உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய நீடிக்கும் தடை

சமீப நாட்களாக சிரிய உள்நாட்டுப் போரில் அரச படைகள் மற்றும் ரஷ்ய விமானப் படைகளின் தாக்குதலில் 700 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டுள்ள நிலையில்

அங்கு இதுவரை யுத்த நிறுத்தம் பூரணமாக அமுலாகவில்லை. மேலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஐ.நா இன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப் பட்டதால் 4 இலட்சம் பேர் கடும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். 6 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் கடந்த சில வாரங்களாக உக்கிரமடைந்துள்ளது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு சார்பாக அமெரிக்காவும் சிரிய அரச படைக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயற்பட்டு வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் இறுதிப் பகுதியான கிழக்கு கௌடாவில் கடந்த ஒரு வாரமாக சிரிய ரஷ்ய விமானப் படைகள் தொடுத்த வான் தாக்குதலில் தான் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளுடன் 500 இற்கும் அதிகமான பொது மக்களும் கொல்லப் பட்டுள்ளனர். இதில் குளோரின் இரசாயன வாயு பாவிக்கப் பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கிழக்கு கௌடா உட்பட சிரியாவில்  30 நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ள போதும் ரஷ்யா காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு நாளைக்கு 5 மணித்தியாலங்களுக்கே போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று நிபந்தனையிட்டுள்ளது. இந்நிலையில் இந்த குறிப்பிட்ட காலப் பகுதியிலும் யுத்த நிறுத்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப் படாததுடன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு அனுமதியும் மறுக்கப் படுவதால் இந்த 4 இலட்சம் மக்களும் மிக மோசமான துன்பத்தை அனுபவிக்க நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com