2018 அனைத்துலக மகளிர் தினம் : பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர வேண்டும்

மலேசிய சோசலிசக் கட்சி –  ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துலக மகளிர் தினம், உலக மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெண்கள் கொண்டிருக்கும் சக்தியைக் கொண்டாடும் ஒரு மாபெரும் நாள்.

சமத்துவம், பாலினம் பொருட்படுத்தாத சமூக இடம் மற்றும் பெண் உரிமைகளுக்கான உத்தரவாதம் போன்ற அனைத்திற்குமான சமூகப் போராட்டங்களை, வெற்றிகரமாக மேற்கொண்ட பெண்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் வகையில் இந்நாளை நாம் கொண்டாடுகிறோம்.

இருப்பினும், பெண்களை ஒடுக்கும் ஆணாதிக்க அமைப்புகள், பாலின பாகுபாடுகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பலவிதமான ஒடுக்குமுறை வன்முறைகள் போன்றவை இன்றும் நம் மக்களிடையே நிரம்பியுள்ளதை நம்மால் மறுக்க இயலாது.

எனவே, இந்த உலக மகளிர் தினக் கொண்டாட்டம், பெண்களின் விடுதலை மற்றும் பாலின சமத்துவத்திற்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, இன்னும் அதிக முயற்சிகளுடன் அவற்றைத் தொடர வேண்டும் என்பதனையும் நமக்கு நினைவூட்டுகிறது.

உலக மகளிர் தின தோற்றம்

உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் தோற்றம் மிகவும் தீவிரமானது; சர்வதேச சோசலிச இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது என்பதை நம்மில் பலர் மறந்துவிட்டிருக்கலாம்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மார்க்சிச அரசியல் கொள்கையில் பிடிப்பு கொண்டிருந்த, ஜேர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.), சோசலிசப் பெண் தொழிலாளர் இயக்கங்களை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இடதுசாரி பெண் இயக்கத்தில் ஒரு முன்னோடியான, கிளாரா ஜெட்ஸ்கின் தலைமையில், பெண்கள் மட்டும் உறுப்பினராகக் கொண்ட ஒரு பிரிவை எஸ்.பி.டி. உருவாக்கியது.

பெண்களின் ஈடுபாடு இல்லாமல், வர்க்க அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் வெற்றியடைய முடியாது என்று கிளாரா ஜெட்கின் நம்பினார். ஜெட்கின் தலைமையில், 1907-ல் சுமார் 10,000 பேராக இருந்த எஸ்.பி.டி. உறுப்பினர் எண்ணிக்கை, 1913-ல் 150,000-க்கும் அதிகமாக உயர்ந்தது.

1909-ம் ஆண்டு, பிப்ரவரி 28-ல், ஓராண்டுக்கு முன்னர், ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் மேற்கொண்ட மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில், அமெரிக்க சோசலிசக் கட்சி, நியூயார்க்கில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாபெரும் பேரணிதான், மகளிர் தினக் கொண்டாட்டத்தின் முதல் நடவடிக்கை ஆகும். உழைக்கும் வர்க்கப் பெண்களின் சம்பள உயர்வு, பணியிட நிலைமைகளை மேம்படுத்துதல், வாக்களிக்கும் உரிமை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அப்பேரணி நடத்தப்பட்டது.

1910 ஆகஸ்ட்டில், டென்மார்க்கில் கோபன்ஹாகனில் முதல் சர்வதேச மகளிர் மாநாடு நடைபெற்றது, இடதுசாரிக் கட்சிகளின் சர்வதேச அமைப்பான ‘இரண்டாம் சர்வதேசம்’ அதனை ஏற்பாடு செய்திருந்தது. அம்மாநாட்டில், 17 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

ஜேர்மன் சோசலிசப் பிரதிநிதி லூயிஸ் ஸீட்ஸ், ஒவ்வொரு ஆண்டும் “சர்வதேச மகளிர் தினத்தை” ஏற்பாடு செய்வதற்கான ஒரு முன்மொழிவை முன்வைத்தார். ஜெட்கின் அதனை ஆதரித்தார். அதனைத் தொடர்ந்து, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரும் நோக்கத்துடன், அனைத்துலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இன்றையப் பெண்கள் நிலை

100 வருடங்களுக்கும் மேலான உலக மகளிர் தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர், ஆங்காங்கே நடந்த போராட்டங்கள், பாலினச் சமத்துவத்தை மக்களிடையே உணர்த்துவதில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இருப்பினும், பாலினப் பாகுபாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், பல்வேறு நிலைகளில், வடிவங்களில் இன்னும் எல்லா இடங்களிலும் நடக்கவே செய்கிறது.

அதற்குச் சான்றாக, நம் சிந்தனைக்கு சில உண்மைகள் :-

–    முழுநேர வேலை செய்யும் ஆண்களுடன் ஒப்பிடுகையில், முழுநேரம் வேலை செய்யும் பெண்களின் வருமானம் சராசரியாக 77% மட்டுமே.

–    ஆள் கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களுள் ஐவரில் நால்வர் பெண்கள்.

–    35% பெண்கள் பாலியல் வன்முறை அல்லது உடல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.

–    உலகில் கல்வியறிவு இல்லாத மக்கள் தொகையில் மூவரில் இருவர் பெண்கள் (500 மில்லியனுக்கும் அதிகமாக)

–    2017-ல், உலகெங்கிலும் நாட்டின் தலைவர்களாக அல்லது அரசாங்கத் தலைவர்களாக 15 பேர் (<10%) மட்டுமே உள்ளனர். உலக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 23% மட்டுமே பெண்கள். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில், 10% மட்டுமே பெண்கள்.

–    உலகின் முதல் 500 பெருநிறுவனங்களில், 4.8% பெண்கள் மட்டுமே, தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பதவிகளில் இருக்கிறார்கள்

பாலினம் மூலம் மக்களைப் பிரிக்கக்கூடிய ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இங்குப் பிரதான பிரச்சனையாக இருப்பது, ஆதாயங்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும், ஆணாதிக்க நிறுவனங்களின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும், முதலாளித்துவ அமைப்புமுறை ஆகும்.

ஆக, ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தையும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் பிரிக்க முடியாது. ஆணாதிக்கம் மற்றும் முதலாளித்துவத்திற்கு சவால்விடும் வகையில், அடக்குமுறை மற்றும் மிரட்டல்களில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள; பெண்கள், ஆண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நமது முயற்சிகள் தொடர வேண்டும்.