன், ஜி.ஞானலிங்கம் போன்ற மில்லியனர்களும் பில்லியனர்களும் மகாதிர் காலத்திலேயே தோன்றினர். ஆனால், இப்போது நம்மிடம் என்ன இருக்கிறது?

“அந்த நான்கு அரசு ஊழியர்கள் பற்றிய சிவராஜின் அறிக்கை சரியானதாக இருந்தாலும் கூட, அவர்கள் தொடர்ந்து என்ன செய்ய உள்ளனர்? அவர்கள் அதிகமான இந்தியர்களைத் தங்கள் துறைகளுக்குக் கொண்டு வர முடியுமா?” என சிவநேசன் மேலும் கேட்டார்.

பி.என்.-ஐ வீழ்த்தி, பக்காத்தான் ஹராப்பான் அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே இந்தியர்கள் ஓரங்கட்டல் நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.