கமல் தத்து எடுத்த முதல் கிராமம் இதுதான்..

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ள கமல் சென்னையில் மகளிர்தின பொதுக்கூட்டத்தை நடத்தினார். ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கமல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மதுரையில் நடந்த கட்சியின் தொடக்கவிழா மாநாட்டில் பேசும்போது தமிழகம் முழுவதும் கிராமங்களை தத்தெடுக்கப்போவதாக அறிவித்தார்.

இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை கமல் தத்தெடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தத்தெடுக்கப்பட்டுள்ள முதல் கிராமம் இதுதான். நிலத்தடி நீர் சேமிப்பில் இந்த கிராமம் முன்னோடி கிராமமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தத்தெடுக்கும் கிராமங்களில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி அதிகத்தூர் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கமல் முடிவு செய்துள்ளார்.

இதற்காக விரைவில் கமல், அந்த கிராமத்துக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.

மகளிர் தின விழாவில் இந்த கிராமத்தை சேர்ந்த சுமதி கவுரவிக்கப்பட்டார். இவர் விவசாயத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருபவர். இவருடன் வயதான காலத்தில் பசி போக்கும் காந்திமதி, சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திருநங்கை தேவி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். இவர்களில் சுமதியை தவிர மற்ற 2 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திருச்சியில் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கமல் அறிவித்தார். விழா மேடையில் பேசிய கமல் கூறியதாவது:-

அண்ணாவின் கொள்கைகளில் நின்றுதான் இந்த ஆட்சி நடக்கிறது. ஆனால் கொள்கை தெரிந்தவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் இனி ஒதுங்கக் கூடாது. இனி, எங்கள் கட்சிக்கு வரவேண்டும். மக்கள் நலன் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும்.

அரசியலில் மாண்பை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு எனக்கு துணையாக இருங்கள். நான் விலை போகமாட்டேன். மக்கள் நீதி மய்யமும் விலை போகக் கூடாது. இப்படி ஒரு கட்சியை தொடங்காமல் பெரிய கட்சியில் சேர்ந்திருந்தால் மக்களாட்சி மலராது. அதனால்தான் துணிந்து இறங்கி உள்ளேன். கயவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன்.

என் அம்மாவே எனக்கு தலைவி. அவர் அளித்த தைரியத்தில்தான் இங்கே நிற்கிறேன். அவர் கொடுத்துச் சென்ற அன்பைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவரை மிஞ்சிய தலைவியை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் 3 கோடியே 60 லட்சம் பெண்கள் பிறக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர். இதற்கும் திருச்சியில் கொல்லப்பட்ட எனது சகோதரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இங்கு நீதி காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு கமல் பேசினார்.

-athirvu.com