இருமொழிக் கொள்கையால் தமிழாசிரியர்களுக்கு பாதிப்பு – சரவணன்

ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 5 – “நம்முடைய தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்த முற்படுவது, எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழாசிரியகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இளைஞர்-விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோசிறி மு.சரவணன் குறிப்பிட்டார்.

ரவாங் சு.மகேஸ்வரியின் வெற்றியின் விழுதுகள் எ னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.

தலைநகரம், நேதாஜி அரங்கத்தில் மார்ச் 3-ஆம் நாள் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய சரவணன், தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றினால், இன்றைய சூழ்நிலையில் நமக்கு ஒன்றும் தெரியவில்லைதான். ஆனால், நாளை எதுவும் நடக்கலாம் அல்லவா என்பதைப் பற்றி இப்போதே சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்களை தமிழில் இன்றி ஆங்கிலமொழியில் கற்றுக் கொடுப்பதற்கு தமிழ் ஆசிரியர்கள்தான் தேவை என்றில்லை. ஆங்கிலம்  தெரிந்த எந்த ஆசிரியரும் கற்றுக் கொடுக்கலாம். அதனால், இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின், ஒரு சீன அல்லது ஒரு மலாய் ஆசிரியர் தமிழ்ப்பள்ளிக்கு கணிதம், அறிவியல் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் சூழ்நிலை வந்தால், நம்மால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது.

எனவே, தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தால், அது தமிழ் மாணவர்களின் மொழி அறிவை மட்டும் பாதிக்காது; கூடவே, தமிழ் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பிற்கும் வேட்டு வைக்கும். எனவே, இதைப் பற்றி எல்லாம் மகேஸ்வரியைப் போன்ற எழுத்தாளர்கள் அதிகமாக எழுத் வேண்டும்.

தலைப் பிரசவத்தைப் போல, தன்னுடைய இந்த முதல் நூலை மிகுந்த சிரமத்திற்கிடையே வெளியீடு செய்துள்ள மகேஸ்வரியைப் பாராட்டுவதாகவும் அந்த நிகழ்ச்சியில் சரவணன் பேசினார்.