நஜிப்: பிரிம் வாக்குகளுக்காகக் கொடுக்கப்படும் விலையல்ல

வாக்குகளுக்கு  விலையாகத்தான்   பிரிம்  கொடுக்கப்படுகிறது   என்பது  உள்பட   எதிர்க்கட்சியினர்  பல்வேறு    குற்றச்சாட்டுகளைச்  சுமத்தும்    வேளையில்,   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்   பிரிம்  உதவித்   தொகை  வழங்கப்படுவதற்கான   உண்மையான  காரணத்தை       இன்று  எடுத்துரைத்தார்.

பிரிம்  உதவித்   தொகை   பெறும்   சுமார்  ஈராயிரம்   பேரடங்கிய   கூட்டத்தில்   பேசிய   அவர்,  அது  மக்களில்   குறிப்பிட்ட   பகுதியினர்    பயனுறுவதற்காக   பேங்க்  நெகாராவால்  பரிந்துரைக்கப்பட்ட   ஒரு   திட்டம்  என்றார்.

பொருள்களுக்கு  நிதியுதவி   செய்வதை   விட  இது   நல்லது.  நிதியுதவி  பெறும்  பொருள்களை  எல்லைகளில்   விற்றுவிடுவார்கள்.

இரண்டாவதாக,  நிதியுதவி  பெற்ற  பொருள்களால்   நன்மை   அடைவோர்   எண்ணிக்கையும்  குறைந்து   வருகிறது.   உதாரணத்துக்கு   ரோன்95  பெட்ரோல்.  அதனால்  புரோட்டோன்  சாகா,  மைவி   கார்கள்  வைத்திருப்போரைவிட    பெரிய   கார்களை  வைத்திருப்பவர்களே   அதிக  நன்மை  அடைகிறார்கள்  என  பெக்கானில்  தேசிய    அளவில்    பிரிம்  உதவித்  தொகை  கொடுக்கும்  நிகழ்வைத்  தொடக்கிவைத்தபோது   பிரதமர்  கூறினார்.

அதனால்தான்  பிரிம்  தொகையை  மக்களுக்குக்  கொடுப்பது    என்று   அரசாங்கக்  கொள்கையில்   ஒரு  மாற்றத்தைச்  செய்ய   வேண்டியிருந்ததாக  நிதி   அமைச்சருமான   நஜிப்   சொன்னார்.

பிரிம் 2010இல்   அறிமுகம்   செய்யப்பட்டு   4.1 மில்லியன்  பேருக்கு   ஆளுக்கு  ரிம500  கொடுக்கப்பட்டது.  பின்னர்  அதுவே   2016-இல்  ரிம1,000  ஆகவும்   2017-இல்  ரிம1,200  ஆகவும்  உயர்த்தப்பட்டது.

“ஐந்தாண்டுகளுக்குமுன்   எங்கள்  தேர்தல்   கொள்கை    அறிக்கையில்  பிரிமை  ரிம1,200ஆக  உயர்த்துவோம்   என்று  வாக்குறுதி   அளித்தோம் , அதை  நிறைவேற்றி  விட்டோம். நிறைவேற்ற  முடியாத   வாக்குறுதிகளை   நாங்கள்  கொடுப்பதில்லை.

“கொள்கை   அறிக்கையைத்   திருத்தப்போவதாக   நான்  ஒருபோதும்    அறிக்கை   விட  மாட்டேன்.  ஆனால்,  சிலர்    அறிக்கை  விடுக்கிறார்கள்……..கொள்கை   அறிக்கையில்   60  விழுக்காட்டைத்   திருத்தப்போவதாக.  நிறைவேற்ற  முடியாத   வாக்குறுதிகளைக்  கொண்ட   கொள்கை    அறிக்கையால்    என்ன  பயன்?”,  என்றவர்   வினவினார்.

பிரிம்  நாட்டின்  பொருளாதார  வளர்ச்சிக்குத்  தூண்டுதலாக  அமைகிறது    என்று  நஜிப்  குறிப்பிட்டார்.

“பிரிமை  வைத்து   அரிசி,  சீனி,  பால்,   பள்ளிச்  சீருடை   போன்ற  முக்கிய  பொருள்களை   வாங்குகிறோம்……இது  உள்நாட்டுப்  பொருளாதாரத்தை  ஊக்குவிக்கிறது”,  என்றார்.