சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க, தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்!

மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நிலைத்திருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆற்றி வந்த அரும்பணியாகும். காலனித்துவ காலம் தொட்டு ஆசிரியர் பணியை ஒரு தொண்டாகக் கருதி இந்த நாட்டில் தமிழ்மொழி வளர பெரும்பணி ஆற்றியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.

அவர்களின் சுவடுகளில் வளர்ந்த இன்றையத் தலைமை ஆசிரியர்களில் சிலர் தமிழ்வழிக் கல்வியின் மீது நம்பிக்கையற்ற நிலையில் இருமொழித் திட்டம் என்ற ஒன்றை ஆதரிப்பது வருந்தத்தக்கது என்கிறார்கள் தமிழ் எங்கள் உயிர் குழுவினர்.

இருமொழித் திட்டம் நமது தமிழ்வழிக் கல்வி நிலையை அழித்துவிடும் என்பதை உணர மறுக்கும் இவர்கள், ஆங்கிலமொழியில் அறிவியல், கணிதம் கற்பதால் குழந்தைகளின் அறிவுத்திறன் கூடும் என நம்புகிறார்கள்.

உலக அளவிலும் நமது நாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், ஆரம்பக் கல்வியில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் கருத்துணர்வு சார்பாக உள்ளதால் அவற்றின் கற்றல் கற்பித்தலை குழந்தைகளுக்கு அறிந்த, புரிந்த மொழிகளில்தான் சிறப்பாக நடத்த முடியும் என்பதை காட்டுகின்றன.

அதோடு, கடந்த காலங்களில் தமிழ்வழி அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களை பயின்ற நமது மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேசியத் தேர்ச்சி அளவைவிட அதிகமாக இருந்து வந்துள்ளதை இவர்கள் மறந்து விட்டனர்.

ஆங்கிலம் அனைத்துல வாணிப மொழி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆங்கிலமொழி ஆற்றலை தமிழ்ப்பள்ளிகளில் அதிகப்படுத்த அரசாங்கம் அது சார்பாக எம்பிஎம்எம்பிஐ (MBMMBI) என்ற கொள்கை வழி ஆறு வகையான வியூகத் திட்டங்களை வைத்துள்ளனர்.

அவற்றை அரசாங்கம் அமுலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். அதை விடுத்து அறிவியல், கணிதம் போன்ற பாடங்களின் வழி ஆங்கிலத்தை போதிக்க முயல்வது தவறாகும்.

மலேசியாவில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு அடையாளமாக கட்டிக்காக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்வழிக் கல்வியைக் கட்டிக்காக்க தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும். அதை விடுத்து தமிழ்வழிக் கல்வியை மாற்றம் செய்யும் வகையில் உள்ள இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்ய இவர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது, சட்டத்தின் வழியாக கடப்பாடும் இல்லை, மற்றும் கல்வி அமைச்சும் அவர்களை வற்புறுத்தவில்லை.

2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்த அனைத்து 47 தமிழ்ப்பள்ளிகளுக்கும், சமூக இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள், முறையாக கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்துடன் மலேசியக் கல்வி அமைச்சின் துணை இயக்குனர் அவர்கள் வழங்கிய கடித நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அதன் சாரம் என்னவென்றால், இருமொழித் திட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது, பள்ளிகள் அதில் இருந்து வெளியாக தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என்பதாகும்.

மீண்டும் 2018-ஆம் ஆண்டு தொடங்கியவுடன், 40 பள்ளிகளில் இருமொழித் திட்டம் தொடரப்பட்டது. 2017-இல் அனுப்பப்பட்ட கடித்ததை புறக்கணித்ததால், 2018-இல் இந்தப் பள்ளிகளுக்கு வழக்கறிஞர் கடிதம் மீண்டும் அனுப்பும் சூழ்நிலை உருவானது வருந்ததக்கதாகும். தமிழ்வழிக் கல்வியை நமது பள்ளிகள் இழந்தால் அதன்வழியான பாதிப்புகளை பின்பு நிவர்த்தி செய்ய இயலாது. எனவேதான், இந்த 40 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மீதும் அவர்களின் பெயரிலேயே இந்த சட்ட நடவடிக்கையை எடுக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவானது என்கின்றனர் தமிழ் எங்கள் உயிர் குழுவினர்.

இந்தச் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டுமானால், அதற்கு தலைமையாசியர்கள்தான் முன்வர வேண்டும். அதைவிடுத்து, அவர்கள் பத்திரிக்கை செய்தி வழியும், மாற்று வழிகளையும் கடைபிடிக்க முற்படும் போது அவர்கள் தமிழ்ப்பள்ளியின் ஒரு தலைமையாசிரியர் என்ற வகையில் கொண்டுள்ள தார்மீக கடமையில் இருந்து விலகுவதோடு கல்விச் சட்டதிற்கு புறம்பாகவும் நடந்துகொள்கிறார்கள்.

வரலாற்றில் இது போன்ற சூழ்நிலை உருவாகும் போது, தமிழ்வழிக் கல்வியை பாதுகாக்கவும், தமிழ்மொழி நிலைபெறச்செய்யவும் வெகுசன மக்களின் உணர்வும் போராட்டமும் எழுச்சி பெருகிறது. தமிழ்ப்பள்ளிகள் தமிழ் சமூகத்தின் சொத்து என்பதும், தமிழ் அவர்களின் சுவாசம் என்பதும் உணர்வு நிலை வெளிப்பாடாகும்.

புத்ரா செயாவில் மே 19ஆம் தேதியன்று ஆர். பாலமுரளியின் ஒருங்கிணைப்பில் கூடிய பேரணி, சோகூர் முதல் புத்ரா செயா வரையில் தோழர்கள் தியாகுவும் அஞ்சதமிழனும் 350 கிலோமீட்டர் தூரம் கால்நடையாக ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டு மனு ஒன்றை பிரதமருக்கு வழங்கியது மற்றும் கலைமுகிலன் தலைமையில் நாம் தமிழர் இயக்கதினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் உட்பட  அரசாங்கதிடம் அமைதியான வகையில் இதுவரையில் நான்கு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழ்வழிக் கல்வியைக்  காக்க, தமிழ் ஆர்வலர்கள் பலர் பல இயக்கங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட வகையிலும் பல வகையான முனைப்புகளை முன்எடுப்பதை தங்களின் தார்மீக  கடமையாக  கருதுகிறார்கள்.

அவ்வகையில்தான் இந்தச் சட்ட நடவடிக்கையும் அமையும் என்கிறார்கள் தமிழ் எங்கள் உயிர் குழுவினர். இக்குழுவில் சி. தியாகு, தமிழிணியன், ஜெகா, நா. இராசரத்தினம், ஆர். பாலமுரளி, வ. கௌத்தம், இலா. சேகரன், இரா. பெருமாள், ஜீவி காத்தையா, சி. பசுபதி, , சுப்பையா, கா. உதயசூரியன், சிவா, தினகரன், சி. பெருமாள், சு. முத்தழகன், ஜெயசீலன், நாச்செல் அமைச்சியப்பன் உட்பட இன்னும் மாநில பிரதிநிதிகளும் உள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராக கா. ஆறுமுகமும் மருத்துவர் செ. செல்வமும் இருக்கின்றனர்.

இது சமுதாயத்தின் அடையாளமாக உள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு. இதற்கு தமிழ் ஆதரவாளர்கள் வரவேற்பும் ஆதரவும் நல்குமாறு, ‘தமிழ் எங்கள் உயிர்’ பணிக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.